டெக்சாஸ் ஓபன்: இறுதிச்சுற்றில் பலிக்கல்

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சர்வதேச தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் தீபிகா பலிக்கல் 11-7 11-13, 13-11, 10-12, 11-4 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள அயர்லாந்தின் மேட்லின் பெர்ரியைத் தோற்கடித்தார். இதன்மூலம் தனது ஸ்குவாஷ் வாழ்க்கையில் மிகப்பெரிய போட்டியின் இறுதிச்சுற்றை உறுதி செய்துள்ளார் பலிக்கல்.

இதுவரை பெர்ரியுடன் 4 போட்டிகளில் மோதியுள்ள தீபிகா பலிக்கல், 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் அவருக்கு இது 12-வது இறுதிச்சுற்றாகும்.

தீபிகா பலிக்கல் தனது இறுதிச்சுற்றில் எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை சந்திக்கிறார்.

வெற்றி குறித்துப் பேசிய பலிக்கல், “இது மற்றொரு கடினமான போட்டி. மிகக் கடுமையாகப் போராடியே வெற்றி பெற்றிருக்கிறேன். அவர் கடுமையான சவாலை அளிப்பார் என்பது எனக்குத் தெரியும்.

நான் எனது ஆட்ட உத்தியை திறம்பட செயல்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது. ஷெர்பினியுடனான இறுதிச்சுற்று சவாலாக இருக்கும். அவர் மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்குவார். ஆனாலும் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை சிறப்பாக விளையாடியிருக்கிறேன். இறுதியாட்டத்திலும் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE