1999: தொடங்கியது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்

By எஸ்.சசிதரன்

இந்தியாவில் 1987-ல் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்கு எவ்வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் சாதாரண அணியாக இந்தியா வந்த ஆஸ்திரேலியா, கடுமையாகப் போராடிக் கோப்பையை வென்று அசத்தியது.

ஸ்டீவ் வாஹ் என்னும் நம்பிக்கை நட்சத்திரம் அப்போது உதயமானார். அந்த இளம் நட்சத்திரம் 1999-ல் மாபெரும் தலைவனாக உருவெடுத்தார்.

ஸ்டீவ் வா தலைமையில், 1999 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட இங்கிலாந்தில் கால் பதித்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளையும் அச்சுறுத் தக்கூடிய சிறந்த வீரர்களைப் பெற்றிருந்தது.

ஆனால், ஆஸ்தி ரேலிய அணிக்குச் சவால் விடக் கூடிய அணியாகத் தென்னாப் பிரிக்க அணி இருந்தது. கேரி கிர்ஸ்டன், ஹெர்ஷல் கிப்ஸ், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், ஜேக் காலிஸ், ஜான்டி ரோட்ஸ் போன்ற வீரர்களைக் கொண்ட அணி அது.

இதுபோதாதென்று அதன் தலைவர் ஹன்ஸி க்ரோன்யே ஆல் ரவுண்டர் என்பதோடு வியூக வித்தகராகவும் விளங்கினார்.

வெளியேறியது இந்தியா

இந்த உலகக் கோப்பை, இந்தியாவுக்கு சொல்லிக் கொள் ளும்வகையில் அமையவில்லை, பரம வைரியான பாகிஸ்தானை வென்றது, 1996-ல் அரையிறுதியில் படுதோல்வியைப் பரிசளித்த இலங்கையைத் தோற்கடித்தது ஆகிய திருப்திகளோடு நாடு திரும்பியது முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் “ஏ’ பிரிவில் சூப்பர் சிக்ஸ் பிரிவுக்குத் தகுதி பெற்றன. இதில், ஜிம்பாப்வே லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளி்த்தது. நடப்பு சாம்பியன் இலங்கை, போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்னேறி அசத்தியது ஜிம்பாப்வே.

அசராத ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா-தென்னாப் பிரிக்கா, பாகிஸ்தான்-நியூஸி லாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. அதில் நியூஸி லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித் தள்ளிய வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

1992-ல் உலகக் கோப்பையை வென்றபோது, மிகக் கடுமையாகப் போராடி இறுதிப் போட்டியை எட்டியதுபோல், இம்முறையும் அந்த அணி போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததால், இறுதிப் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

தென்னாப்பிரிக்காவுடன் தொடர்ந்து இரு கடுமையான போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலியா அயர்ந்து போயிருந்ததால், தாங்கள் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் பாகிஸ்தான் கருதியது. ஆனால், உலகை ‘ஆள்வதற்கு’த் தயாராகிவிட்ட ஆஸ்திரேலியா அசரவில்லை. 132 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. அக்ரம், வக்கார் யூனுஸ் போன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், ஆடம் கில்கிறிஸ்ட் 36 பந்துகளில் 54 ரன் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

கில்கிறிஸ்ட் எழுச்சி

ஸ்டீவ் வாஹ், 1998-ல் மூன்று அணிகள் மோதிய ஒரு நாள் தொடரில் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டை தென்னாப்பிரிக் காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தொடக்க வீரராகக் களம் இறக்கினார். அதன் பிறகு, அவர் ஓய்வுபெறும்வரை தொடக்க வீரராக இறங்கிப் பந்து வீச்சாளர் களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது வரலாறு.

வார்ன் எனும் மந்திர சுழல்

கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்ட ஷேன் வார்ன், கிலென் மெக்ரா ஆகியோரின் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்குப் பெரிதும் கைகொடுத்தது. குறிப்பாக, ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான களங்களில் தனது தனித்துவத்தைக் காட்டினார் வார்னே.

சுழற்பந்து வீச்சாளர்களை அனாயசமாகக் கையாளும் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில், தனது மந்திரச் சுழலில் சிக்கச் செய்தார் (33 ரன் கொடுத்து 4 விக்கெட்). உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் மிகக் குறைந்த (39) ஓவர்களில் 132 ரன்களுக்கு எதிரணியைச் சுருட்டி வீச மிக முக்கியக் காரணமாக இருந்தார் ஆட்ட நாயகன் ஷேன் வார்ன்.

மேற்கிந்தியத் தீவுகளுக் கெதிரான, வென்றே தீர வேண்டிய லீக் போட்டியில், 14 ரன் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தி வெல்ல உதவினார் மெக்ரா. சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதிலும் மெக்ராவுக்கு முக்கியமான பங்கு இருந்தது. சச்சின், திராவிட், அசாருதீன் ஆகிய மூவரையும் அவர் சொற்ப ரன்களில் வீழ்த்தினார்.

ஆதிக்கம் ஆரம்பம்

வார்ன், கில்கிறிஸ்ட், மெக்ரா, ஸ்டீவ் வா ஆகியோருடன் பின்னாளில் ரிக்கி பாண்டிங், மேத்யு ஹைடன், ஆண்ட்ரூ சைமன்ட்ஸ், பிரெட் லீ போன்றவர்களின் பங்களிப்பும் சேர்ந்துகொள்ள, எல்லா விதமான போட்டிகளிலும் சுமார் 12 ஆண்டுகள்வரை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. அதற்கெல்லாம் தொடக்கமாக அமைந்தது 1999 உலகக் கோப்பைப் போட்டி என்று சொல்லலாம்.

1996 உலகக் கோப்பையில் இறுதி வரை முன்னேறிய ஆஸ்திரேலியா, இலங்கையிடம் தோற்றது. கோப்பையை மீண்டும் கைப்பற்றும் வேட்கையுடன் 1999-ல் இங்கிலாந்தில் கால் பதித்த ஆஸ்திரேலியா, கடுமையாகப் போராடி நினைத்ததைச் சாதித்தது.

முதல் முறையாக சூப்பர் சிக்ஸ்

இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முதலாக, சூப்பர் சிக்ஸ் என்னும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டது. வழக்கமாக, இரு பிரிவுகளாக அணிகளைப் பிரிக்கும்போது, அதில் நான்கு இடங்களைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பதனை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், சூப்பர் சிக்ஸில் அவ்வாறு கணிப்பது சற்று சிரமமாக இருந்தது என்றே கூறலாம். காரணம், எட்டு அணிகள் மோதக்கூடிய காலிறுதி என்னும் சுற்றே இதில் கிடையாது. அதற்குப் பதில் சூப்பர் சிக்ஸ். அதாவது, வலுவான எட்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குப் போக முடியாது. அதில் இரு அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறும் என்பதால் முதல் சுற்றும் சவாலானதாகவும் முக்கியமானதாகவும் அமையும்.

இரு பிரிவுகளிலும் முதல் சுற்றில் முதல் 3 இடங்களைப் பெற்ற 6 அணிகள் சூப்பர் சிக்ஸுக்குத் தகுதி பெற்றன. அதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகின. ஒரு அணி, தனது பிரிவில் இருந்து சூப்பர் சிக்ஸுக்குத் தகுதி பெறும் இன்னொரு அணியை முதல் சுற்றில் வென்றிருந்தால் போனஸ் புள்ளி உண்டு என்ற விதியும் இருந்தது.

மீண்டும் இங்கிலாந்து மண்ணில்

1975, 1979 மற்றும் 1983 உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தியிருந்த இங்கிலாந்து, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்வாய்ப்பினை 1999-ல் மீண்டும் பெற்றது. இங்கிலாந்தின் அண்டை நாடுகளான ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்திலும் சில போட்டிகள் நடைபெற்றன. வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் முதல்முறையாகக் களம் கண்டன.

‘ஏ’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இங்கிலாந்து இலங்கை மற்றும் கென்யா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் அணி வகுத்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்