கேப்டவுனில் நேற்று இரவு நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா-மே.இ.தீவுகளுகு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியில் மே.இ.தீவுகள் வெற்றி பெற்றது.
ஆம்லா, டிவிலியர்ஸ், டேல் ஸ்டெய்ன், மோர்கெல் என்று முன்னிலை வீரர்கள் இல்லாத அணியை டு பிளேசி வழிநடத்தினார். மே.இ.தீவுகளுக்கு டேரன் சமி கேப்டன்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. டுபிளேசி 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 பந்துகளில் 38 ரன்கள் விளாசி அவுட் ஆனார். புதிய அதிரடி வீரர் ரூஸோ 40 பந்துகளில் 51 ரன்களை எடுக்க பிஹார்டீன் 18 ரன்களையும் டேவிட் மில்லர் 24 ரன்களையும் எடுத்தனர். மே.இ.தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர் அபாரமாக வீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணியில் டிவைன் ஸ்மித், காட்டடி மன்னன் கிறிஸ் கெய்ல் களமிறங்கினர்.
கெய்ல் சிக்சர் மழை:
முதல் ஓவரை அபாட் வீச அமைதியாக 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் 2-வது ஓவரை வீச வந்தார் வேகப்பந்து வீச்சாளர் கேகிஸோ ரபதா. இவர் 3 சர்வதேச போட்டிகளில்தான் ஆடியுள்ளார். இங்கு வந்து கிறிஸ் கெய்ல் போன்ற ஒரு ஆகிருதிக்கு வீசுவது என்றால் சும்மாவா?
ஆனால் 2வது பந்து கெய்ல் பேட்டின் எட்ஜைக் கடந்து சென்றது. 4-வது பந்து பயங்கர பவுன்சர், ஹுக் ஆட முயன்றார் கெய்ல் பந்து சிக்காமல் 4 பை ரன்களானது.
இனிமேல் சரிப்பட்டு வராது, ‘ஆரம்பிச்சுர வேண்டியதுதான்’ என்று முடிவெடுத்தார் கெய்ல், நல்ல லெந்தில் விழுந்த பந்து லாங் ஆனில் காணாமல் போனது. கடைசி பந்துக்கு ஒதுங்கிக் கொண்டு ஒரே அடி சைட் ஸ்க்ரீனுக்கு மேலாக பந்து அலறியது.
3-வது ஓவரை அபாட் மீண்டும் வீச 6-வது பந்து இம்முறை லாங் ஆஃபில் பார்வையாளர்கள் பகுதியில் போய் விழுந்தது.
4-வது ஓவர் மீண்டும் ரபதா சிக்கினார். பாயிண்டில் பவுண்டரி, பிறகு லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு மீண்டும் லாங் ஆஃபில் சிக்ஸ். மீண்டும் மிட் ஆனில் பந்து பவுண்டரிக்கு பறந்தது. 4 ஓவர்களில் 46. கெய்ல் 13 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள்.
6-வது ஓவரை வீச வந்தார். உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வெய்ன் பார்னெல். முதலில் ஸ்மித் அவரை 2 பவுண்டரிகள் விளாசி பிறகு சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை கெய்லிடம் கொடுக்க, பார்னெல் ‘மூச்சுத் திணற திணற’ கெய்ல் அவரது பந்து வீச்சை சிதறடித்தார். 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர். கடைசி பவுண்டரியை பாயிண்டில் அடிக்க 17 பந்துகளில் அரைசதம் எடுத்து புதிய மே.இ.தீவுகள் டி20 சாதனை புரிந்தார்.
6 ஓவர்கள்தான் முடிந்திருந்தது ஸ்கோர் 78 ரன்கள் இதில் கெய்ல் மட்டும் 53 ரன்கள். அப்போது ஸ்மித்திற்கு இம்ரான் தாஹிர் பந்தில் எல்.பி கொடுக்கப்பட்டது. ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றார் பந்து மட்டையில் படவில்லை. ஆனால் கிளவ்வில் பட்டது. நடுவர் தெரியாமல் அவுட் கொடுத்தார்.
அதன் பிறகு கெய்ல் கொஞ்சம் சாந்தமானார். ஆனால் இம்ரான் தாஹீர் பந்தை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார்.
11-வது ஓவரில் மீண்டும் இம்ரான் தாஹிர் கெய்லிடம் சிக்கினார். லாங் ஆஃபில் சிக்ஸ். அடுத்த பந்து ஸ்லாக் ஸ்வீப் செய்தார் கெய்ல், பந்து தரைக்கு மேல் கொஞ்சம் உயரத்திலேயே சிக்சருக்குப் பறந்தது. சக்தி வாய்ந்த ஷாட்டாக அது அமைந்தது.
31 பந்துகளில் 5 பவுண்டரி 8 சிக்சர்களுடன் 77 ரன்களை விளாசிய எடுத்த கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிரை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று விக்கெட் கீப்பர் வான் விக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனர். 11 ஓவர்களில் 114/2 என்று வெற்றிபெறுவதை தவிர மே.இ.தீவுகளுக்கு வேறு வழியில்லை என்ற நிலையில் விட்டுச் சென்றார்.
ஆட்டம் கொஞ்சம் தென் ஆப்பிரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வர பிராவோ, சாமுயெல்ஸ் இணைந்து ஸ்கோரை 15.1 ஓவரில் 147 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது பிராவோ (8), சாமுயெல்ஸ் (41), ஆந்த்ரே ரசல், தினேஷ் ராம்தின் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 19.1 ஓவரில் 164/6 என்று லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனால் வெற்றி பெற 1 ரன் மட்டுமே தேவையான் நிலையில் பொலார்ட் அடுத்த பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்து வெற்றிபெறச் செய்தார்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மே.இ.தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago