1979 உலகக்கோப்பை.. வாய்ப்பை நழுவ விட்ட அணிகள்

By ஆர்.முத்துக்குமார்

இந்தியாவின் 1979 உலகக் கோப்பை ஆட்டங்கள் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் முடிந்துவிட்ட நிலையில், அப்போது அடுத்த எதிர்பார்ப்பு பாகிஸ்தான் அணியாகவே இந்திய ரசிகர்கள் மனதில் இருந்தது.

முதல் அரையிறுதி ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே ஜூன் 20, 1979 அன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மார்க் பர்ஜஸ் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ரிச்சர்ட் ஹாட்லி, ட்ரூப், லான்ஸ் கெய்ன்ஸ் ஆகியோர் இங்கிலாந்து வீரர்களுக்கு அதிகத் தொல்லைகள் கொடுத்தனர்.

கேப்டன் மைக் பிரியர்லி ஆமை வேகத் தில் 115 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கோனி பந்தை கட் செய்ய முயன்று அவுட் ஆனார். ஸ்டைலிஷ் இடது கை பேட்ஸ்மென் டேவிட் கோவர் 1 ரன்னில் லான்ஸ் கெய்ன்சின் அபார த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து 98/4 என்று தடுமாறியது. ஆனால், அதன் பிறகு கிரகாம் கூச், இயன் போத்தம் தைரியமான சில ஷாட்களை ஆடினர்.

அந்த 3 ஓவர்கள்

கடைசிக் கட்டத்தில் டெரிக் ராண்டால் 50 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். கடைசி 3 ஓவர்களில் 25 ரன்கள் எடுக்கப் பட்டது. இதுதான் இந்தப் போட்டியின் முக்கிய அம்சம். ஏனெனில் நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி வாய்ப்பைக் கோட்டை விட்டது.

இலக்கைத் துரத்திய போது டெஸ்ட் போட்டி பாணியில்தான் ஜான் ரைட், புரூஸ் எட்கர் ஆடினார்கள். நம் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக 69 ரன்கள் எடுத்தார். ஆனால் அப்போதைய உலகின் சிறந்த பீல்டராக கருதப்பட்ட டெரிக் ராண்டல், ஜான் ரைட் ரன் அவுட் ஆவதற்குக் காரணமானார். கேப்டன் மார்க் பர்ஜஸ் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ராண்டல் அவரையும் ரன் அவுட் செய்தார்.

அதன் பிறகு திக்கித் திணறி முன்னேறிய நியூசிலாந்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில் வந்து நின்றது. போத்தம் அலட்டிக்கொள்ளாமல் பந்து வீசி நியூசிலாந்தை வெளியேற்றினார். ஆட்ட நாயகன் கூச்.

வாய்ப்பைத் தவறவிட்ட பாகிஸ்தான்

2-வது அரையிறுதி பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் இடையே நடந்தது. இது ஒரு த்ரில்லர் என்றே சொல்ல வேண்டும். வெற்றி வாய்ப்பைத் தனக்கே உரிய பாணியில் பாகிஸ்தான் கோட்டை விட்ட போட்டி இது. அதே சமயம், நெருக்கடியிலிருந்து மீண்டெழும் தனது வலிமையை மே.இ.தீவுகள் அணி நிரூபித்தது.

நியூசிலாந்து செய்த அதே தவறைத்தான் பாக். கேப்டன் ஆசிப் இக்பாலும் செய்தார். டாஸ் வென்று அனைத்து மட்டையாளர்களும் ஃபார்மில் உள்ள மே.இ.தீவுகள் அணியை பேட் செய்ய அழைத்தார். இம்ரான், சர்பராஸ் நவாஸ், சிகந்தர் பக்த் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்காக 132 ரன்களைச் சேர்ப்பதைத் தடுக்க முடியவில்லை.

கேப்டன் ஆசிப் இக்பால் முதல் 4 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆனால் அதற்கு முன்னரே ரிச்சர்ட்ஸ், லாய்ட் அடித்து ஆடத் தொடங்கிவிட்டனர். காலின்ஸ் கிங் 25 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். கிரீனிட்ஜ் பிரமாதமாக விளையாடி 107 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 73 ரன்கள் எடுத்தார். ஹெய்ன்ஸ் 65. 60 ஓவர்களில் மே.இ.தீவுகள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது.

மஜித் கான், சாதிக் மொகமது தொடக்க வீரர்களாக களமிறங்க, முதலில் சாதிக் முகமதை (2) மைக்கேல் ஹோல்டிங் வீழ்த்தினார். மஜித்துடன் ஜாகீர் அப்பாஸ் துணை சேர்ந்தார். அன்று இவர்கள் ஆடிய ஆட்டம் உலகக் கோப்பையில் சிறந்த ஜோடி ஆட்டமாகும். இருவரும் ஹோல்டிங், ராபர்ட்ஸ், கார்னர், கிராஃப்ட், கிங்ஸ் ஆகியோரின் பந்து வீச்சை அதிஅற்புதமாக விளையாடினர். 36 ஓவர்களில் 166 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீசின் பீல்டிங்கில் குறை இருந்தது.

மஜித் கான் அப்போது உலகில் ஒரு தலை சிறந்த தொடக்க வீரர்.

துணைக் கண்டத்தில் சுனில் கவாஸ்கர், மஜித் கான் ஆகியோர் உலக அணிகளின் மரியாதையைப் பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட மஜித் கானுக்கு 10 ரன்னில் கார்டன் கிரீனிட்ஜ், ஹோல்டிங் பந்தில் கேட்சை விட்டார். மஜித் கான் 81, ஜாகீர் அப்பாஸ் 93. வெற்றிக்குத் தேவை 118 ரன்களே.

திருப்பம் தந்த மாற்றம்

அப்போது கிளைவ் லாய்ட் விவ் ரிச்சர்ட்ஸை அழைத்து ஆஃப் ஸ்பின் வீசச் செய்தார். ரிச்சர்ட்ஸ் முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்தார். மறு முனையில் காலின் கிராஃப்ட், ஜாகீர் அப்பாஸை 93 ரன்களில் வீழ்த்தினார். மஜித் 81 ரன்களில் இருந்தபோது கிராப்ட் அவரையும் வீழ்த்தி, பிறகு ஜாவேத் மியாண்டட் (0) விக்கெட்டையும் வீழ்த்த 187/4 என்று ஆட்டம் திசை திரும்பியது. ரிச்சர்ட்ஸ் முடாசர் நாசர், இம்ரான், ஆசிப் இக்பால் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினார்.

250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைக் கோட்டை விட்டது பாகிஸ்தான். 74 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதாவது வெற்றி பெறும் நிலையிலிருந்து தோற்பது, தோற்கத்தான் போகிறார்கள் என்று நினைக்கும்போது அசாத்திய வெற்றியை ஈட்டுவது என்னும் பாகிஸ்தான் அணியின் குணாதிசியம் இன்று வரை நீடித்துவருகிறது.

பாகிஸ்தான் அதன் பிறகு உலகக் கோப்பையை வெல்ல 13 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்