கடைசி ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை!
141 ரன்கள் என்கிற எளிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, சென்னையின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறியது.
அபிஷேக் நாயர் 5 ரன்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆக, தொடர்ந்து ஆடிய ரஹானே 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தனது முதல் ஓவரை வீச வந்த ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை திக்குமுக்காட வைத்தார்.
அந்த நிலையிலும் சராசரியாக ஒரு ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானுக்கு தேவையாக இருந்தது. ஆனால் சென்னையின் பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்துவீசி ராஜஸ்தானின் ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இறுதி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட ராஜஸ்தான் அணியிடம் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது. கடைசி ஓவரை தவான் குல்கர்னி, அஸ்வினின் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் விளாச, ஆட்டம் எப்படியும் முடியலாம் என்று நிலை தலைகீழாக மாறியது.
ஆனால் 5-வது பந்தில் குல்கர்னி இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தபோது மற்றோரு முனையில் இருந்த டாம்பே ரன் அவுட் ஆனார். இதனால் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது.
ராஜஸ்தான் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை அணிக்கு அதிகபட்சமாக ஜடேஜா 33 ரன்கள் தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மெக்கல்லம் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஸ்மித் 27 பந்துகளில், 6 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன், அதிவேகமாக அரை சதத்தைக் தொட்டார். ஆனால் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சென்னை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
இறுதியில் ஜடேஜாவின் ஆட்டத்தால் சென்னை அணி, 140 ரன்கள் என்ற மரியாதைக்குரிய ஸ்கோரை எட்டியது. ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்திருந்தார்.