அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் முறையைக் கற்க வேண்டிய நிலையில் அஸ்வின்

By ஆர்.முத்துக்குமார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் இதுவரை 24 போட்டிகளில் 115 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் 95 விக்கெட்டுகளை 15 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார்.

இந்தியாவில் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான, புழுதி நிறைந்த ஆட்டக்களங்களில் மட்டுமே அவரால் ஆஃப் ஸ்பின்னர்களை திறமையாக வீச முடிகிறது என்பதை இது காட்டுகிறது.

அவரது பிரச்சினை என்னவென்று பார்த்தால் அவர் வீசும் திசை மற்றும் லெந்த், அவர் கேட்கும் களவியூகம் என்று அயல்நாடுகளில் அவரால் திறம்பட வீச முடியாமல் இருப்பதே.

அதுவும் பிரிஸ்பன், மெல்பர்ன், தற்போது சிட்னி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் பந்து வீச்சு எரிச்சலைக் கிளப்புவதாகவே இருக்கிறது.

மேலும், அயல்நாட்டுத் தொடர்களில் அதிகம் வலைப்பயிற்சியில் இந்திய ஸ்பின்னர்கள் பவுலிங்கில் ஈடுபடுவதில்லை. ஒன்று கேப்டனுக்கு அயல்நாட்டு பிட்ச்களில் ஸ்பின்னர்களை பயன்படுத்தும் விதம் தெரியவில்லை அல்லது அவர்கள் மீது நம்பிக்கையின்மை, 2-வது ஸ்பின் பவுலர்களை ரன்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தி அதிலும் அவர்களைத் தோல்வியடையச் செய்வது.

மேலும், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பவுலர்கள் பந்து வீச்சுப் பயிற்சியில் ஈடுபடுவதில்லை, குறிப்பாக ஸ்பின்னர்கள், 1970களிலும் 80களிலும் இந்திய ஸ்பின் பவுலர்கள் வலையில் அதிக ஓவர்களை வீசி பயிற்சி மேற்கொள்வர். ஆனால் இப்போது பயிற்சி செய்வதை மறுத்து வருவதால் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக அயல்நாடுகளில் தன்னம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்பின்னர்களை எப்போதும் எல்லா கேப்டன்களும் தாக்குதல் உத்தியாகவே பயன்படுத்தி வருகின்றனர். நேதன் லயன் பந்து வீசும் முறை ஸ்பின் பந்து வீச்சில் கரைகண்டதாக நினைத்துக் கொள்ளும் தற்போதைய இந்திய பேட்ஸ்மென்களுக்கே சவாலாக இருப்பதை நாம் நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் பார்த்து வருகிறோம்.

காரணம், நேதன் லயன், பாயிண்ட், கவர், சிலி பாயிண்ட், ஷாட் லெக் என்று நெருக்கமாக வைத்துக் கொண்டு நன்றாக ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே பிளைட் செய்கிறார். பந்தின் வேகத்தை பந்துக்கு பந்து மாற்றுகிறார். பிட்ச் செய்யும் இடத்தை மாற்றுகிறார், ஆனால் திசையை மாற்றுவதில்லை.

ஆனால், அஸ்வின் சிலி மிட் ஆஃப் வைத்துக் கொள்வதில்லை, மாறாக ஷாட் லெக், லெக் ஸ்லிப் வைத்துக் கொண்டு ஓவர் த விக்கெட்டில் மிடில் ஸ்டம்ப் திசையில் வீசுகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவர் வீசினாலும் பேட்ஸ்மென்களுக்கு எந்த வித குழப்பமும் விளைவிக்காத நிலையிலேயே அவரது பவுலிங் உள்ளது. பந்துகள் அதிகம் திரும்பாவிட்டாலும், ஒரு ஆஃப் ஸ்பின்னர் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீசும்போதுதான் பேட்ஸ்மென்களுக்கு பந்து திரும்பி விடுமோ என்ற குழப்பம் இருக்கும். மிடில் ஸ்டம்ப், லெக் ஸ்டம்ப் என்று வீசினால் ஒரு பயனும் இல்லை. சுலபமாக ரன்களை அவர்கள் எடுக்க முடிவதோடு விக்கெட்டுகள் விழும் வாய்ப்பும் அஸ்தமித்து விடுகிறது.

அதே போல் இடது கை பேட்ஸ்மென்கள் வந்தால் உடனே ரவுண்ட் த விக்கெட் என்று அஸ்வின் முடிவெடுக்கிறார். இது மிகப்பெரிய தவறு. ஏனெனில் ஓவர் த ஸ்டம்பில் வீசும்போதுதான் இடது கை பேட்ஸ்மெனின் லெக் ஸ்டம்ப் லைனில் குருட்டுப் புள்ளி ஏற்படும், அதனை தவிர்க்க அவர் ஸ்வீப் ஷாட்டைப் பயன்படுத்தலாம் அப்போது ஆட்டமிழக்கலாம். இரண்டு கண்களுக்கும் நன்றாக பந்து தெரியுமாறு வீசுவது பேட்ஸ்மென்களுக்கு ஸ்பின் பவுலிங் மீதான பயத்தை போக்கி, கேலிக்கூத்தாக்கி விடுகிறது. ஓவர் த விக்கெட்டில் வீசும்போது பந்துகள் திரும்பாவிட்டாலும் திரும்பி விடும் என்ற அச்சத்தில் பந்து சுழலும் திசைக்கு எதிர் திசையில் அடிக்க பேட்ஸ்மென்கள் விரும்புவர், இது அவர்களது விக்கெட்டை இழக்கச் செய்யும்.

இப்படி விக்கெட்டுகள் விழுவதற்கான வாய்ப்புகளை ஸ்பின் பவுலர் உருவாக்கிக் கொள்வதுதான் வழக்கம். ஆனால், அஸ்வினோ, வலது கை பேட்ஸ்மெனுக்குக் கூட ரவுண்ட் த விக்கெட்டில் வீசுகிறார். அதுவும் ஸ்லிப், சிலி பாயிண்ட் இல்லாமல் லெக் ஸ்லிப், ஷாட் லெக் வைத்துக்கொண்டு ரவுண்ட் த விக்கெட்டில் வீசுகிறார். இப்படியொரு சுழற்பந்து வீச்சு முறையை டெஸ்ட் போட்டிகளில் இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

எப்போது வலது கை பேட்ஸ்மென்களுக்கு ரவுண்ட் த விக்கெட் செல்ல வேண்டும்? ஒரே மாதிரியாக வீசுவதைத் தவிர்க்க எப்போதாவது ஓரிரு ஓவர்களை பந்தின் கோணத்தை மாற்ற ரவுண்ட் த விக்கெட்டுக்குச் செல்லலாம். அல்லது பிட்ச் ஓவர் த விக்கெட்டில் கடுமையாக திரும்புகிறது என்றால், எல்.பி. வாய்ப்பு இருக்காது என்பதற்காக ஸ்பின்னை கட்டுப்படுத்த ரவுண்ட் த விக்கெட் வரலாம். இதுதான் சுழற்பந்து வீச்சு நடைமுறை. மேலும் ரவுண்ட் த விக்கெட்டில் வீசினாலும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே அல்லது ஆஃப் ஸ்டம்ப் லைனில்தான் வீசுவது சிறந்தது. ஆனால் அஸ்வினோ லெக் அண்ட் மிடில் ஸ்டம்ப் லைனில் வீசுகிறார். இது பயனற்ற பந்து வீச்சு. விக்கெட்டும் எடுக்க முடியாது, ரன்களையும் கட்டுப்படுத்த முடியாது.

ஒருநாள் கிரிக்கெட் என்பதை விட டி20 கிரிக்கெட் அஸ்வின் பந்து வீச்சை நிறையவே பாதித்திருக்கிறது. இத்தகைய பயனற்ற பந்து வீச்சிலிருந்து அவர் விரைவீல் வெளிவந்து, இங்கிலாந்தின் கிரேம் ஸ்வான், ஆஸி.யின் நேதன் லயன் போன்றோர் வீசுவது போல் தைரியமாக வீச முன் வரவேண்டும்.

ஸ்பின்னர்கள் எப்போதும் நெருக்கமாக பீல்ட் செட் செய்து அட்டாக் செய்தால் மட்டுமே விக்கெட்டுகளை பெற முடியும். கும்ளே அப்படித்தான் வெற்றி பெற்றுள்ளார். பழைய ஹர்பஜன் அப்படித்தான் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஹர்பஜனும் தன்னம்பிக்கை இல்லாமல் இப்போது அஸ்வின் செய்த தவறுகளைச் செய்து பயனற்ற பவுலராகி இன்று வெளியில் உள்ளார்.

முதலில் அஸ்வின் ஆஃப் ஸ்பின் பந்துகளை தொடர்ந்து வீச பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு சுண்டு விரலில் பந்தை ரிலீஸ் செய்வது, பாம்பு விரலில் ரிலீஸ் செய்வது என்று பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடலாம்.

பந்து திரும்புவேனா என்று அவரது விரல்களில் அடம்பிடிக்கும் போது பரிசோதனை முயற்சிகள்தான் எதற்கு?

இவ்வளவு பயிற்சியாளர்கள் இருந்தும், ரவி சாஸ்திரி போன்ற ஒரு ஸ்பின்னரே அணியை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதும் அஸ்வின் இவ்வாறு வீசுவது மிகவும் வெறுப்பேற்றுவதாக அமைவதோடு, டெஸ்ட் போட்டிக்கான சவால்களை மழுங்கடித்து எதிரணி சார்பாக ஆட்டம் ஒருதலைபட்சமாக சாய்ந்து விடுகிறது என்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

முதல் டெஸ்டில் அஸ்வினை சேர்த்திருக்க வேண்டும், ஆனால் கரன் சர்மாவை சேர்த்தனர். கரன் சர்மா அந்த மட்டைப் பிட்சில் நன்றாகவே வீசினார். இன்னும் ஒரு போட்டியையாவது அவருக்கு வழங்கியிருக்கலாம் என்ற நிலையில் அஸ்வினை அணிக்குள் சேர்த்தாகி விட்டது. இப்போது கரன் சர்மாவின் தன்னம்பிக்கையையும் காலி செய்தாகிவிட்டது. அஸ்வினும் தன்னம்பிக்கையுடன் வீசுவதில்லை. இதுதான் இந்திய அணி சந்தித்து வரும் துன்பம்.

ஆஸ்திரேலியாவில் பிரசன்னா, பேடி, திலிப் தோஷி, சந்திரசேகர், ஷிவ்லால் யாதவ், ரவிசாஸ்திரி, வெங்கடபதி ராஜு, அனில் கும்ளே போன்ற இந்திய ஸ்பின்னர்கள் நன்றாக வீச முடியும் போது ஒரு ஸ்பின்னராக அஸ்வின் அங்கு போராடுவது ஸ்பின் பந்து வீச்சுக்கு புகழ்பெற்ற இந்திய அணிக்கு அழகல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்