கேப்டன் பதவி யாருக்கு.. ஆஸ்திரேலிய அணியில் குழப்பம்: கிளார்க், ஸ்மித் இடையே போட்டி

By சு.வெங்கடேஷ்வரன்

உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பதவி யாருக்கு என்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அணி வீரர்கள் பலர் ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில், அணியின் பயிற்சியாளர் டேரன் லெமன், மைக்கேல் கிளார்க் கேப்டனாக தொடர் ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் கிளார்க்கை ஆதரித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்த உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் தான் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கேப்டன் பதவி குறித்து அணியில் வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மித்தின் வளர்ச்சி

25 வயதாகும் ஆல் ரவுண்டரான ஸ்டீவன் ஸ்மித் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் முதல்முறையாக இடம் பிடித்தார். 26 டெஸ்ட், 50 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது கிளார்க் காயமடைந்தார். அதன்பிறகு நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்டீவன் ஸ்மித் தற்காலிக கேப்டனாக இருந்து அணியை சிறப்பாக வழி நடத்தினார். அதன் பிறகு முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜார்ஜ் பெய்லிக்கு பதிலாக ஒரு போட்டியில் கேப்டனாக இருந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அவர் கேப்டனாக பொறுப்பேற்ற எந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடையவில்லை. கேப்டனாக களமிறங்கிய போட்டிகளில் அவரது பேட்டிங்கும் அற்புதமாக அமைந்தது. இதனால் அவர் அனைவரது கவனத்தையும் பெற்றார். ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கேப்டன் கிளார்க் காயம் காரணமாக உலகக் கோப்பையில் களமிறங்குவது சந்தேகம் என்று கூறப்பட்ட நிலையில், அடுத்த கேப்டனாக ஸ்மித்தை நியமிக்க வேண்டுமென்று அணி வீரர்கள் பலரும் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து உலகக் கோப்பையில் விளையாடும் அணியில் கிளார்க் இடம் பெறுவதே கேள்விக்குறியானது.

கிளார்க்கின் மனநிலை

இருநாட்களுக்கு முன்பு கிளார்க் ஆஸ்திரேலிய வானொலிக்கு பேட்டியளித்தார். அதில், நான் கேப்டனாக இருப்பதைவிட ஸ்மித் கேப்டனாக இருப்பதைத்தான் அணியில் பிற வீரர்கள் விரும்புகிறார்கள் என்று கூறப்படுவது தவறான தகவல்.

ஸ்மித்தும் நானும் சிறந்த நண்பர்கள். இனியும் அப்படியே இருப்போம். உலகக் கோப்பையில் கேப்டன் யார், களமிறங்கும் வீரர்கள் யார் என்பதை அணி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். ஸ்மித்தை கேப்டனாக நியமித்தால் அவரது தலைமையில் விளையாட நான் தயாராக இருக்கிறேன் என்று கிளார்க் கூறினார்.

காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க போராடி வரும் அவர், தனக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை அணியில் ஒரு வீரராக கிடைக்க விளையாட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் என்பதை வெளிக்காட்டுவதாக இந்த பேட்டி அமைந்தது.

எனினும் இது தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

பயிற்சியாளரின் உறுதி

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லெமன், கிளார்க் தான் கேப்டன் என்று உறுதிபடக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது:

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் காயத்தில் இருந்து மீண்டும் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். உலகக் கோப்பை போட்டியில் அவர்தான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கேப்டன் பதவி குறித்து அணியில் எந்த சர்ச்சையும் இல்லை என்றார்.

முன்னாள் வீரர்கள் கருத்து

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவும் கிளார்க்குக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித் துள்ளார். அதில், மைக்கேல் கிளார்க் இல்லாமல் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

12 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணி மோசமான நிலையில் இருந்தது. கிளார்க் தலைமையில்தான் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 5-0 என்றும், தென் ஆப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணிலும் வீழ்த்த முடிந்தது என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டு போல மாற்றிவிடக் கூடாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்