17/5 என்ற நிலையில் முதல் பந்தையே பவுண்டரி அடித்த கபில்: 1983 உலகக்கோப்பையை நினைவுகூரும் ஸ்ரீகாந்த்

By எஸ்.தினகர்

1983 உலகக்கோப்பை போட்டிகளில் பலமான அணிகளை வென்று கோப்பையையும் முதன் முதலாக கைப்பற்றிய அந்தத் தொடரை முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த முழு பேட்டியில் கூறியிருப்பதாவது:

"உலகக்கோப்பை வெற்றி நாங்கள் சிறந்த அணி என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் அந்த தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனை தருணமாகும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஓல்ட் டிராபர்டில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்றது எங்களிடையே பெரிய தன்னம்பிக்கையை விதைத்தது.

அப்போதெல்லாம் மேற்கிந்திய தீவுகள் என்பது மிகப்பெரிய அணி, விவ் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், கிளைவ் லாய்ட் உள்ளிட்ட மகா பேட்ஸ்மென்களும், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், ஜெஃப்ரி டியூஜான் போன்ற நல்ல வீரர்களும் இருந்தனர். மேலும் பந்துவீச்சு அச்சுறுத்தலானது. முதல் போட்டியில் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தோம், அதுதான் அந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை நம்பிக்கையின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

நம்மிடம் வேகப்பந்து வீசும் ஆல்ரவுண்டர்கள் என்ற வகையில் மதன்லால், ரோஜர் பின்னி, இருந்தனர். அவர்களது பாணி பந்துவீச்சுக்கு இங்கிலாந்து மிகவும் பொருத்தமாக அமைந்தது. பின்னி அந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலராக சிறப்புற்றார். இவர்கள் பேட்டிங்கும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும், சிறந்த பேட்ஸ்மென் மொகீந்தர் அமர்நாத் இருந்தார். அவரது பந்துவீச்சும் மதிப்பு மிக்கதாக இருந்தது. கீர்த்தி ஆசாத்தும் ஆல்ரவுண்டரே.

கபிலின் ஜிம்பாப்வேயிற்கு எதிரான 175 ரன் இன்னிங்ஸ் பற்றி...

ஆனால், அனைத்திற்கும் மேலாக கபில்தேவ், நான் பார்த்ததில் சிறந்த ஆல்ரவுண்டர் கபில்தான். பவுலிங், பேட்டிங், பீல்டிங் என்று அனைத்திலும் அவர் மிகத்திறமை வாய்ந்தவர். அவர் மிகப்பிரமாதமான ஸ்விங் பவுலர், ஆக்ரோஷமான பேட்ஸ்மென் மற்றும் சிறந்த ஒரு தடகள மனோபாவம் உள்ள பீல்டர்.

அவரது கிரிக்கெட் வாழ்வின் 2ஆம் பகுதியில் ஸ்லிப்பில் சில அதிர்ச்சிகரமான கேட்ச்களை கபில் பிடித்துள்ளார். இம்ரான் கூட பீல்டிங்கில் சிறந்தவர் என்று கூற முடியாது. ஆனால் கபில் எதைச் செய்தாலும் பிரமாதப்படுத்தக் கூடியவர்.

ஜிம்பாப்வேயிற்கு எதிராக நாம் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தோம். அப்போது பெரும்பாலும் பேட்ஸ்மென்கள் தடுத்து ஆடவே செய்வர். ஆனால் கபில் அந்த நிலையிலும் தான் எதிர்கொண்ட முதல் பந்தை உள்கள பீல்டிற்கு வெளியே தூக்கி பவுண்டரி அடித்தார். அதன் பிறகு உலகின் தலைசிறந்த ஒருநாள் இன்னிங்ஸை அவர் ஆடினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அன்று பிபிசி ஸ்ட்ரைக்கில் இருந்ததால் அதன் வீடியோ இல்லாமல் போனது.

அப்போதெல்லம் நிறைய மூடநம்பிக்கைகள் இருந்தன. ஜிம்பாப்வேயிற்கு எதிராக அன்று கபில் ஆடிக்கொண்டிருந்த போது, ஓய்வறைக்கு வெளியே நானும் என் மனைவி வித்யாவும் நின்று கொண்டிருந்தோம். கபிலின் அந்த இன்னிங்ஸ் முழுதும் நாங்கள் அங்கேயே நிற்க நேரிட்டது. ஒரு இன்ச் கூட நகரவில்லை, காரணம் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் கபில் அவுட் ஆகி விடுவார் என்று நினைத்தோம். அன்றைய தினம் நல்ல குளிர், காற்றும் அடித்துக் கொண்டிருந்தது. எங்களால் அங்கு நிற்க முடியவில்லை. ஆனால் கபிலின் அன்றைய ஆட்டம் அனைத்தையும் மறக்கடித்துவிட்டது.

நாங்கள் கடைசி வரை ஆடினோம், கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர், நல்ல பேட்ஸ்மெனும் கூட, அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்கவில்லை என்றே நான் கூறுவேன். அவர் அந்தத் தொடரில் தனது அனைத்து முயற்சிகளையும் பங்களிப்பு வாயிலாக செய்தார்.

தனது ஹீரோ விவ் ரிச்சர்ட்ஸை முதன்முதலில் சந்தித்தது பற்றி...

அணிகளை பிரிட்டீஷ் ராணி விருந்துக்கு அழைத்திருந்த தருணம் அது. அப்போது விவ் ரிச்சர்ட்ஸிடம் சென்று நானே என்னை அறிமுகம் செய்து கொண்டேன், அவர், ‘வெரி குட் மேன், குட் லக் மேன்’ என்றார். அந்தச் சந்திப்பை என்னால் மறக்க முடியாது.

ரிச்சர்ட்ஸுடன் பேசினேன், டெனிஸ் லில்லி பந்தை எதிர்கொண்டேன், உலகக்கோப்பைப் போட்டிகளை பார்வையிட வந்த குண்டப்பா விஸ்வநாத்துடன் பேசினேன்.

இறுதிப் போட்டியில் தனது 38 ரன் பற்றி...

ஜொயெல் கார்னர் பந்துகள் விளையாட முடியாத தன்மையில் இருந்தது. பிட்சில் ஈரப்பதம் இருந்ததால், ஸ்விங், பவுன்ஸ் என்று கடினமாக இருந்தது. சுனில் கவாஸ்கர் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்தோம், ஆனால் மொகீந்தர் அமர்நாத்தின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை அளித்தது. நான் ஆண்டி ராபர்ட்ஸ் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆடும்போது விஸ்வநாத்தை நினைத்தேன், ஒரு கலைஞன் போல் அவர் அந்த ஷாட்டை ஆடுவார்.

ரிச்சர்ட்ஸ் கேட்சை கபில் பிடித்தது பற்றி...

ரிச்சர்ட்ஸ் அன்று ஆடிய ஆட்டம் என்ன நினைக்க வைத்தது என்றால் தேநீர் இடைவேளையுடன் ஆட்டம் முடிந்துவிடும் என்றே. அப்போது மதன்லால் வீசிய பந்து ஷாட் பிட்ச் ஆனது. ஆனால் ரிச்சர்ட்ஸ் அதனை சரியாக மட்டையுடன் தொடர்பு படுத்தவில்லை. பந்து மேலே எழும்பியது. கபில்தேவ் பின்பக்கமாக, பக்கவாட்டில் வேறு ஒடிக்கொண்டிருந்தார். டீப் ஸ்கொயர் லெக் அருகே பந்து இறங்கிக் கொண்டிருந்தது, யாஷ்பால் சர்மா வேறு பந்தைப் பிடிக்க அருகில் வந்து கொண்டிருந்தார். ஆனால், கபில் “இது என்னுடையது” என்று கத்தினார். கடும் நெருக்கடியில் மிகச்சிறந்த கேட்ச் ஒன்றை கபில் பிடித்தார். உலகக்கோப்பை வெற்றி கேட்ச் அதுவே.

வரலாற்று வெற்றிக்கு பிறகு ஹோட்டல் விடுதியில் இந்திய வம்சாவளி ரசிகர்கள் பாட்டு, டான்ஸ் என்று களைகட்டினர். அது ஒரு நம்பமுடியாத உணர்வை தந்தது.

நாங்கள் சிறந்த பீல்டிங் அணியாக இருந்தோம், உலகக்கோப்பை முழுதும் ஒரே ஒரு கேட்சைத்தான் விட்டோம். முதல் போட்டியில் மைக்கேல் ஹோல்டிங்குக்கு மொகிந்தர் அமர்நாத் ஸ்கொயர் லெக்கில் விட்ட கேட்ச்தான் அது. அதன் பிறகு ஒரு கேட்சைக் கூட விடவில்லை. நான் கவர் மற்றும் கவர் பாயிண்டில் பீல்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்து வந்தேன்.

அணி நல்ல செட்டில்டு அணியாக இருந்தோம், திலிப் வெங்சர்க்கார், ரவிசாஸ்திரி போன்ற நல்ல வீரர்களுக்குமே கடைசியில் அணியில் இடமில்லாமல் போனது.

1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மினி உலகக்கோப்பையை வென்றது பற்றி...

ஆஸ்திரேலியாவில் பிட்ச்களில் பவுன்ஸ் அதிகம் இருந்ததால் நான் பந்துகள் எழும்பும் இடத்திலிருந்தே டிரைவ் ஆடத் தொடங்கினேன். நான் கட் ஷாட், புல் ஷாட், ஹூக் ஷாட் என்று அனைத்தையும் விளையாடினேன். ஆஸ்திரேலியாவில் பேட் செய்த தருணங்களை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன்.”

என்ற ஸ்ரீகாந்த் அந்தத் தருணங்களைப் பற்றி பேசும்போது அவரது கண்களில் இன்னமும் அதே மகிழ்ச்சி, சிரிப்பு தெரிந்தது.

தமிழில்: ஆர்.முத்துக்குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்