1996: மட்டையால் எழுதிய அழகோவியம்

By அரவிந்தன்

சனத் ஜெயசூர்யாவும் ரொமேஷ் கலுவிதரணவும் தங்கள் அதிரடியால் பெரும் பலமாகத் திகழ்ந்தாலும் இலங்கை இவர்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை. “ஒரு நாள் இவர்கள் முயற்சி பலிக்காமல் போகும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதற்குத் தயாராகவே இருந்தோம்” என்று அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறினார். அரை இறுதி, இறுதி ஆகிய இரண்டு போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தார்கள். ஆனால் இலங்கை அசர வில்லை.

அரை இறுதியில் இந்தியா இலங்கையை எதிர்கொண்டது. இந்த முறை ஆட்டத்தில் மனோஜ் பிரபாகர் இல்லை. முதலில் மட்டை பிடித்த இலங்கையின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர்களை நாத் எடுத்த எடுப்பில் ஆட்டமிழக்கச் செய்தார். 1 ரன்னில் இரண்டு விக்கெட்கள். அடுத்து, 16 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த குருசின்ஹாவும் ஸ்ரீநாத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அரங்கமே உற்சாகத்தில் துள்ளியது. ஆனால் இதர மட்டையாளர்கள் பதற்றமடையவில்லை. அரவிந்த டிசில்வா (66), ரோஷன் மஹானமா (58), ரணதுங்கா (35), ஹஷன் திலகரத்னா (32), சமிந்தா வாஸ் (23) ஆகியோர் அணியை கௌரவமான நிலைக்குக் (251) கொண்டுசென்றார்கள்.

தொடர்ந்து ஆடிய இந்தியா விரைவில் சித்துவை இழந்தாலும் சச்சினும் மஞ்ச்ரேக்கரும் ஸ்திரப்படுத்தினார்கள். ஸ்கோர் 98ஆக இருக்கும்போது சச்சின் (65) ஆட்டமிழந்தார். ஆட்டம் சட்டென்று திசை மாறியது. அசாருதீன் ரன் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு மஞ்ச்ரேக்கர் (25) ஆட்டமிழக்க, நாத், அஜய் ஜடேஜா, மோங்கியா, ஆஷிஷ் கபூர் ஆகியோர் வந்த சுருக்கில் நடையைக் கட்டினார்கள். 35ஆவது ஓவரில் 120-8 என இந்தியா பரிதாபமாக நின்றது.

கிரிக்கெட்டின் மீது அடங்காத காதல் கொண்ட கொல்கத்தா ரசிகர்கள் பொறுமை இழந்தார்கள். மைதானத்தின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். ஆட்டம் தடைப்பட்டது. ரசிகர்களின் ஆவேசம் தொடர்ந்தது. ஆட்ட த்தை மீண்டும் தொடங்கும் சூழல் இல்லை என்பதால் இலங்கை வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டது.

உலகக் கோப்பையின் தொடக்க விழாவும் கொல்கத்தாவில்தான் நடந்தது. அதில் நடந்த எக்கச்சக்க மான சொதப்பல்களால் கொல்கத் தாவுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அரையிறுதியில் ரசிகர் களின் கலாட்டாவால் கொல்கத்தா வின் பெயர் மேலும் சந்தி சிரித்தது.

அரவிந்த டிசில்வாவின் அற்புதம்

இறுதிப் போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. டாஸ் வென்ற ரணதுங்கா ஆஸ்திரேலியாவை மட்டை பிடிக்கச் சொன்னார். மார்க் டெய்லர் (74), ரிக்கி பாண்டிங் (45), மைக்கேல் பெவன் (36) ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 241 ரன்களை எட்டியது.

இலங்கையின் ஜெயசூர் யாவும் கலுவிதரணவும் மீண்டும் விரைவில் ஆட்டமிழந்தார்கள். ஸ்கோர் 23-2. ஆனால் இலங்கை மீண்டும் தன் உறுதியைக் காட்டியது. குருசின்ஹா (65), டிசில்வா (107), ரணதுங்கா (47) ஆகியோர் வெற்றிக் குத் தேவையான ரன்களை எடுத் தார்கள். டிசில்வாவும் ரணதுங்கவும் கடைசிவரை ஆட்டமிழக்க வில்லை.

அன்று டிசில்வா ஆடிய ஆட்டத்தை மட்டையால் வரைந்த அழகோவியம் என்று சொல்ல வேண்டும். அவரது கால்களின் நகர்வு கச்சிதமாக இருந்தது. இடைவெளிகளில் பந்தைச் செலுத்திய துல்லியம் அபாரமாக இருந்தது. டிசில்வா இரண்டு கேட்ச்களையும் பிடித்து மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி யிருந்தார். தொடர் முழுவதும் 91, 8, 145, 66 ஆகிய ஸ்கோர்களை அடித்த டிசில்வா ஆகச் சிறந்த ஆட்டத்தை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்தினார்.

தலைவன் இருக்கிறான் கலங்காதே

இறுதிப் போட்டி தொடங்கு வதற்கு முன்பு ரணதுங்க, ஆஸ்திரேலியாவின் பாணி யிலேயே ஆஸ்திரேலிய அணியை வெறுப்பேற்றினார். ஷேன் வார்ன் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மாயை என்றார். அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய பவுலர் இல்லை என்றார்.

அந்தச் சொற்களை நிரூபிப்பதுபோல டிசில்வா ஆடினார். வார்னை அவர் அடித்த விதம் தாக்குதலிலிருந்து அவரை அப்புறப்படுத்தியது. வார்ன் தன் ஆக மோசமான பந்து வீச்சுடன் (10 ஓவர் 58 ரன், விக்கெட் இல்லை) தொடரை முடித்துக் கொண்டார்.

இலங்கை கேப்டனின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அபாரமானவை. முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கைக்குச் செல்ல மாட்டோம் என ஆஸ்திரேலியா அறிவித்ததும் அந்த அணியை இறுதிப் போட்டியில் சந்திக்க ஆசைப்படுகிறேன் என்றார் ரணதுங்க. பொதுவாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தவிர்க்கவே எல்லா அணிகளும் விரும்பும்.

வெற்றி மந்திரம்

இலங்கை அணியில் ஒவ்வொருவரும் தத்தமது பங்கை உணர்ந்து ஆடினார்கள். யாரும் யாரையும் நம்பி ஆடவில்லை. அதே சமயம் ஒரு அணியாகச் செயல்பட்டார்கள். அவர்களிடம் தெளிவான வியூகம் இருந்தது. அந்த வியூகம் தவறினால் என்ன செய்வது என்ற மாற்று ஏற்பாடும் இருந்தது. பக்குவமான தலைமை, பன்முகத் திறமை கொண்ட ஆட்டக்காரர்கள், அணியினர் அனைவரின் முழு ஒத்துழைப்பு ஆகியவைதாம் இலங்கையை கிரிக்கெட் சிகரத்தின் உச்சியை எட்டவைத்தது.

இன்றுவரை இலங்கை உலக அரங்கில் முக்கியமான அணிகளில் ஒன்றாகவே திகழ்கிறது. அதன் பிறகு நடந்த நான்கு உலகக் கோப்பைகளில் 2003-ல் அரை இறுதி வரை வந்தது. 2007, 20011-ல் இறுதிப் போட்டிவரை வந்தது. வெற்றிக்கான ஊக்கத்தையும் உத்திகளையும் அந்த அணி தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

பிரகாசித்த நட்சத்திரங்கள்

சச்சின் டெண்டுல்கர், மார்க் வா, பிரையன் லாரா ஆகிய மூவரும் தொண்ணூறுகளில் உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்கள். 1996-ல் லாரா தொடர்ந்து சீராக ஆடவில்லை. இரண்டு சதங்கள், மூன்று அரை சதங்களுடன் 523 ரன் அடித்த சச்சின், கேள்விக்கு அப்பாற்பட்டு முதலிடம் பெற்றார். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 137, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 90 ஆகியவை மிகச் சிறந்த இன்னிங்ஸ்களாகத் திகழ்ந்தன.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் மூன்று ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசிய க்லென் மெக்ரா அடுத்த ஐந்து ஓவர்களில் 48 ரன்களைக் கொடுத்தார். அவரை எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து ஆதிக்கம் செலுத்தினார் சச்சின்.

சச்சின், மார்க் வா, அரவிந்த டிசில்வா, கேரி கிறிஸ்டன், சயீத் அன்வர் ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தார்கள்.

பந்து வீச்சில் அனில் கும்ப்ளே, வக்கார் யூனுஸ், பால் ஸ்ட்ராங், ரோஜர் ஹார்ப்பர், டெமியன் ஃப்ளெமிங், ஷேன் வார்ன் ஆகியோர் முதல் இடங்களைப் பிடித்தார்கள். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 10 ரன் கொடுத்த ஷேன் வார்ன், அடுத்த 9 ஓவர்களில் 18 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

சனத் என்னும் தனிக்காட்டு ராஜா

சச்சின், மார்க் வா ஆகியோர் சிறப்பாக ஆடினாலும் ஆட்டத்தின் போக்கைத் திசை திருப்பிய விதத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா தனித்து நின்றார். அவர் அடித்த ரன்கள் அதிகம் இல்லை என்றாலும் புயல் வேகத்தில் அடித்ததால் அணியின் வெற்றிக்குப் பெரும் துணைபுரிந்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 79, கென்யாவுக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 44 அடித்த அவர் காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 44 பந்துகளில் 82 அடித்துப் பட்டையைக் கிளப்பினார். சிக்கனமான அவரது சுழல் பந்து வீச்சும் கைகொடுக்க, அதிக ரன்களோ அதிக விக்கெட்களோ எடுக்காமலேயே உலகக் கோப்பையின் தொடர் நாயகன் என்னும் விருதை அவர் தட்டிச் சென்றார்.

“ஆட்டத்தின் போக்கையே அவர் மாற்றினார். 1996 உலகக் கோப்பையில் அவர் ஆடிய விதம் இன்னிங்ஸைத் தொடங்கும் விதம் பற்றிய எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டது” என்று ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் க்லென் மெக்ரா குறிப்பிட்டது ஜெயசூர்யாவின் பங்களிப்பைத் துல்லியமாகக் கூறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்