ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்திய அணி நிம்மதிப் பெருமூச்சு

By செய்திப்பிரிவு

அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியை 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

365 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் என்று முடிவடைந்தது.

தொடக்கத்தில் பந்துவீச்சு சற்றே விலகலாக அமைந்தது. இறுதியில் யார்க்கர்களை வீசி பயிற்சி மேற்கொண்டனர். அஸ்வின், ஜடேஜா, ரெய்னா ஆகியோரும் சிறப்பாக வீசினர். ஆனாலும் ஆப்கானிஸ்தானை ஆல் அவுட் செய்ய முடியவில்லை என்பது ஒரு புறம் இருக்கவே செய்கிறது.

இலக்கைத் துரத்திய ஆப்கான் தொடக்க வீரர்களான ஜாவேத் அஹ்மதி (17), உஸ்மான் கனி (44) கொஞ்சம் விரைவு ரன் குவிப்பில் இறங்கினர். பந்து வீச்சு இந்தத் தருணங்களில் இலக்கற்று இருந்தது. இதனால் 4.4 ஓவர்களில் 30 ரன்களை எட்டினர் ஆப்கானிஸ்தான்.

இந்திய கேட்சிங் சரியாக அமையவில்லை, இந்தப் போட்டியிலும் மொகமது ஷமி, அம்பாத்தி ராயுடு வெகு எளிதான கையில் விழுந்த கேட்சைத் தவறவிட்டதும் நடந்தது. ‘பயிற்சி போட்டிகளுக்கு நான் பெரிய விசிறி அல்ல’என்று தோனி ஆட்டம் முடிந்தவுடன் கூறினார். பயிற்சி என்றால் வெறும் பேட்டிங் மற்றும் பவுலிங் என்று அவர் நினைத்திருக்கிறார் போலும். அதனால்தான் “மிடிலில் சிறிது நேரம் கழிப்பது உதவும்” என்று பயிற்சி ஆட்டம் பற்றி அவரால் கூற முடிகிறது.

அஹ்மதி, கனி ஆகியோருக்குப் பிறகு நவ்ரோஸ் மங்கல் (60 ரன், 85 பந்து 2 பவுண்டரி 2 சிக்சர்) என்று அனாயசமாக விளையாடினார்.

மங்கலும் ஆட்டமிழந்த பிறகு தேவை ரன் விகிதம் அதிகரிக்க அந்த அணி 50 ஓவர்கள் தாக்குப் பிடித்து 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது.

அடுத்து நேரடியாக இந்திய அணி அடிலெய்டில் பாகிஸ்தானைச் சந்திக்கிறது. ஆகவே, கடைசி பயிற்சி ஆட்டத்தில் வெற்றியுடன் செல்வது, குறிப்பாக ரெய்னா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு ஓரளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கும்.

இதே அடிலெய்டில் இந்தியா இப்போது ஏகப்பட்ட போட்டிகளை விளையாடிவிட்டது. ஆகவே பாகிஸ்தானுக்கு எதிராக பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகள் இந்திய அணிக்கு அத்துப்படியாகியிருக்கும், மாறாக நியூசிலாந்தில் ஆடிவிட்டு வரும் பாகிஸ்தான் அணி இந்த விவகாரத்தில் சற்றே அனுகூலமின்றி உள்ளது.

ஆனால் எது எப்படியிருந்தாலும், பாகிஸ்தான் அணியை எந்தக் காலத்திலும் முன் கணிப்பு செய்ய முடியாது என்பதை இந்திய அணியினர் அறிந்தேயிருப்பர்.

ரோஹித், ரெய்னா, ரஹனே அதிரடியில் 364 ரன்கள் குவித்த இந்திய அணி:

டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார்.

ஷிகர் தவன் மீண்டும் கால்களை நகர்த்தாமல் ஆடுவதன் பலனை பெற்றார். ஹமித் ஹசன் வீசிய மணிக்கு 144 கிமீ வேகம் கொண்டு அவரைக் குறுக்காக கடந்து வந்த பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார்.

அடுத்தபடியாக 5 ரன்கள் எடுத்த விராட் கோலி, யார்க்கர் லெந்த் பந்து ஒன்று சற்று முன்னதாக பிட்ச் ஆகி சற்றே நின்று ஸ்விங் ஆக எட்ஜ் செய்து வெளியேறினார். 16/2 என்ற நிலையில் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரஹானே ஆகியோர் அதிரடி முறையில் விளையாடி ஸ்கோர் விகிதத்தை உயர்த்தினர்.

குறிப்பாக ரெய்னாவும், ரோஹித்தும் 3-வது விக்கெட்டுக்காக 24 ஓவர்களில் 158 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா ஆப்கான் பவுலர்களை அதன் பிறகு அடித்து ஆடத் தொடங்கினார். மொத்தம் 12 பவுண்டரிகள் 7 சிக்சர்களை அடித்த ரோஹித் சர்மா 122 பந்துகளில் 150 ரன்கள் என்று ஒரு இரட்டைச் சதத்திற்குத் தயாராக இருந்த போது 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டமிழந்தார். ஒதுங்கிக் கொண்டு ஆடும் போது அவர் எதிர்பார்த்த திசையில் பந்து செல்லாமல் நேராக லாங் ஆஃப் பீல்டர் கையில் கேட்ச் ஆனது.

முன்னதாக ரெய்னா 71 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து இந்தப் போட்டியிலும் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

ரஹானேயும் ரோஹித் சர்மாவும் இணைந்து 95 ரன்களை 11 ஓவர்களில் சேர்த்தனர். ரஹானே 61 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 88 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

தோனியின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. 20 பந்துகளைச் சந்தித்து 10 ரன்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிச் சென்றார்.

பயிற்சி ஆட்டங்கள் உட்பட கோலி கடந்த 6 போட்டிகளில் 47 ரன்களையும், தோனி 5 போட்டிகளில் 80 ரன்களையும் எடுத்து சொதப்பி வருகின்றனர். ஜடேஜா 11 ரன்கள் எடுக்க உதிரிகள் வகையில் 21 ரன்கள் கிடைத்தது, இந்தியா 364/5 என்று ரன் குவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

32 mins ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்