சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் தமிழக காவல் துறை அணி 4-2 என்ற கோல் கணக்கில் சாய் அணியைத் தோற்கடித்தது. ஆட்டம் முழுவதும் தமிழக காவல் துறை அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், கடைசி 3 நிமிடங்களில் இரு கோல்களை அடித்து படுதோல்வியில் இருந்து தப்பியது சாய் அணி.
செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னை லீக் கால்பந்து போட்டிகள் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக காவல் துறை அணியும், சாய் அணியும் மோதின. இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட நிலையில், இந்த ஆட்டத்தில் சந்தித்தன.
காவல் துறை ஆதிக்கம்
தமிழக காவல் துறை அணி தனது முதல் ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் சுங்கத்துறையிடம் தோல்வி கண்டிருந்த நிலையில், இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. அதேநேரத்தில் முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஐசிஎப் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் மட்டுமே தோற்ற சாய் அணி, நன்றாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஏமாற்றத்தில் முடிந்தது.
அந்த அணியின் பின்களம் மிகவும் பலவீனமாக இருந்த நிலையில், ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே தமிழக காவல் துறை அணி கோலடித்தது. அந்த அணியின் மிட்பீல்டர் பிரபு பந்தை ராஜ்குமாரிடம் “பாஸ்” செய்ய, அவர் அதை கோலாக்கினார். தொடர்ந்து வேகம் காட்டிய தமிழக காவல் துறை 8-வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது. இந்த முறையும் பிரபுவே பந்தை பாஸ் செய்தார். இடது திசையில் இருந்து அவர் “பாஸ்” செய்த பந்தை, வலது திசையில் இருந்து முன்னேறிச் சென்ற ரஞ்சித் துல்லி யமாக கோல் கம்பத்திற்குள் அடித்தார்.
3-0 முன்னிலை
இதன்பிறகு தமிழக காவல் துறைக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை கோல் கம்பத்தின் அருகில் பச்சிராஜன் நழுவவிட, அந்த அணிக்கு கிடைத்த மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பை சாய் கோல் கீப்பர் திவாகர் அற்புதமாக முறியடித்தார். சாய் அணியின் ஸ்டிரைக்கர் பிரனான்ஸ் தனக்கு கிடைத்த பந்தையெல்லாம் எதிரணி வீரர்களிடம் பாஸ் செய்து வீணடித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய தமிழக காவல் துறை வீரர் கோபிநாத் ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் அந்த அணிக்கு 3-வது கோலை பெற்றுத் தந்தார்.
ராஜ்குமார் பாஸ் செய்த பந்தை பச்சிராஜன் தட்டிவிட, அது கோபிநாத் வசமானது. அதை சரியாகப் பயன்படுத்திய அவர் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் தமிழக காவல் துறை 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
ப்ரீ கிக்கில் கோல்
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் (அதாவது 49-வது நிமிடம்) தமிழக காவல் துறை அணி 4-வது கோலை அடித்தது. சாய் கோல் கம்பத்தின் வலது எல்லையில் பந்தை எடுத்துச் சென்ற ராஜ்குமாரை, சாய் வீரர் விஜய பிரபாகர் கீழே தள்ள, தமிழக காவல் துறை அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பை வழங்கினார் நடுவர். இதை சரியாகப் பயன்படுத்திய மிட்பீல்டர் ரவிச்சந்திரன் கோலடித்தார்.
இதன்பிறகு சாய் அணி கடுமையாகப் போராடினாலும், கோலடிக்க முடியவில்லை. சாய் மிட்பீல்டர்கள் கரிமுல்லா, ராஜீவன் ஆகியோர் அவ்வப்போது நல்ல கோல் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாலும், அந்த அணியின் ஸ்டிரைக்கர்கள் பிரனான்ஸ், டேனியல் ஆகியோரால் காவல் துறையின் பலம் வாய்ந்த பின்களத்தை தாண்டி முன்னேற முடியவில்லை.
ஸ்டிரைக்கரான கோல் கீப்பர்
சாய் அணிக்கு மற்றொரு நல்ல கோல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது காவல் துறை கோல் கீப்பர் முன்னேறி வந்ததால், பிரனான்ஸ் கோலடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதையும் கோட்டைவிட்டார். இதையடுத்து அவரை வெளி யேற்றிவிட்டு அவருக்குப் பதிலாக கோல் கீப்பர் அருணை களமிறக்கியது. இதையடுத்து ஏற்கெனவே கோல் கீப்பராக நின்ற திவாகர் ஸ்டிரைக்கர் ஆனார்.
ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் அதற்குப் பலனும் கிடைத்தது. ராஜீவன் “பாஸ்” செய்த பந்தை திவாகர் அசத்தலாக அடித்து கோலாக மாற்ற, சாய் அணிக்கு முதல் கோல் கிடைத்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஐசிஎப் அணிக்கு எதிரான ஆட்டத் தின்போது, கடைசி நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக்கில் இதே திவாகர் எதிர்முனைக்கு முன்னேறி வந்து பந்தை தலையால் முட்டி கோலடிக்க முயற்சித்தார். அப் போது அவர் கோல் கீப்பராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதை கருத்தில் கொண்டே அந்த அணி இந்தமுறை அவரை கோல் கீப்பரில் இருந்து ஸ்டிரைக்கராக மாற்றியது.
ஆட்டநாயகன் ராஜீவன்
முதல் கோலால் உத்வேகம் பெற்ற சாய் அணி 90-வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தது. இஞ்சுரி நேரத்தில் சாய் அணிக்கு மற்றொரு கோல் வாய்ப்பு கிடைத்தாலும், அதை கரிமுல்லா வீணடித்தார். இதனால் தமிழக காவல் துறை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. சாய் அணிக்கு கோலடித்ததோடு, திவாகருக்கு கோல் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த ராஜீவன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஜுவனைல் வெற்றி
முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் ஸ்டார் ஜுவனைல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் எஸ்பிஐ அணியைத் தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago