பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் கடும் சவால் அளித்த யு.ஏ.இ. அணியை பரபரப்பான முறையில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது அயர்லாந்து.
278 ரன்கள் இலக்கைத் துரத்திய அயர்லாந்து ஒரு நேரத்தில் 38.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. விக்கெட் கீப்பர் வில்சன் மட்டுமே ஒரு முனையில் நிலைத்து ஆட அவருடன் அதன் பிறகு அதிரடி மன்னன் கெவின் ஓ பிரையன் இணைந்தார். 6 ஓவர்களில் 72 ரன்கள் விளாசப்பட்டது.
கெவின் ஓ பிரையன் 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 50 ரன்களை விளாசித் தள்ளினார். வில்சன் அபாரமாக விளையாடி 69 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார். முதலில் 97/4 என்ற நிலையில் வில்சன், பால்பர்னி ஜோடி 13 ஓவர்களில் 74 ரன்களைச் சேர்த்ததும் அயர்லாந்து வெற்றிக்கான முதல் முன்னெடுப்பாக அமைந்தது.
ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகும் கூட அடுத்தடுத்து யு.ஏ.இ. ஓயாது சவால் அளித்து மேலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 267/8 என்ற நிலையில் 15 பந்துகளில் 12 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை இருந்த போது ஆட்டம் எவர் பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலையில், 49-வது ஓவரின் 5-வது பந்தை அம்ஜ்த் நவேத் யார்க்கராக வீசாமல் ஸ்லோ பந்தாக வீச டாக்ரெல் அதனை எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஆளில்லா இடத்தில் பவுண்டரி விளாசினார்.
அந்த முக்கிய ஓவரில் 7 ரன்கள் வர கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்றானது. கடைசி ஓவரில் முதல் பந்தை கியூசக் சிங்கிள் எடுக்க, 2-வது பந்தை கவருக்கும் எக்ஸ்ட்ரா கவருக்கும் இடையே அடித்தார், சரியாக அடிக்கவில்லை, பீல்டர்கள் இருவர் கேட்ச் பிடிக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை 2 ரன்கள் ஓடினார் டாக்ரெல், அயர்லாந்து கொண்டாட்டம் தொடங்கியது.
அயர்லாந்து 2 வெற்றிகளுடன் தற்போது 4 புள்ளிகள் பெற்று காலிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
அபாரமாக பந்துவீசி அயராது முயற்சி செய்த யு.ஏ.இ.
இந்த உலகக்கோப்பையின் சிறந்த ஆட்டமாக இந்தப் போட்டியை வர்ணிக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவேதின் பயிற்சியில் யு.ஏ.இ. அருமையாக பந்துவீசியது. குறிப்பாக அம்ஜத் ஜாவேத் பந்துவீச்சு முறை அகிப் ஜாவேதை நினைவுகூர்வதாக அமைந்தது.
உண்மையில் ஆட்ட நாயகன் விருது அம்ஜத் ஜாவேதுக்கே சென்றிருக்க வேண்டும். காரணம் அவர் பேட்டிங்கில் முக்கியமான 7-வது விக்கெட் உலககோப்பை சாதனை கூட்டணியில் 35 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து பங்களிப்பு செய்ததோடு, பந்துவீச்சில் எட் ஜாய்ஸ், கெவின் ஓ பிரையன், மூனி ஆகியோரது விக்கெட்டுகளை முக்கியக் கட்டத்தில் கைப்பற்றியதோடு, 80 ரன்கள் எடுத்து அயர்லாந்து வெற்றிக்கு வித்திட்ட ஜி.சி.வில்சனை வெளியேற்ற ஒரு அருமையான கேட்சையும் பிடித்தார்.
உண்மையில் ஒரு ஆல்ரவுண்ட் திறமைதான் அம்ஜத் ஜாவேத். ஆனால் ஆட்ட நாயகன் விருது வெற்றி அணிக்கே செல்ல வேண்டும் என்ற எழுதப்படாத விதியின் படி வில்சனுக்குச் சென்றது.
முதலில் 131/6 என்ற நிலையிலிருந்து அன்வரின் சதத்துடன் 278 ரன்கள் குவித்து இதனை ஒரு சவாலாக மாற்றிய பெருமை யு.ஏ.இ.யின் திறமைக்குச் சான்று.
அதன் பிறகு அயர்லாந்தை கதிகலங்க அடித்த பந்துவீச்சு. தொடக்கத்தில் யு.ஏ.இ. வீச்சாளர் குருகே பால் ஸ்டர்லிங்கை 3 ரன்களில் வீழ்த்தினார். அவர் 7 ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில் காயமடைந்து பந்துவீச முடியாமல் போனது யு.ஏ.இ.க்கு ஒரு பின்னடைவே.
