டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாளன்று மட்டை பிடித்து நிற்பது சவாலான விஷயம். பந்து வீசப்படும் களத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடிய கால் தடங்கள் பிட்சின் மீது ஏற்படுத்திய சிறு பள்ளங்கள் பந்து தாறுமாறாக எகிறவும் கூடுதலாகத் திரும்பவும் உதவும். ஒரு பந்து எதிர்பார்ப்புக்கு மேல் எழும். இன்னொறு நினைத்ததைவிட அதிகம் தாழும். வழக்கமான உத்திகளை வைத்துக்கொண்டு கரைசேர்ந்துவிட முடியாது.
இத்தகைய ஐந்தாவது நாளில் ஆடும் வாய்ப்பு இந்தியாவுக்கு இந்தத் தொடரில் மூன்று முறை கிடைத்தது. மூன்றிலுமே இந்தியா மெச்சத்தக்க விதத்தில் ஆடியது. ஒன்றில் தோல்வி என்றாலும் தீரமான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த கௌரவமான தோல்வி. மற்ற இரண்டிலும் வெற்றி பெற வாய்ப்பில்லாத நிலையில் நெருக்கடியில் சுருண்டுவிடாமல் டிரா செய்ய முடிந்தது. இந்த மூன்று நாள் ஆட்டங்களையும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தேறிவருவதற்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம்.
கடந்த வாரம் சிட்னியில் இருந்த அதே சூழ்நிலையில் சில வாரங்களுக்கு அடிலெய்டில் இந்தியா இருந்தது. அப்போதும் தீரத்துடன் போராடியது. ஆனால் சதமடித்து இந்தியாவின் இன்னிங்ஸை வழிநடத்திச் சென்ற விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு கடை நிலை ஆட்டக்காரர்களால் மீதியிருந்த சொற்ப ரன்களை அடிக்கவும் முடியவில்லை, ஆட்ட மிழக்காமல் ஆடி டிரா செய்யவும் முடியவில்லை. ஆனால் மெல்போர்னிலும் சிட்னியிலும் முதன்மை ஆட்டக்காரர்கள் ஆட்ட மிழந்து, கடை நிலை மட்டை யாளர்கள் கைகொடுத்தார்கள். வெற்றிபெற முடியவில்லை என்றாலும் தோல்வியைத் தவிர்த் தார்கள்.
இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும் முழுக்க முழுக்க மட்டையாட்டம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இந்த மகிழ்ச்சி நிற்பது வருத்தத்துக்குரிய விஷயம். இந்திய அணியின் பந்து வீச்சு தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. இது இந்தத் தொடரிலும் அம்பலமாகியிருக்கிறது. விக்கெட் டையும் வீழ்த்த முடியாமல், ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் பந்து வீச்சு மட்டையாளர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்து கிறது. எதிரணியின் மீதான நெருக்கடியையும் கணிசமாகக் குறைத்துவிடுகிறது. தவறவிடப் படும் கேட்சுகளையும் சேர்த்துக் கொண்டால் இந்தியப் பந்து வீச்சு என்பது முடிவு தெரிந்த முழுநீளத் துன்பியல் நாடகமாக மாறிவிடுகிறது.
போராட்டத்தின் பலன்
பந்து வீச்சு இப்படி இருந் தாலும் இந்தியா இந்தத் தொடரில் கடுமையாகப் போராடியது. ஆஸ்திரேலியா இரண்டு போட்டி களில் வென்றாலும் அந்த வெற்றி எளிதில் கிடைத்து விட வில்லை. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கக்கூடிய இரண்டு போட்டிகளில் இந்தியா பிடிவாத மாக நின்று டிரா செய்தது. இதற்குக் காரணம் மட்டையாளர்களும் அஸ்வின், புவனேஸ்வர் போன்ற பந்து வீச்சாளர்கள் மட்டையாட்டத்தில் காட்டிய உறுதியும்தான்.
ஆசியக் கண்டத்துக்கு வெளியே 300 ரன்களைத் தாண்டுவதற்கே திணறும் இந்தியா இந்த முறை ஒரே ஒரு முறை மட்டுமே 300 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. ஒவ்வொரு போட்டியிலும் தலா ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களைத் தாண்டியது. நான்காவது இன்னிங்ஸில் கடும் நெருக்கடியிலும் இந்தியா தாக்குப்பிடித்திருக்கிறது.
எப்போதுமே வலுவான மட்டை வரிசையைக் கொண்ட இந்தியா புகழ்பெற்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் அந்த நிலையை எட்டிவிட்டது என்று சொல்லலாம். முரளி விஜய், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் எல்லா ஆடுகளங்களிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள். சதீஸ்வர் புஜாரா, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் போன்றோர் அந்த அளவுக்கு ஆடாவிட்டாலும் மேலும் கவனமும் முனைப்பும் கூடினால் அவர்களுடைய மட்டைகளும் உரக்கப் பேசும் என்ற நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு ஆடினார்கள்.
அஜிங்க்ய ரஹானே தொடர்ந்து ஆசியக் கண்டத்துக்கு வெளியே சிறப்பாக ஆடிவருவது குறிப்பிடத் தக்கது. பதற்றம் இல்லாமல் ஆடிவரும் முரளி விஜய் சிறந்த தொடக்கத்தை அளித்துவருவது பின்னால் வருபவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது.
கோலியின் சாதனைகள்
டெஸ்ட் அணித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள விராட் கோலிக்கு இது முக்கியமான தொடர். ஆஸ்திரேலியாவில் சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், ராகுல் திராவிட் ஆகியோர் ஒரு தொடரில் எடுத்த தனிப்பட்ட ரன்களைக் காட்டிலும் அதிக ரன்களை (692) எடுத்துச் சாதனை புரிந்துள்ளார். ஒரே தொடரில் நான்கு சதங்களை எடுத்ததும் அவருடைய சாதனை. மட்டையாட்டத்தில் வேகம், நிதானம் ஆகிய இரண்டையும் சந்தர்ப்பத்துக்குத் தக அவரால் வெளிப்படுத்த முடிகிறது. எதிரணி யினருடன் வாய்ச் சண்டையில் ஈடுபட்டாலும் அது தன் ஆட்டத்தைப் பாதிக்காதவண்ணம் அவரால்
பார்த்துக்கொள்ள முடிகிறது. இவரைப் போலவே புதிதாகத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் தலா ஒரு சதத்துடன் 769 ரன் அடித்தார். இருவரும் எதிர்கொண்ட பந்து வீச்சுகளின் தரத்தை வைத்துப் பார்க்கும்போது கோலி அடித்த ரன்களின் மதிப்பு கூடுதலானது என்று சொல்லலாம்.
இடை நிலை மட்டை வரிசையின் மிக வலுவான ஆதாரமாகக் கோலி உருவெடுத்துவருவது டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் சிறப்பான வருங்காலத்துக்குக் கட்டியம் கூறும் அடையாளம். இவருக்கு அடுத்ததாகக் களம் இறங்கும் அஜிங்க்ய ரஹானேயின் உறுதியான மட்டை வீச்சும் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது. 2, 3, 6, 7 ஆகிய இடங்களில் ஆடுபவர்கள் தங்கள் ஆட்டத்தின் தரத்தை உயர்த்திக்கொண்டால் இந்தியா டெஸ்ட் அரங்கில் முக்கியமான சக்தியாகத் திகழும்.
மட்டையாளர்களைப் பற்றி மகிழ்ச்சி கொள்ளும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தத் தொடர் முழுவதுமே மட்டையாளர்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. அதிகபட்சம் நான்கு டெஸ்ட்கள் கொண்ட தொடர்களில் இந்தத் தொடரில்தான் அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட்டன. மொத்தம் 5870 ரன்கள். பந்து வீச்சாளர்கள் மறக்கக்கூடிய தொடராக இது அமைந்ததற்குக் காரணம் பந்து விச்சுக்குச் சாதகமான அம்சங்கள் ஆடுகளங்களில் அதிகம் இல்லை என்பதுதான்.
வேகப் பந்துக்குத் துணை புரிந்த பிரிஸ்பேனில் இரண்டாவது இன்னிங்ஸில் இரு அணிகளுமே அதிக ரன் எடுக்க முடியாமல் திணறின. இந்தியா 224 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்தி ரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. முதல் இன்னிங் ஸில் பெற்ற முன்னிலை ஆஸ்தி ரேலியாவுக்குக் கைகொடுத்தது.
பந்து வீச்சுக்குச் சாதகமான களங்களில் இந்த அணிகள் எப்படி ஆடுகின்றன என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும். என்றாலும் கட்டுக்கோப்பான பந்து வீச்சுக்கு எதிராக ரன் குவித்ததற் காகவும் நெருக்கடியில் சுணங் காமல் ஆடியதற்காகவும் இந்திய மட்டையாளர்களைப் பாராட்டலாம்.
ஆனால் டெஸ்ட் அரங்கில் வெற்றிகரமான அணியாக விளங்க இந்த மட்டை வலிமை மட்டும் போதுமா? இந்தியாவின் இதர பிரச்சினைகள் என்ன? அவற்றைத் தீர்க்க வழி என்ன?
(அலசல் தொடரும்)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago