இந்தியாவும் இங்கிலாந்தும் மோதிய அதே தினத்தில் ஆஸ்திரேலியா இயன் சாப்பல் தலைமையில் ஆசிப் இக்பால் தலைமையிலான பாகிஸ் தானை 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போதெல்லாம் பாகிஸ்தானின் மிகப் பெரிய வீரர், அந்த அணியின் தொடக்க வீரர் மஜீத் கான். 279 ரன்கள் இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் 205 ரன்களுக்குச் சுருண்டது. மஜீத் கான் 76 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஆசிப் இக்பால் 53, வாசிம் ராஜா 31. கடைசி 6 விக்கெட்டுகளை 25 ரன்களில் பறிகொடுத்து பாகிஸ்தான் 205 ரன்களுக்கு சுருண்டது.
தொடக்க ஆட்டங்களில் இங்கிலாந்து எளிதில் வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டி சற்றே இழுபறியாக அமைந்தாலும், இங்கிலாந்து 80 ரன் வித்தியாசத்தில் வென்றது.
சுதாரித்த மே.இ. தீவுகள்
மே.இ. தீவுகள் அணி வலு வானது. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திணறியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் மஜித் கான் (60), முஷ்டாக் மொகமது (55) வாசிம் ராஜா (58) ஜாகீர் அப்பாஸ் (31), ஜாவேத் மியாண்டட் (24) ஆகியோரது பங்களிப்பினால் 266 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய மே.இ. தீவுகளை சர்பராஸ் நவாஸ் தனது வேகம் மற்றும் ஸ்விங்கினால் 36/3 என்று திணறவைத்தார். பிரெடிரெக்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், ஆல்வின் காளிச்சரண் ஆகியோரைச் சொற்ப ரன்களில் வெளியேற்றினார். பாகிஸ்தானின் சிறந்த விக்கெட் கீப்பர் வாசிம் பாரி 2 கேட்ச்களை அபாரமாகப் பிடித்திருந்தார்.
ஆனால் ரோஹன் கன்ஹாய் (24), கிளைவ் லாய்ட் (52) இணைந்து ஸ்கோரை 86 வரை கொண்டு சென்றனர். பகுதி நேர பவுலரான ஜாவேத் மியாண்டட் பந்தில் கிளைவ் லாய்ட் வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, மே.இ.தீவுகள் 166/8 என்று தோல்வி முகம் காட்டியது.
விக்கெட் கீப்பர் டெரிக் முர்ரே, வான்பன் ஹோல்டர் இணைந்து 37 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 203/9 என்று ஆனது. டெரிக் முர்ரேயுடன் இணைந்த ஆண்டி ராபர்ட்ஸ் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ராபர்ட்ஸ் 24 ரன்கள் எடுத்தும் முர்ரே 61 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். உலக சாம்பியனை வீழ்த்தும் அரிய வாய்ப்பை பாகிஸ்தான் கோட்டைவிட்டது.
அதன் பிறகு மே.இ.தீவுகள் அதிரடியாக முன்னேறியது. ஆஸ்தி ரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. ஆல்வின் காளிச்சரண் 78 ரன்களை விளாசினார். டெனிஸ் லில்லியை அவர் அன்று ‘கவனித்த’ விதம் கிரிக்கெட் அரங்கில் மகிழ்ச்சிகரமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. லில்லி பந்துகளை ஒன்றுமில்லாமல் செய்த ஒரே மட்டையாளர் (அப்போதைக்கு) ஆல்வின் காளிச்சரண்தான் என்ற பெருமையையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.
அரையிறுதிப் போட்டிகள்
ஒரு அரையிறுதியில் இங்கி லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோத, மற்றொரு அரையிறுதியில் மே.இ.தீவுகள், நியூசிலாந்தை எதிர்கொண்டது.
ஹெடிங்லியில் ஜூன் 18-ம் தேதி நடைபெற்ற முதல் உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தின் தரம் அபாரம். ஹெடிங்லீயில் பசுந்தரையில், மேகமூட்டமான வானிலையில் பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகிக்கொண்டிருந்தன. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் இயன் சாப்பல் யோசிக்காமல் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட கேரி கில்மர் என்ற ஸ்விங் பவுலர் அன்று இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். டெனிஸ் லில்லியுடன் தொடங்கிய அவர் 12 ஓவர்களை இடைவிடாமல் வீசினார். 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்ற, இங்கிலாந்து 36.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது.
ஆஸ்திரேலியாவின் அதிர்ச்சி
கிரெக் சாப்பல், அல்லது இயன் சாப்பல் ஒரு காலில் பேடைக் கட்டிக் கட்டிகொண்டு வந்து இந்த இலக்கை ஊதி விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு.
டர்னர், மெக்காஸ்கர், இயன் சாப்பல், கிரெக் சாப்பல், எட்வர்ட்ஸ், ராட்னி மார்ஷ் ஆகியோர் ஜான் ஸ்னோ, கிறிஸ் ஓல்ட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களிடம் வீழ்ந்து நடையைக் கட்ட, ஆஸ்திரேலியா 39/6 எனத் தடுமாறியது. 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை நொறுக்கிய கேரி கில்மர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தும், வால்டர்ஸ் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்க 29 ஒவரில் ஆஸ்திரேலியா 94 ரன்கள் எடுத்து முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
2-வது அரையிறுதி
இந்த 2-வது அரையிறுதி ஜூன் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிளைவ் லாய்ட் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். மேற்கிந்திய தீவுகளின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜூலியன் இரு பக்கமும் ஸ்விங் செய்தார். ஹோல்டர், ராபர்ட்ஸ், கீத் பாய்ஸ் ஆகியோர் அவ்வப்போது பவுன்சர்களை வீச 2 சதங்களைக் கண்டிருந்த நியூசி. கேப்டன் கிளென் டர்னர் அன்று ஒன்றும் செய்ய முடியாமல் திணறினார். ஆனாலும் அவரும் ஜெஃப் ஹவர்த் என்ற வீரரும் உணவு இடைவேளை வரை சேதமில்லாமல் 29 ஓவர்களில் 92/1 என்று சற்றே பலமான நிலையில் இருந்தனர்.
ஆனால் நல்ல இலக்கை நிர்ணயிக்கும் முயற்சி பலிக்காமல் அடுத்த 9 விக்கெட்டுகளை 60 ரன்களுக்குப் பறிகொடுத்து 53-வது ஓவரில் 158 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து. இலக்கைத் துரத்திய போது அதிரடித் தொடக்க வீரர் ராய் பிரெடெரிக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆல்வின் காளிச்சரண் இருந்த பார்மில் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரும் கிரீனிட்ஜும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 125 ரன்களைச் சேர்த்தனர். 40.1 ஓவரில் மே.இ.தீவுகள் 159/5 எடுத்து வெற்றி பெற்றது. இறுதியில் அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்தி ரேலியா-வெஸ்ட் இண்டீஸ் பலப் பரீட்சைக்கான களம் தயாரானது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago