நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் யு.ஏ.இ. அணியின் சவாலைச் சமாளித்து வென்றது ஜிம்பாப்வே.
இதன் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்து 2 புள்ளிகளைப் பெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா முதலில் யு.ஏ.இ. அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 32.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 167/5 என்று தோல்வி முகம் காட்டியது. அப்போது வில்லியம்ஸ், எர்வின் இணைந்து சுமார் 10 ஓவர்களில் அதிரடி முறையில் 83 ரன்களைச் சேர்க்க கடைசியில் ஜிம்பாப்வே 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் என்று 48 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ஆட்ட நாயகன் வில்லியம்ஸ் 76 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். யு.ஏ.இ. அணி அசோசியேட் போட்டித் தொடர்களை விட அதிக ரன்களை எடுத்தது.
யு.ஏ.இ. தொடக்க வீரர்களான அம்ஜத் அலி (7) பெரிஞ்சர் (22) ஆகியோர் ஸ்கோர் 40 ரன்களை எட்டிய போது பெவிலியன் திரும்பினர். ஆனால் அணியின் துணைக் கேப்டனும்,, 40 வயதைக் கடந்தவருமான குர்ரம் கான் (45), கிருஷ்ண சந்திரன் (34) ஆகியோர் 17 ஓவர்கள் நிலைத்து ஆடி 27 ஓவர்களில் ஸ்கோரை 122 ரன்களுக்கு உயர்த்தினர். குர்ரம் கான் வயது 43 என்பதும் பயிற்சியாளர் அகிப் ஜாவேதை விட மூத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண சந்திரன் 34 ரன்களில் மிரே பந்தில் சிகும்புராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனேயே குர்ரம் கானும் ஆட்டமிழக்க 30 ஓவர்களில் 134/4 என்று ஆனது யு.ஏ.இ.
ஆனால், அதன் பிறகு விக்கெட் கீப்பர் எஸ்.பி.பாட்டீல், ஷைமன் அன்வர் இணைந்து அடுத்த 14 ஓவர்களில் 5-வது விக்கெட்டுக்காக 82 ரன்களைச் சேர்த்தனர். ஷைமன் அன்வர் 50 பந்துகளில் ஒரு சிக்சர் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். பாட்டீல் 32 ரன்கள் எடுத்தார். இருவருமே வில்லியம்ஸ் பந்தில் வெளியேறினர். ரோஹன் முஸ்தபா 4 ரன்களில் சதரா பந்தில் அவுட் ஆக யு.ஏ.இ. ஷைமன் அன்வர் விக்கெட்டையும் சேர்த்து 232/7 என்று 44 ஓவர்கள் முடிவில் இருந்தது.
கடைசி 6 ஓவர்களில் ஜிம்பாப்வேயின் சில மோசமான பீல்டிங் மற்றும் பந்து வீச்சினால் யு.ஏ.இ. 53 ரன்களை விளாசியது. குறிப்பாக அஜ்மத் ஜாவேத் என்ற கடைசி கள வீரர் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 பந்துகளில் 25 ரன்களையும், மொகமது நவீத் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிச்கருடன் 23 ரன்களையும் விளாசினர். ஜிம்பாப்வே 15 வைடு பந்துகளுடன் 26 ரன்களை எக்ஸ்ட்ராஸ் வகையறாவில் கொடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் சதரா 3 விக்கெட்டுகளையும், மிரே, வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
யு.ஏ.இ. இன்னிங்ஸில் பவர் பிளே முக்கியமாக அமைந்தது இதில் அன்வர், பாட்டீல் இணைந்து 48 ரன்களை விளாசினர்.
ஜிம்பாப்வே 286 ரன்கள் வெற்றி இலக்கைத் திருப்திகரமாகத் தொடங்கவில்லை, காரணம் யு.ஏ.இ. வேகப்பந்து வீச்சாளர்களான அகமட் நவீத், அம்ஜத் ஜாவேத் அருமையான வேகம் மற்றும் ஸ்விங்குடன் அச்சுறுத்தினர், இதனால் 6 ஓவர்களில் 18 ரன்களே வந்தது. சிபாபா இன்று தொடக்கத்தில் இறங்காததால் சகப்வா என்பவர் சிகந்தர் ரசாவுடன் இறக்கப்பட்டார். ஒரு பந்தில் ரசா ஹெல்மெட்டில் அடி வாங்க அவருக்குள் ஆவேசம் புகுந்தது. அதன் பிறகு 6 பவுண்டரிகளையும் ஒரு ஹூக் ஷாட் சிக்சரையும் அடித்து அவர் 46 ரன்களில் மொகமட் டாகீர் பந்தில் அவுட் ஆனார். மறுமுனையில் சகப்வா போட்ட அறுவையினால் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டதால் அவுட் ஆனதாகத் தெரிகிறது.
ஜிம்பாப்வேயில் ஃபார்மில் உள்ள, அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விரைவில் 70 ரன்களுக்கும் மேல் எடுத்த மசகாட்சா 1 ரன்னில் அம்ஜத் ஜாவேதின் நேர் பந்தை, அதாவது சற்றே உள்ளே வந்த பந்தை அக்ராஸாக ஆட முயன்று எல்.பி. ஆகி வெளியேறினார். அதன் பிறகே சகாப்வாவுக்கு கொஞ்சம் ஆட்டம் பிடித்தது. அவர் 62 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு டாகீர் பந்தில் ஹிட்விக்கெட் ஆனார். பந்தைப் பின்னால் சென்று ஆடும்போது ஸ்டம்புகளை தொந்தரவு செய்தார்.
பிரெண்டன் டெய்லர் தொடக்கத்தில் தேவையில்லாத ஷாட்களைத் தேர்வு செய்தாலும் அதன் பிறகு அவர் பாணி ஆட்டத்துக்கு வர 44 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து நசீர் அஸீஸ் பந்தில் எல்.பி.ஆக ஜிம்பாப்வே 144/4 என்றும் பிறகு மிரே 9 ரன்களிலும் வெளியேற 167/5 என்றும் தோல்வி முகம் காட்டியது.
ஆனால் அங்குதான் பவர் பிளே தன் வேலையைக் காட்ட எர்வின் (42), வில்லியம்ஸ் ( 76 நாட் அவுட்) இணைந்து அதிரடி முறையில் 83 ரன்களைச் சேர்க்க கடைசி 7 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 37 ரன்களே என்ற சவுகரியமானநிலை ஏற்பட்டது. கடைசியில் 48 ஓவர்களில் ஜிம்பாப்வே வெற்றியைப் பெற்றது. யு.ஏ.இ. அணியும் 10 வைடுகளை வீசியது.
அசோசியேட் அணிகளிடத்தில் உள்ள பிரச்சினை அவர்களது பீல்டிங். மற்றும் சாதாரண ஸ்பின் பந்துவீச்சிற்கும் விக்கெட்டைக் கொடுத்துச் செல்லும் தன்மை. இந்த இரண்டையும் அந்த அணிகள் எப்படியாவது ஆட்கொண்டால் நிச்சயம் ஓரிரு அதிர்ச்சிகளை அந்த அணி அளிக்க வாய்ப்பிருக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago