டிவில்லியர்ஸ் 162 நாட் அவுட்; மே.இ.தீவுகள் 151 ஆல் அவுட்!

By இரா.முத்துக்குமார்

சிட்னியில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி, மே.இ.தீவுகள் அணியை சின்னாபின்னமாக்கி மாபெரும் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பெட் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் டிவில்லியர்ஸின் காட்டடியில் 408 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் இம்ரான் தாஹிர் (5 விக். ) பந்துவீச்சில் 33.1 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வி தழுவ, தென்னாப்பிரிக்கா அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை வரலாற்றில் 2-வது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

டிவில்லியர்ஸ் 66 பந்துகளில் 17 பவுண்டரி 8 சிக்சர்களுடன் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் மே.இ.தீவுகள் அவர் எடுத்த ரன்களையே எடுக்க முடியாமல் 151 ரன்களுக்குச் சுருண்டது. டிவில்லியர்ஸ் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம், சதம் மற்றும் 150 ரன்கள் என்ற சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார். இவை அனைத்தும் மே.இ.தீவுகளுக்கு எதிராக என்பதும் குறிப்பிடத்தக்கது. >டிவில்லியர்ஸ் 162* விளாசி சாதனை: தெ.ஆ. 408 ரன்கள் குவிப்பு

முதல் 35 ஓவர்களில் 186 ரன்கள் என்று இருந்த தென்னாப்பிரிக்க கடைசி 15 ஓவர்களில் 222 ரன்கள் விளாசித் தள்ளியது. கடைசி 20 ஓவர்கள் என்று பார்த்தால் 261 ரன்கள். படுமோசமான பந்துவீச்சு, மிகவும் கீழ்த்தரமான பீல்டிங்கினால் கோட்டைவிடப்பட்ட கேட்ச்கள் என்று மே.இ.தீவுகள் இன்று அசோசியேட் அணிகள் என்று கூறப்படும் அணிகளின் தரத்துக்கு அருகில் கூட இல்லை.

1 ரன்னில் உலகக்கோப்பை சாதனை வெற்றியை நழுவவிட்ட தென்னாப்பிரிக்கா:

63/7 என்று இருந்த மே.இ.தீவுகளை 117 ரன்களில் சுருட்டியிருந்தால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா நிகழ்த்தியிருக்கும். அது நடக்கவில்லை. சரி.150 ரன்களில் சுருட்டியிருந்தால் கூட உலகக்கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையையாவது தென்னாப்பிரிக்கா நிகழ்த்தியிருக்கும். ஆனால் 1 ரன் கூடுதலாக மே.இ.தீவுகள் எடுத்துவிட்டது. இதற்கு முன்பாக 2007 உலகக்கோப்பையில் பெர்முடா அணியை இந்தியா 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தனது மோசமான கடைசி 5 ஓவர் பந்துவீச்சில் 95 ரன்களை வாரி வழங்கிய கேப்டன் ஜேசன் ஹோல்டர், பேட்டிங்கில் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்ததே அந்த அணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். அவர் பந்து வீச்சில் 104 ரன்கள் கொடுத்தது கொடுத்ததுதான், அதற்காக தான் அடித்த 56 ரன்களை பந்துவீச்சில் கொடுத்த ரன்களிலிருந்து கழித்து விடுமாறு ஜேசன் ஹோல்டர் கேட்காமல் இருந்தால் சரி.

409 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய மே.இ.தீவுகள், தொடக்க ஓவரில் டேல் ஸ்டெய்னை எதிர்கொண்டது. டிவைன் ஸ்மித் முதல் ஓவரை எதிர்கொண்டார். 3-வது பந்தில் கெய்ல் மிட் ஆனில் 3 ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் அருமையான அவுட் ஸ்விங்கரில் டிவைன் ஸ்மித் தப்பித்தார். பந்து மட்டையைக் கடந்து சென்றது. ஆனால் 6-வது பந்தை கோபத்துடன் ஒரு விளாசு விளாசினார் ஸ்மித் பந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ். முதல் ஓவரில் 10 ரன்கள்.

அடுத்த ஓவர் கைல் அபாட் பந்துவீச வந்தார். 3-வது பந்தை ஒதுங்கிக் கொண்டு விளாச முயன்றார் கெய்ல், பந்து சிக்கவில்லை மிடில் ஸ்டம்ப் காலியானது.

சாமுயெல்ஸ் களமிறங்கி 9 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. கைல் அபாட் வீசிய பந்தை தொட்டார்.. கெட்டார். டி காக் கேட்ச் பிடித்தார். கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயை விளாசிய இரண்டு முக்கிய வீரர்களில் ஒருவர் ஒற்றை இலக்கம் மற்றொருவர் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

ஸ்மித்திற்கு தன்னிடமே வந்த கேட்சை ஸ்டெய்ன் கோட்டை விட, அடுத்த கைல் அபாட் ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரிகளை விளாசினார். மீண்டும் 8-வது ஓவரில் கைல் அபாட் வீச, இம்ரான் தாஹிர், ஸ்மித் கொடுத்த கேட்சை மிட் ஆனில் கோட்டை விட்டார்.

11-வது ஓவரில் ஸ்கோர் 50 ரன்களை எட்டியது. அப்போது கார்ட்டர், மோர்கெல் பந்தை புல்ஷாட் ஆடினார் சரியாக ஆடவில்லை மிட் ஆனில் டிவில்லியர்ஸ் அபாரமாக கேட்ச் பிடிக்க இவரும் அவுட். 12-வது ஓவரில் இம்ரான் தாஹிர் 31 ரன்கள் எடுத்த ஸ்மித்தை வெளியேற்றினார். லாங் ஆனில் மில்லர் ஓடிச் சென்று மிக அபாரமாக கேட்ச் பிடித்தார். அதே ஓவரில் சிம்மன்ஸ் 0-வில் எல்.பி.ஆகி வெளியேறினார். மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

டேரன் சாமி ஏதாவது ஒரு காட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்களில் இம்ரான் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அதே ஓவரில் ஆந்த்ரே ரசல் ரன் எடுக்கும் முன்பே கைல் அபாட்டின் ஷார்ட் தேர்ட்மேன் அபார கேட்சிற்கு அவுட் ஆகி வெளியேறினார். இம்ரான் தாஹிர் 4 ஓவர் 1 மைடன் 5 ரன்கள் 4 விக்கெட்.

63/7 என்ற நிலையிலிருந்து ஜேசன் ஹோல்டர், தினேஷ் ராம்தின் ஸ்கோரை 108 ரன்களுக்கு உயர்த்தினர். ராம்தின் 22 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிரின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார்.

ஜேசன் ஹோல்டர் தன் பந்துவீச்சை டிவில்லியர்ஸ் கிழித்து எடுத்த கோபத்தில் இருந்தார் போலும், சில அதிர்ச்சிகரமான ஷாட்களில் டேல் ஸ்டெய்ன் உட்பட அனைவரையும் விளாசி 4 சிக்சர்கள் 3 பவுண்டரி என்று 48 பந்துகளில் 56 ரன்களை விளாசி ஸ்டெய்ன் பந்தில் அவுட் ஆனார். கடைசியில் 34-வது ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டது மே.இ.தீவுகள் அணி.

5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த இம்ரான் தாஹிர் கடைசியில் ஜேசன் ஹோல்டரிடம் சிக்கியதால் 10 ஓவர்களில் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று நிறைவு பெற்றார். மோர்கெல், அபாட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டெய்ன் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்