லண்டன் லார்ட்ஸ் மைதானம். இலக்கு 184. ஆடுவது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மூன்று நாட்களுக்கு முன்புதான் கிட்டத்தட்ட இதே அளவு இலக்கைச் சர்வசாதாரணமாக அடித்து தூள் கிளப்பியிருந்தது அந்த அணி. இறுதிப் போட்டியில் இந்தியாவை 183 ரன்களுக்குள் சுருட்டியதுமே மே.இ. அணிக்குக் கோப்பை கைக்கு வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது.
மே.இ. தீவுகள் அணியின் ஓய்வறையில் இருந்த மனநிலையைப் பற்றி உறுதிப்படுத்தப்படாத சம்பவம் ஒன்று சொல்லப்படுவதுண்டு. 184 ரன்தானே, ஹெய்ன்ஸும் கிரீனிட்ஜும் அடித்துவிடுவார்கள், அவர்கள் மிச்சம் வைத்தால் அடுத்து ரிச்சர்ட்ஸும் கோம்ஸும் பார்த்துக்கொள்வார்கள், நான் ஷாப்பிங் போகிறேன் என்று பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல் சொன்னாராம்.
இந்த ரன்னுக்கெல்லாம் தான் களம் இறங்க வேண்டியிருக்காது என்று நினைத்தது மார்ஷலின் தவறு அல்ல. அவரை இறங்கவைத்தது முன்னணி மட்டையாளர்களின் தவறு.
ஸ்ரீகாந்தின் அதிரடி
டாஸ் வென்ற லாயிட்ஸ் இந்தியாவை பேட்டிங் செய்யப் பணித்தார். கவாஸ்கர் விரைவில் ஆட்டமிழந்தாலும் ஸ்ரீகாந்த் ஆக்ரோஷமாக ஆடி 38 ரன் எடுத்தார். ஆன்டி ராபர்ட்ஸின் பவுன்சர்களில் அவர் பவுண்டரியும் சிக்சரும் அடித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஆனால் மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. பந்து வீச்சின் உக்கிரம் யாரையும் நிற்கவிடவில்லை. அமர்நாத்தும் (28) சந்தீப் பாட்டீலும் (27) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார்கள். அவர்களுக்கு அடுத்து அதிக ரன்கள் (20) வந்தது உபரிகள் மூலமாகத்தான்.
54.4 ஓவர்களில் 183க்கு இந்தியா ஆட்டமிழந்த பிறகு மே.இ. அணியின் உற்சகம் கரைபுரண்டது. ஹெய்ன்ஸும் கிரீனிட்ஜும் பதற்றமில்லாமல் ஆடத் தொடங்கினர். ரன்கள் குறைவாக இருந்ததால் விக்கெட்களை வீழ்த்தினால்தான் விமோசனம் என்பதால் டெஸ்ட் போட்டியைப் போலத் தாக்குதல் வியூகம் அமைத்தார் கபில்.
ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பல்வீந்தர் சிங் சந்து வீசிய ஒரு ஒரு பந்தை ஆட விரும்பாமல் கிரீனிட்ஜ் மட்டையை உயர்த்தினார். அது இன்ஸ்விங்கர் என்பதை அவர் கணிக்கவில்லை. கிரீனிட்ஜின் கை உயர்த்தியிருக்க, பந்து உள்ளே புகுந்து ஆஃப் ஸ்டெம்பைச் சாய்த்தது. இந்தியாவின் நம்பிக்கை துளிர்த்தது. ஸ்கோர் 5-1.
மறக்க முடியாத கேட்ச்
ஆனால் 50 ரன்களை எட்டும்வரை அடுத்த விக்கெட் விழவில்லை. ரிச்சர்ட்ஸும் ஹெய்ன்ஸும் அலட்டிக்கொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக ரிச்சர்ட்ஸ் வழக்கமான அதிரடியை மேற்கொண்டார். 28 பந்துகளில் 33 ரன் அடித்தார். ரிச்சர்ட்ஸ் ஆடிய ஆட்டம் இந்திய அணியினரின் ஊக்கத்தை அடித்துத் துரத்துவதுபோல இருந்தது. ஸ்கோர் 50ஆக இருக்கும்போது ஹெயின்ஸ் (13) ஆட்டமிழந்தாலும் ரிச்சர்ட்ஸின் தாண்டவத்தைப் பார்க்கும்போது ஆட்டம் முடிந்தது என்றே தோன்றியது.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மதன்லாலின் பந்து ஒன்றை ரிச்சர்ட்ஸ் புல் ஷாட் அடித்தார். பந்தின் தையல் பகுதி தரையில் பட்டதில் பந்து எழும்பியதும் சற்றுத் திசை மாறியது. மட்டையின் மத்தியில் படாமல் சற்றே மேலே பட்டு உயர எழும்பியது. மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த கபில் தலையை அண்ணாந்து பந்தைப் பார்த்தபடி பின்னால் ஓடினார். பந்து பறந்த திசையைக் கணித்தபடி ஓடினார். பந்து விழும் இடத்தைச் சரியாகக் கணித்து கேட்ச் பிடித்தார். அப்போது ஸ்கோர் 57-3. இந்திய அணியினரின் நம்பிக்கை புத்துயிர் பெற்றது.
ஸ்கோர் 66 ஆக இருக்கும்போது கோம்ஸும் லாயிடும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து பேச்சஸ் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 76-6. அடுத்து ஜோடி சேர்ந்த ஜெஃப் துஜோனும் மார்ஷலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொறுமை காட்டினார்கள். இவர்கள் இருவரும் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார்கள். மே.இ. அணி 100 ரன்களைக் கடந்தது. நெருக்கடியையும் அது கடந்துவிடும் என்று தோன்றியது.
அப்போது மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அமர்நாத்தின் புதிரான பந்து வீச்சு துஜோனின் ஸ்டெம்பைத் தட்டிச் சென்றது. துஜோன் நொந்துபோனார். அணியின் நிலை மீள முடியாத கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உணர்ந்த அவர் பெரும் வேதனையுடன் பெவிலியன் திரும்பியதை அவரது உடல் மொழி உணர்த்தியது. அதைவிட வேதனையான தருணம் அவருக்குக் களத்தில் வாய்த்திருக்காது என்று சொல்லலாம்.
ஸ்கோர் 119-7. ஷாப்பிங் போக ஆசைப்பட்ட மார்ஷலும் அமர்நாத்தின் வீச்சில் கவாஸ்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்கோர் 125-8. அடுத்து ராபர்ட்ஸ் விக்கெட்டை கபில் சாய்க்க, ஹோல்டிங்கை அமர்நாத் வெளியேற்றினார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்.
இந்திய ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. இந்திய அணியினர் பொங்கி வந்த ஷாம்பெயின் நுரையில் மிதந்தார்கள். கோப்பையைக் கையில் ஏந்தியபடி கபில் நிற்கும் காட்சி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சித்திரங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது.
அந்தக் கோப்பை இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றியது. இந்தியாவில் கிரிக்கெட்டின் வீச்சைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்தது. ஒரு விதத்தில் கிரிக்கெட் இன்று இருக்கும் நிலைக்கு அஸ்திவாரம் என்றுகூட அந்த வெற்றியைச் சொல்லலாம். வேறு எந்த வெற்றியும் கிரிக்கெட் வரலாற்றை இந்த அளவுக்கு மாற்றி எழுதவில்லை.
கூட்டாகப் பெற்ற வெற்றி
கோப்பையை வென்ற பெருமையில் கபிலுக்கே முதல் மரியாதை. மட்டையிலும் பந்து வீச்சிலும் வியூகம் அமைப்பதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆனால் மற்றவர்களின் பங்கும் முக்கியமானதுதான். குறிப்பாகப் பந்து வீச்சாளர்கள்.
தொடர் முழுவதும் முன்னணிப் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு 4 ரன்னுக்கும் குறைவாகவே தந்தார்கள். ஸ்ரீகாந்த், சந்தீப் பாட்டீலின் அதிரடி, அமர்நாத், யாஷ்பாலின் ஸ்திரமான ரன் குவிப்பு, கிர்மானியின் விக்கெட் கீப்பிங் என அனைத்தும் சிறப்பாக அமைந்த தொடர் அது. அனைவரும் சிறப்பாக ஃபீல்டிங் செய்தார்கள்.
மதியூக வியூகம்
இறுதிப் போட்டி பற்றிப் பேசும்போது பின்னாளில் ஸ்ரீகாந்த் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். கிளைவ் லாயிடுக்குக் காலில் அடிபட்டிருந்தது. அவர் முன் காலில் வந்து ஆடுவதற்குச் சிரமப்பட்டார். அதைக் கவனித்த இந்திய வீச்சாளர்கள் அவர் முன்னால் வந்து ஆடும் விதமாகவே பந்து வீசினார்கள். ரிச்சர்ட்ஸ் அவுட் ஆன நிலையில் சற்றே நெருக்கடிக்குள்ளான லாயிட் சிரமப்பட்டு ஆடிக்கொண்டிருந்தார்.
பின்னி வீசிய பந்தை முன்னால் வந்து அவர் அடித்த ஒரு ட்ரைவ் அவர் எதிர்பார்த்தபடி அமையாமல் மிட் ஆஃப் திசையில் இருந்த கபிலின் கையில் கேட்சாக மாறியது. லாயிட் ரிச்சர்ட்ஸைப் போன்ற மட்டையாளர் அல்ல என்றாலும் மிகவும் ஸ்திரமாக நின்று ஆடக்கூடியவர். அவரை வீழ்த்தத் தாமதமாகியிருந்தால் போட்டியை அவர் திசைதிருப்பியிருப்பார் என்பதால் இதுவும் முக்கியமான திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago