1975.. உலகக் கோப்பையின் முதல் மகுடம்!

By ஆர்.முத்துக்குமார்

1975 ஜூன் 21. லார்ட்ஸ் மைதானம். முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. ரசிகர்கள் வெள்ளத்தில் மைதானம் களை கட்டியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்கமே நாடகம்போல அமைந்தது. மே.இ.தீவுகள் அதிரடி தொடக்க வீரர் ராய் பிரெடெரிக்ஸ், 7 ரன்கள் எடுத்திருந்தபோது டெனிஸ் லில்லி வீசிய பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தார். ஆனால் ஷாட்டை முடிக்கும்போது பேலன்ஸ் தவறி ஸ்டம்ப்களை மிதிக்க, ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார். கார்டன் கிரீனிட்ஜ், ஆல்வின் காளிச்சரன் ஆகியோரும் சொற்ப

ரன்களில் தாம்சன், கில்மர் ஆகியோர் பந்தில் வெளியேற, 50/3 என்று ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகத் திரும்பியது.

லாயிட் என்னும் நாயகன்

அப்போது களமிறங்கினார் கிளைவ் லாய்ட். ரோஹன் கன்ஹாயும் இவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 149 ரன்களைச் சேர்த்தனர். லாய்ட் இறங்கிய சில ஓவர்களுக்குப் பிறகு டெனிஸ் லில்லியைப் பந்து வீச அழைத்தார் இயன் சாப்பல். மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார் லாய்ட். அதற்கு பதிலடியாக எகிறு பந்தை லில்லி வீச, லாயிடின் ஆவேசமான அடி அந்தப் பந்தை ஸ்கொயர் லெக்கில் டேவார்ன் ஸ்டாண்டுக்கு அனுப்பிவைத்தது.

26 ரன்களில் இருந்தபோது லில்லி வீசிய எகிறு பந்தை ஹூக் செய்தார் லாயிட். அது கேட்சாகச் சென்றது அதனை ராஸ் எட்வர்ட்ஸ் பிடிக்க முயன்று தோற்றார். அதன் பிறகு லாய்டை ஒன்றும் செய்ய முடியவில்லை. கன்ஹாயும். லாய்டும் 49 பந்துகளில் அரைசதக் கூட்டணி அமைத்தனர். அதில் கன்ஹாயின் பங்களிப்பு வெறும் 6 ரன்கள்.

ஆஸ்திரேலிய வீச்சாளர் மேக்ஸ் வாக்கர் முதல் 7 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். பின்பு லாய்டிடம் சிக்கியதில் அடுத்த 5 ஓவர்களில் 49 ரன்களைக் கொடுத்தார். 89 நிமிடங்களில் 100 ரன்கள் சேர்க்கப்பட்டன. இப்போது தோனி அடித்தால் எப்படி பந்துகள் சீறிப் பறக்கின்றனவோ அப்போது லாய்ட் அடித்த பந்துகள் அப்படிச் சீறிப் பாயும். லாய்ட் 82 பந்துகளில் சதம் கண்டார். 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 102 ரன்களை எடுத்து கில்மர் பந்தில் லெக் திசையில் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். ஆனால் அவரது மட்டைக்கும் பந்துக்கும் சம்பந்தமேயில்லை என்பது வேறு கதை.

இந்த இன்னிங்ஸ் பற்றி பிற்பாடு வர்ணித்த லாய்ட், “முதல் பந்திலிருந்தே பந்து நடு மட்டையில் வாகாகப் படத் தொடங்கியது. இது ஒரு அரிதான நிகழ்வு, இதனால் இது என்னுடைய தினம் என்று முடிவெடுத்து ஆடினேன்” என்றார். மேற்கிந்தியத் தீவுகள் 60 ஓவர்களில் 291/8. ஆஸ்திரேலியாவின் கேரி கில்மர் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நிலைகுலைந்த ஆஸ்திரேலியா

இலக்கைத் துரத்த ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆலன் டர்னர், ரிக் மெக்காஸ்கர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் மெக்காஸ்கர் 7 ரன்களில் வெளியேறினார். டர்னர் (40) இயன் சாப்பல் (62) ஸ்கோரை 81 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது விவியன் ரிச்சர்ட்ஸின் அபார த்ரோவுக்கு ஆலன் டர்னர் வீழ்ந்தார்.

பிறகு இயன் சாப்பல், கிரெக் சாப்பல் ஆகியோரையும் தனது அசாத்திய ஃபீல்டிங் மற்றும் த்ரோவினால் ரிச்சர்ட்ஸ் ரன் அவுட் செய்தார். பேட்டிங்கில் சாதித்த கிளவி, லாய்ட் பந்து வீசி 12 ஓவர்களில் 38 ரன்களையே விட்டுக் கொடுத்தார். அதில் டக் வால்ட்டர்ஸ் (35) விக்கெட்டையும் கைப்பற்றினார்.

கீத் பாய்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா ஸ்கோர் 233/9 என்று ஆனது. ஆனால் முதல் உலகக் கோப்பையை அவ்வளவு எளிதாக வெல்ல விடுமா ஆஸி.?

அப்போது ஜோடி சேர்ந்தனர் லில்லியும் தாம்சனும். 59-வது ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்கையில் ஸ்கோர் 274/9 என்று த்ரில் முடிவுக்காக காத்திருந்தது. ஆனால் 21 ரன்கள் எடுத்த தாம்சனும் ரன் அவுட் ஆனார். 274 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் புகழ்பெற்ற காட்சியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து மேற்கிந்திய வீரர்களைச் சூழ்ந்தனர். எங்கும் ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளம். மே.இ.தீவுகள் வீரர்களிடத்தில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.

ஆட்ட நாயகனாக கிளைவ் லாய்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர்களில் 5 பேர் ரன் அவுட். இது பற்றி இயன் சாப்பல் ஓய்வறையில் அன்று பாடம் எடுத்ததாக மே.இ.தீவுகள் வர்ணனையாளர் டோனி கோசியர் பிற்பாடு குறிப்பிட்டார்.

உலகக் கோப்பையை இழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இயன் சாப்பல் கூறுகையில், உலகக் கோப்பை முடிந்தவுடன் நடைபெற்ற ஆஷஸ் தொடரே தனது கவனம் என்று கூறினார். ஒரு நாள் கிரிக்கெட் அதன் மழலைப் பருவத்தில் இருந்த காலகட்டம் என்பதால் இயன் சாப்பல் தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார்.

ஆனாலும்... ஆஸ்திரேலிய மனநிலை தோல்வியை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனம் அல்ல என்பது நமக்கு இப்போது நன்றாகவே பழக்கமான ஒரு விஷயம். அபாரமாக நடத்தப்பட்ட இந்த 1975 உலகக் கோப்பை அதன் பிறகு நடத்தப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளுக்கான எடுத்துக்காட்டாக அமைந்தாலும் அதில் ஒரு பெரிய குறை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ரசிகர்கள் பார்க்க விரும்பி ஏங்கிய வீரர் மே.இ.தீவுகளின் கேரி சோபர்ஸ். அவர் இதில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது கிரிக்கெட்டிற்குப் பேரிழப்பே.

மொத்தம் 15 போட்டிகளுக்கு வந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரம். இரண்டு லட்சம் பவுண்டுகளுக்கு மேல் வசூல். இறுதிப் போட்டியை மட்டும் 26 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். 66 ஆயிரம் பவுண்டுகள் வசூல். வெற்றி பெற்ற மேற்கிந்திய அணிக்குப் பரிசுத் தொகை 4 ஆயிரம் பவுண்டுகள். தோற்ற ஆஸ்திரேலியாவுக்கு 2 ஆயிரம் பவுண்டுகள் பரிசுத் தொகை. அரையிறுதி வந்த அணிகளுக்குத் தலா ஆயிரம் பவுண்டுகள்.

1975 உலகக் கோப்பைப் போட்டிகளின் ஆட்டத்தின் தரம் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான பொதுமையான தரமாக இருக்க வேண்டும் என்பதே லட்சியம். அதன் பிறகு ஏகப்பட்ட மாற்றங்களைக் கடந்து வந்து விட்டது ஒருநாள் போட்டிகள். ஆனால் தரம்...?

(தொடர்ந்து பயணிப்போம்…)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்