இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்க அணி : சில புள்ளி விவரங்கள்

By இரா.முத்துக்குமார்

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மெல்போர்னில் மிகமுக்கியமான உலகக்கோப்பை போட்டியில் மோதுகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியே இந்திய அணியை வெகுவாக ஆதிக்கம் செலுத்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான 6-0-வுக்கு பதிலடியாக தென்னாப்பிரிக்காவின் இந்திய அணிக்கு எதிரான 3-0 என்றெல்லாம் பேசி ஊடகங்கள் போட்டிக்கு முந்தைய ஆர்வங்களைத் தூண்டுவதில் முனைப்பு காட்டி வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவின் கையே இந்தியாவுக்கு எதிராக ஓங்கியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 2010ஆம் ஆண்டுக்குப் பிறகான புள்ளி விவரங்கள் தென்னாப்பிரிக்க ஆதிக்கத்தை எடுத்துரைக்கின்றன.

இந்தியாவுக்குக் கவலையளிக்கும் சில அம்சங்கள்:

இந்தியாவுக்கு வெளியே விளையாடிய போட்டிகளில் 2010-ற்குப் பிறகு இந்திய அணியின் டாப் 7 வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 40 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார்கள் என்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 25 ரன்களே சராசரியாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்கு வெளியே 2010-ற்குப் பிறகு முதல் 3 மற்றும் நடுக்கள வீரர்களின் சராசரி சரிவையே கண்டுள்ளது.

மேலும் ரன்கள் எடுக்கும் வேகத்திலும் ஒட்டுமொத்தமாக சுமார் 100 பந்துகளுக்கு 85 ரன்கள் என்ற விகிதத்தில் எடுத்துள்ளார்கள் என்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட் சரிவு கண்டு 77 ரன்களுக்கும் குறைவாக உள்ளது.

2010-ற்குப் பிறகு இந்திய தொடக்க வீரர்கள் சதக்கூட்டணி அமைத்தது 12 இன்னிங்ஸ்களில் 2 முறையே. அதில் ஒரே ஆறுதல் என்னவெனில் தற்போதைய தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா-ஷிகர் தவன் சாம்பியன்ஸ் டிராபியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு சதக்கூட்டணி அமைத்துள்ளனர்.

அதன் பிறகு இவர்களிடமிருந்து பெரிதாக ஒன்றும் வெளிப்படவில்லை.

பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு வெளியே 2010-லிருந்து பார்த்தால் இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக வைத்திருக்கும் சராசரி அபாரமான 20.52 ஆகும். அதாவது இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு வெளியே 9 போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் 57 இந்திய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் தோனி. இவர் 21 இன்னிங்ஸ்களில் 497 ரன்கள் எடுத்துள்ளார். 3 அரைசதங்கள். சராசரி 27.61. நல்ல ஸ்ட்ரைக் ரேட்: 85. ஆனால் தோனிக்கு வேறு எந்த அணியிடத்திலும் இவ்வளவு குறைந்த சராசரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு அணியில் ஷிகர் தவன் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் எடுத்தவர். சாம்பியன்ஸ் டிராபியில் கார்டிஃபில் தவன், தெ.ஆ-விற்கு எதிராக சதம் கண்டார்.

இதற்கு நேர் எதிராக தென்னாப்பிரிக்காவின் டாப் பேட்ஸ்மென்கள் இந்தியாவுக்கு எதிராக சவாலாகத் திகழ்ந்துள்ளனர்.

ஆம்லா, குவிண்டன் டி காக், டிவிலியர்ஸ், டுமினி. டிவிலியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக 2010-ற்குப் பிறகு 60 ரன்கள் சராசரி வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு எதிராக 46.89 என்ற சாரசரி வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 105 ரன்கள் என்பது இந்தியாவுக்குக் கவலையளிப்பதாகும். இதில் 13 இன்னிங்ஸ்களில் 3 சதங்களையும், 4 அரைசதங்களையும் எடுத்துள்ளார்.

ஆம்லா இந்தியாவுக்கு எதிராக 12 போட்டிகளில் 632 ரன்களை 57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 2 சதம், 5 அரைசதம்; ஸ்ட்ரைக் ரேட்: 90

குவிண்டன் டி காக் இந்தியாவுக்கு எதிராக ஜாகீர் அப்பாஸுக்குப் பிறகு 3 ஒருநாள் சதங்களை தொடர்ச்சியாக எடுத்து 114 ரன்களை இந்தியாவுக்கு எதிராக சராசரியாக வைத்திருப்பவர். ஸ்ட்ரைக் ரேட் 95. டுமினியின் ஸ்ட்ரைக் ரேட் 90 ரன்களுக்கு அருகில். டுபிளேசியின் ஸ்ட்ரைக் ரேட் இந்தியாவுக்கு எதிராக 92 ரன்கள்.

அதிரடி வீரர் இடது கை பேட்ஸ்மென் டேவிட் மில்லர் இந்தியாவுக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்காவிட்டாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 124.35.

தற்போதைய இந்திய அணியின் வீரர்களுக்கு எதிராக டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சு சராசரி 15.80. இதே இந்திய வீரர்களுக்கு எதிரான அவரது சிக்கன விகிதம் 3.88.

மொகமது ஷமிக்கு எதிராக ஹஷிம் ஆம்லா 3 முறை 30 பந்துகளுக்குள் ஆட்டமிழந்துள்ளார். ஷமிக்கு எதிராக ஆம்லாவின் சராசரி 7.33. ஆனால் மற்ற வீச்சாளர்களுக்கு எதிராக ஆம்லாவின் சராசரி 100 ரன்கள்.

அஸ்வினையே நாம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பெரிய ஆயுதம் என்கிறோம், ஆனால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 38 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். 216 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். சிக்கன விகிதமும் ஓவருக்கு 5.50 ரன்களுக்கும் மேல்.

இவையெல்லாவற்றையும் மீறி ஒன்று உள்ளது. பெரிய போட்டிகளில் தென்னாப்பிரிக்கா சொதப்பி வருவது அனைவரும் அறிந்ததே, மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தன்னம்பிக்கையான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா நடப்பு உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவ்வளவு தன்னம்பிக்கையுடன் தொடங்கவில்லை.

ஜிம்பாப்வேயின் மசகாட்சா தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை நன்றாக ஆடும் போது பலமான இந்திய பேட்டிங் ஏன் சாதிக்க முடியாது?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்