முதல் விக்கெட்டுக்குப் பிறகு எட் ஜாய்ஸ், போர்ட்டர்ஃபீல்ட் இணைந்து ஸ்கோரை இறுக்கமான பந்துவீச்சுக்கு மத்தியில் 72 ரன்களுக்கு உயர்த்தினர், ஆனால் இதற்கு 17 ஓவர்களை இவர்கள் எடுத்துக் கொண்டனர்.
ஜாய்ஸ் முதலில் வெளியேற, போர்ட்டர்ஃபீல்டை 43 வயது ஸ்பின்னர் மொகமது டாகீர் கைப்பற்றினார். போர்டர்ஃபீல்ட் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து நல்ல முறையில் ஸ்பின்னர்களையும், தூஸ்ரா போன்ற நேர் பந்துகளையும் வீசி அவர் பிரச்சினை கொடுக்க நியால் ஓ பிரையன் 17 ரன்களில் எல்.பி.ஆனார். இவர் ரிவியூ செய்தும் பயனில்லை. நேர் எல்.பி.அது. 9 ஓவர்கள் வீசிய டாகீர் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதல் வெற்றிக் கூட்டணி: வில்சன், பால்பர்னி
97/4 என்ற நிலையில் வில்சன், பால்பர்னி கூட்டணி அமைத்தனர். இருவரும் இணைந்து 13 ஓவர்களில் 74 ரன்களைச் சேர்த்தனர். இந்த நிலையில் யு.ஏ.இ. கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், இந்த கூட்டணியை உடைத்திருந்தால் யு.ஏ.இ. வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு அதிகமாகியிருக்கும். பால்பர்னி 30 ரன்கள் எடுத்தார். இதில் அவர் ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்திருந்தார்.இவர் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் மொகமது நவீத் கைப்பற்றினார். இப்போது அயர்லாந்துக்கு உண்மையில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால்...
171/5 என்ற நிலையில் கெவின் ஓ பிரையன், வில்சன் அதிரடிக் கூட்டணி;
கெவின் ஓ பிரையனுக்கு விடப்பட்ட கேட்ச்:
68 பந்துகளில் 108 ரன்கள் தேவை என்ற நிலையில் வில்சனுடன், கெவின் ஓ பிரையன் இணைந்தார். இறங்கியவுடனேயே கெவின் 2 பவுண்டரிகளை விளாசினார். இரண்டும் சக்தி வாய்ந்த பவுண்டரிகள்.
24 ரன்களை சில பந்துகளில் எடுத்து விட்ட கெவினுக்கு யு.ஏ.இ. கேட்ச் ஒன்றை கோட்டை விட்டது. அதிர்ஷ்டம் இல்லாத பவுலர் மீண்டும் அம்ஜத் ஜாவேத். பந்தை சற்றே இழுத்து விட கெவின் அதனை லாங் ஆனில் அடித்தார் அது மிஸ் ஹிட் அங்கு நின்று கொண்டிருந்த பதிலி வீரர் நசீர் அஜீஸ் கேட்சைக் கோட்டைவிட்டார். இது ஒரு பெரிய பின்னடைவாகப் போய்விட்டது. அவர் கேட்சை அல்ல ஆட்டத்தைக் கோட்டைவிட்டுள்ளார்.
அதன் பிறகு 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் (ஒரு சிக்ஸ் தோனி பாணி ஷாட்) விளாசி 25 பந்துகளில் 50 ரன்களை எட்டினார் கெவின். அவர் இறங்கும் போது 68 பந்துகளில் 108 என்று இருந்த இலக்கு ஆட்டமிழந்த பிறகு 32 பந்துகளில் 36 என்று ஆனது. அதன் பிறகும் அயராது முயன்றது யு,.ஏ.இ. ஆனால் அயர்லாந்து தன் அனுபவத்தினால் வெற்றியை 4 பந்துகள் மீதம் வைத்துப் பெற்றது.
தோல்வி பற்றி யு.ஏ.இ. கேப்டன் டாகீர் கூறும்போது, “35 ஒவர்கள் வரை சிறப்பாக வீசினோம், அதன் பிறகு லேசான பனிப்பொழிவினால் பந்து வழுக்கத் தொடங்கியது. இது ஒரு அருமையான பேட்டிங் பிட்ச். அயர்லாந்து நன்றாக விளையாடினர்.” என்றார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago