மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
343 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து ஆட்டம் முழுதும் தடுமாறி கடைசியில் டெய்லரின் அபாரமான 98 ரன்கள் வீணாக 41.5 ஓவர்களில் 231 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் சற்றும் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்தை திணறச் செய்து 9 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஜேம்ஸ் டெய்லர் ஒரு சாம்பியன் போல் பேட் செய்து 90 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். முன்னதாக கிறிஸ் வோக்ஸும் அவரும் இணைந்து 14 ஓவர்களில் 7-வது விக்கெட்டுக்காக அதிரடி முறையில் 92 ரன்களைச் சேர்த்தது மட்டுமே இங்கிலாந்துக்கு ஆறுதல் அளித்தது.
இங்கிலாந்து சுருண்ட விதம்
முதலில் மொயீன் அலி 2 பவுண்டரிகளை அடித்தார். மிட்செல் ஸ்டார்க் உண்மையில் சரியான வேகத்தில் வீசினார். அதனை புரிந்து கொள்ளாமல் மொயீன் அலி 5-வது ஓவரில் ஸ்டார்க் வீசிய ஷாட் பந்து அவரிடம் விரைவில் எகிற அதனை மீறி புல் ஆட முயன்று 10 ரன்களில் மிட் ஆனில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
சரியாக 5 ஓவர்கள் சென்று அதே 10 ரன்களில் கேரி பாலன்ஸ் ஆஸ்திரேலியா வைத்த பொறியில் சிக்கினார். மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை பிளிக் செய்தார். ஆனால் தரையில் ஆடாமல் காற்றில் ஆட ஷாட் மிட்விக்கெட்டில் ஃபின்ச் காத்திருந்தார்... பிடித்தார்.
இதற்கும் சரியாக 4 ஓவர்கள் சென்று 4 பவுண்டரிகளுடன் ஓரளவுக்கு பிட்சைப் புரிந்து கொண்டு ஆடி 36 ரன்களுடன் ஆடி வந்த இயன் பெல், மிட்செல் மார்ஷ் பந்தை ஒரு சுழற்று சுழற்ற மிட்விக்கெட்டில் ஸ்டார்க் அதற்காகக் காத்திருந்தார்.
அதற்கு அடுத்த பந்தே ஜோ ரூட் காலியானார். மீண்டும் ஷாட் பந்து, ஜோ ரூட் ஷாட்டிற்குச் சென்று டாப் எட்ஜ் செய்ய ஹேடின் கேட்ச் பிடித்தார்.
கேப்டன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர அவர் 6 பந்துகள் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல், மிட்செல் மார்ஷ் வீசிய ஸ்லோ ஷாட் பந்துக்கு ஹேடினின் அற்புதமான தாழ்வான கேட்சிற்கு ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
ஸ்டீவ் ஸ்மித்தின் அசாத்தியமான கேட்ச்:
அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் 10 ரன்கள் எடுத்த நிலையில், மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை கவர் திசையில் சக்தி வாய்ந்த ஷாட்டை ஆடினார். ஆனால் ஷாட் கவர் திசையில் ஸ்டீவ் ஸ்மித் அதிர்ச்சிகரமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார், இடது புறம் பாய்ந்து இரு கைகளையும் கொண்டு சென்று அசாத்தியமான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். இங்கிலாந்து 22-வது ஓவரில் 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கியது.
டெய்லர், வோக்ஸ் அளித்த சிறு நம்பிக்கை:
அதன் பிறகு டெய்லர், வோக்ஸ் இணைந்து 14 ஓவர்களில் 92 ரன்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வோக்ஸ் 37 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள். இந்நிலையில் வோக்ஸிற்கு அதி அற்புத மெதுபந்தை வீசினார் மிட்செல் ஜான்சன், பந்தில் வேகம் இல்லை ஆனால் கொஞ்சம் பவுன்ஸ் இருந்தது, அதனை வோக்ஸ் அடிக்க பந்து மேலெழும்ப ஸ்மித் பின்னால் சென்று கேட்ச் பிடித்தார்
.
இங்கிலாந்தின் ஒரே நம்பிக்கை ஸ்டூவர்ட் பிராட் மட்டுமே இப்போது.. ஆனால் அவருக்கு மிட்செல் ஸ்டார்க் வந்து நின்றவுடன் ஒரு விளையாட முடியாத யார்க்கரை வீச, பிராட் பவுல்டு ஆனார்.
ஜேம்ஸ் டெய்லரின் சாம்பியன் பேட்டிங்:
ஜேம்ஸ் டெய்லர் சில புதிதான பவுண்டரி ஷாட்களைக் கண்டுபிடித்து அடித்தார். மேலும் மிட் ஆன், மிட் ஆஃப் என்று அவர் தூக்கி தூக்கி அடிக்க பவுலர்கள் சற்றே கலங்கினர், குறிப்பாக 34-வது ஓவரில் அவர் மிட்செல் மார்ஷ் வீசிய பந்தை ஸ்கூப்/ஸ்விப் செய்ய பந்து சிக்ஸ் ஆனது. அது அவரது அரைசதமானது. 61 பந்துகளில் 4பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் 53 ரன்களில் இருந்தார். பிறகு மிட்செல் மார்ஷை இறங்கி வந்த் மிட் ஆனில் ஒரு பவுண்டரி அடித்தார்.
மீண்டும் மிட்செல் ஸ்டார்க் வீச வர லாங் ஆனில் வெறித்தனத்துடன் ஒரு சிக்சரை அடித்தார். வோக்ஸ் ஆட்டமிழந்த பிறகும் கூட மிட்செல் ஜான்சனை அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார். மீண்டும் ஸ்டார்க் பந்தை இரண்டு பவுண்டரி அடித்தார். இடையில் ஃபின், பிராட் ஆகியோர் வெளியேறினர்.
42-வது ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் தீர்ப்பளிக்கப்பட இங்கிலாந்து 231 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி தழுவியது.
டெய்லரின் பேட்டிங், பவுலிங்கில் ஸ்டீவ் ஃபின்னின் ஹேட்ரிக்குமே இன்றைய இங்கிலாந்து ஆட்டத்தின் ஆறுதல் அளிக்கும் அம்சங்களாகும்.
ஆட்ட நாயகனாக ஏரோன் பின்ச் தேர்வு செய்யப்பட்டார்
2015 உலகக்கோப்பையில் முதல் சதம் கண்ட ஏரோன் பின்ச்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
முன்னதாக டாஸ் தோற்ற ஆஸ்திரேலியா இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டது. அந்த அணி அபாரமான பின்ச் சதம் மற்றும் மேக்ஸ்வெல், பெய்லி, அரைசதங்களுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
ஏரோன் பின்சிற்கு முதல் ஓவரிலேயே கேட்சை விட்ட வோக்ஸ்:
ஏரோன் பின்ச்சிற்கு முதல் ஆண்டர்சன் ஓவரில் பின்ச் பந்தை பிளிக் செய்ய மிட்விக்கெட்டில் கையைக் கூப்பியபடி எம்பிய வோக்ஸ் பந்தை பிடிக்கத் தவறினார். விளைவு ஏரோன் ஃபின்ச் 128 பந்துகளில் 12 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 135 ரன்கள் விளாசினார் என்பதே.
கடைசியில் ஹாட்ரிக் எடுத்து ஸ்டீவ் ஃபின் ஆறுதல்:
ஆட்டத்தின் 50வது ஓவரை ஸ்டீவன் ஃபின் வீசினார். 4-வது பந்தில் ஹேடின் தேர்ட் மேனில் கேட்ச் பிடிக்கப்பட்டார், 5-வது பந்தில் ஜோ ரூட்டின் அபாரமான கேட்சிற்கு கிளென் மேக்ஸ்வெல் வெளியேறினார். கடைசி பந்தை மிட்செல் ஜான்சன் மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். ஃபின் 10 ஓவர்களில் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனாலும் என்ன பயன்? 2009-இல் பிளிண்டாஃப் எடுத்த ஹாட்ரிக்கிற்குப் பிறகு தற்போது ஃபின் இங்கிலாந்துக்காக ஒரு ஹேட்ரிக் சாதனை புரிந்தார்.
பின்ச் கேட்சை விட்ட பிறகு சிறப்பாக ஆடியது போல் கடைசியில் 66 ரன்கள் எடுத்த கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் கேட்ச் கோட்டைவிடப்பட்டது. அவர் 40 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்.
பின்ச் எடுத்த 135 ரன்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் 5-வது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். வார்னருடன் 57 ரன்கள் தொடக்கம் கண்ட பின்ச் பிறகு பெய்லியும் இவரும் இணைந்து 146 ரன்களைச் சேர்த்து 3 விக்கெட்டுகளுக்குப் பிறகு ஆட்டத்தை கொண்டு சென்றனர்.
இங்கிலாந்து கடைசி ஓவர் பவிலிங் வெளிறிப்போக ஆஸ்திரேலியா கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை எடுத்தது.
வார்னருக்கும் தொடக்கத்தில் கடினமான வாய்ப்பு ஒன்று விடப்பட்டது. ஆனால் அவர் அதிகம் சோதிக்காமல் 22 ரன்களில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் பவுல்டு ஆனார். லெக் திசை பிளிக் ஷாட் சிக்கவில்லை. முன்னதாக, ஆண்டர்சனின் 3-வது ஓவரில் 18 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 37 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது. . வாட்சனுக்கு அடுத்த பந்தே அருமையான அவுட் ஸ்விங்கரை வீச அவர் எட்ஜ் செய்து 0-வில் வெளியேறினார். இதன் மூலம் பிராட் ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார். உள்ளே இறங்கிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு அபாரமான இன்ஸ்விங்கிங் மிடில் ஸ்டம்ப் யார்க்கரை வீசினார் பிராட், ஆனால் ஸ்மித் தடுத்தாடிவிட்டார்.
ஸ்மித்தின் ஆட்டம் தூக்கி நிறுத்தும் என்ற நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ஆட முயன்று பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பைத்தாக்கியது. ஆஸி.70/3 என்று ஆனது.
அதன் பிறகு பெய்லி, ஏரோன் பின்ச் 58 பந்துகளுக்கு பவுண்டரி அடிக்கவில்லை. அணியை நிதானித்தனர். ஆனால் மொயீன் அலியை 2 பவுண்டரிகள் அடித்தனர் பின்ச், மற்றும் பெய்லி. அதன் பிறகு ஆண்டர்சன் பந்தையும் சிக்சருக்குத் தூக்கினார் பின்ச். பிறகு ரூட் வந்தவுடன் லாங் ஆனில் பவுண்டரி பிறகு ஆஃப் திசையில் ஸ்லைஸ் ஷாட் சிக்சருக்குப் பறந்தது. கடைசியில் 31-வது ஓவர் பவர் பிளே வந்தது. ஃபின் வீசிய லெக் திசைப் பந்தை பவுண்டரி அடித்து 102 பந்துகளில் சதம் கண்டார் பின்ச். மட்டையை உயர்த்தினார், குதித்தார். உலகக்கோப்பை அறிமுகத்தில் சதம் எடுக்கும் 4-வது ஆஸி. வீரர் ஏரோம் ஃபின்ச்.
123 ரன்களில் இருந்த போது ஜேம்ஸ் டெய்லரின் மோசமான த்ரோவினால் ஏரோன் பின்சிற்கு மற்றொரு ரன் அவுட் வாய்ப்பு தவற விடப்பட்டது. ஆனால் 135 ரன்களில் இயன் மோர்கன் த்ரோவுக்கு பின்ச் ரன் அவுட் ஆனார். பெய்லி 55 ரன்கள் எடுத்து பின் பந்தை ஸ்டம்பில் அடித்தார்.
மேக்ஸ்வெல் அதிரடி:
அதன் பிறகு மேக்ஸ்வெல் இறங்கி 3-வது பந்தையே மொயீன் அலியை ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். அதன் பிறகு அவரது வழக்கமான பாணியில் நகர்ந்து கொண்டு ஆடுவது, மேலேறி வந்து ஆடுவது என்று அடிக்கத் தொடங்கினார். 42-இல் இவருக்கும் ஒரு வாழ்வு வழங்கியது இங்கிலாந்து ஆனால் அந்த ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசப்பட்டது. கடைசியில் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் 66 ரன்களை 11 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்து ஸ்டீவ் ஃபின்னின் ஹாட்ரிக் விக்கெட்டுகளில் ஒன்றானார்.
மிட்ச்ல் மார்ஷ் விரைவு 23 ரன்களையும் பிராட் ஹேடின் 14 பந்துகளில் 31 ரன்களையும் விளாசியதில் கடைசி 10 ஓவர்களில் 105 ரன்களை ஆஸி.விளாச ஸ்கோர் 342 ரன்களை எட்டியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago