கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளை ‘பாக்ஸிங் டே’ என்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டி தொடங்கும். ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் என்று அது கொண்டாடப்படும். இந்த ‘பாக்ஸிங் டே’ போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியைப் போலவே இந்திய அணிக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கும் போலிருக்கிறது. இந்தப் போட்டியில் உற்சாகமாக ஆட வேண்டும் என்றால் கூடுதலாக ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என இந்திய அணியினர் நினைத்திருப்பார்கள்போலும். பிரிஸ்பேன் போட்டியில் நான்காம் நாள் காலையில் அவர்கள் ஆடிய ஆட்டத்தை வேறு எப்படியும் புரிந்துகொள்ள முடியாது.
அம்பலமான பலவீனங்கள்
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் முதல் நாளன்று 300 ரன்களைத் தாண்டியது இந்தியாவின் சாதனை (311-4). ஒரு கட்டத்தில் 247-6 என்ற நிலையில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் திணறிக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் இந்தியாவின் பலவீ னங்கள் அம்பலமாகத் தொடங்கின. ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் மிட்செல் ஜான்சனும் சேர்ந்து இந்தியப் பந்து வீச்சைப் பதம்பார்க்கத் தொடங்கினார்கள். குறிப்பாக ஜான்சன். பொதுவாகவே அடித்து ஆடுவதில் வல்லவரான ஜான்சன் அன்று இருந்த நிலவரத்தைக் கண்டு அஞ்சாமல் வழக்கம்போல அடித்து ஆட ஆரம்பித்தார். இந்திய அணியினர் அவரை உளவியல் ரீதியாகத் தாக்குவதற்காக வாய் வீச்சு காட்ட, அது அவருடைய வேகத்தை அதிகரிக்கவே பயன்பட்டது. ரன் குவிய ஆரம்பித்தது.
உறுதியான கூட்டணி
டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் எடுப்பதுதான் பந்து வீச்சின் பிரதான நோக்கம். ஆனால் உயிரற்ற ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் நோக்குடன் வியூகம் அமைத்துப் பந்து வீசினால் விக்கெட்டும் விழாது, ரன்னும் மட்டுப்படாது. ஆனால் பிரிஸ்பேன் களம் அப்படிப்பட்டதல்ல. அங்கு தைரியமாகத் தாக்குதல் வியூகம் அமைத்து நம்பிக்கையுடன் பந்து வீசலாம். மகேந்திர சிங் தோனி அதைத்தான் செய்தார். ஆனால் ஜான்சன் ஸ்மித் ஜோடி அந்த உத்தியைத் தங்களது உறுதியான ஆட்டத்தால் தகர்த்தது.
இவர்கள் ரன் குவிக்க ஆரம்பித்ததும் இந்திய வீச்சாளர்களின் இயல்பான பலவீனம் வெளிப்பட ஆரம்பித்தது. அப்போதும் நம்பிக்கை மீதி இருந்தது. இஷாந்த் ஷர்மா அடுத்தடுத்து ஸ்மித்தையும் ஜான்சனையும் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்கோர் 395ஆக இருந்தபோது ஜான்சனும் 398 ஆக இருந்தபோது ஸ்மித்தும் ஆட்டமிழந்தார்கள். 398-8 என்பது இந்திய அணியின் நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்தது. ஆனால் இந்தியா மீண்டும் ஒருமுறை சாதகமான நிலையைக் கைநழுவவிட்டது. அடுத்த இரண்டு விக்கெட்கள் விழுவதற்குள் மேலும் 107 ரன்களைக் கொடுத்தது.
தரமற்ற பந்துவீச்சு
இரு அணிகளுமே தலா 109.4 ஓவர்கள்தான் ஆடின. ஆனால் ஆஸ்திரேலியா இந்தியாவைவிடக் கூடுதலாக 97 ரன் எடுத்திருந்தது. சொல்லப்போனால் இந்தியாவின் ரன் விகிதம் குறைவானது அல்ல. ஆனால் ஆஸியின் ரன் விகிதம் அதைத் தாண்டியது. காரணம், இந்தியாவின் பந்து வீச்சில் சீரான தரம் இல்லை. இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களில் இருவருக்குக் காயம்.
97 ரன்கள் முன்னிலை பெற்றாலும் போட்டி முற்றிலுமாக ஆஸ்திரேலியாவின் கையில் வந்துவிடவில்லை. மூன்றாம் நாள் மாலை இந்திய அணியின் ஸ்கோர் 71-1. அடுத்த நாள் 300 ரன் எடுக்க முடிந்தால் இந்தியா வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகும். காரணம் பிரிஸ்பேனில் ஐந்தாவது நாள் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவே இருக்கும். அப்படியே ஆஸ்திரேலிய மட்டை யாளர்கள் சிறப்பாக ஆடிவிட்டார்கள் என்றாலும் இந்தியா பெறக்கூடிய தோல்வி கவுரவமான தோல்வியாகவே இருந்திருக்கும்.
இந்நிலையில் என்ன செய்திருக்க வேண்டும்? வலுவான கூட்டணிகள் உருவாக வேண்டும். பொறுமையும் கவனக் குவிப்பும் வேண்டும். ஆனால் இந்தியா நான்காம் நாள் முதல் பகுதியிலேயே போட்டியைக் கிட்டத்தட்ட இழந்தது. ஜான்சனின் ஆவேசமான பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் வீழ்ந்தது. அடுத்தடுத்து நால்வர் ஆட்டமிழந்தார்கள். அதன் பிறகு அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோரின் துணையுடன் ஷிகர் தவன் போராடினாலும் அணியின் ஸ்கோர் 224ஐத்தான் எட்ட முடிந்தது. முன்னிலை வெறும் 127.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியப் பந்து வீச்சாளர்கள் உத்வேகத்துடன் பந்து வீசி ஆஸ்திரேலியா இந்தச் சிறிய இலக்கை எட்டுவதற்குள் 6 விக்கெட்களைச் சாய்த்தார்கள். இன்னும் 100 ரன் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்துமளவுக்குப் பந்து வீசினார்கள்.
தற்கொலைக்கு ஒப்பானவை
இரண்டு கட்டங்களில் இந்தியா இந்தப் போட்டியைக் கைநழுவவிட்டது. இரண்டுமே தற்கொலைக்கு ஒப்பானவை. ஒன்று ஆஸ்திரேலிய அணியின் கடை நிலை மட்டையாளர்களை 100 ரன்களுக்கு மேல் அடிக்க அனு மதித்தது. இன்னொன்று நான்காம் நாள் காலையில் முக்கியமான மட்டையாளர் யாருமே சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு நன்றாகத்தான் இருந்தது என்றாலும் யாராவது ஒருவர் மேலும் கவனத்துடன் ஆடியிருந்தால் இந்த வீழ்ச்சியைத் தடுத்திருக்கலாம்.
போட்டி தொடங்குவதற்கு முன்பே பயிற்சியின்போது அடிபட்டுக்கொண்டதால் களம் இறங்க முடியாமல் இருந்த ஷிகர் தவன் தாமதமாக இறங்கினார். அவர் மட்டுமே பந்துகளைக் கவனித்து ஆடினார். அஸ்வினும் யாதவும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள். முன்னிலை மட்டையாளர் யாரேனும் ஒருவர் தவனுடன் நிறிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கலாம்.
தவனால் ஆட முடியாது என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. இதனால் அடுத்து இறங்க வேண்டிய விராட் கோலி அவசர அவசர மாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்று தோனி போட்டி முடிந்ததும் கூறினார். இதையெல்லாம் ஒரு காரணமாகச் சர்வதேச மட்டத்தில் சொல்வது தோனிக்கும் இந்தியாவுக்கும் அழகல்ல. களத்தில் இறங்கிவி ட்டால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். அப்படியே கோலியின் நிலை இக்கட்டானது என்றால் அவருக்கு அடுத்து வந்தவர்கள் எளிதாகத் தங்கள் விக்கெட்டை இழந்ததன் காரணம் என்ன? முக்கியமான கட்டத்தில் முக்கியமான ஒரு விக்கெட் விழுந்ததும் ஏற்படும் பதற்றம் அவர்கள் ஆட்டத்தைப் பாதித்தது நிதர்சனமாகத் தெரிந்தது.
மவுனம் சாதிக்கும் தோனியின் மட்டை
பந்து ‘பேசும்’ களங்களில் தோனியின் மட்டை மவுனம் சாதிக்கும் என்பது தெரிந்ததுதான். பந்தின் ஸ்விங்கை முறியடிக்க அவர் வழக்கம்போலவே கிரீஸுக்கு வெளியில் வந்து ஆட முயன்றார். ஆனால் அவரைக் காட்டிலும் வேகமாக வந்த ஹேஸில்வுட்டின் பந்து கிரீஸுக்குப் பக்கத்திலேயே அவர் காலைத் தாக்கி ஆட்டமிழக்கச் செய்தது. வழக்கமாக நன்றாகத் தொடங்கிப் பொறுப்பற்ற முறை யில் ஆட்டத்தைப் பறிகொடுக்கும் ரோஹித் ஷர்மா இந்த முறை ‘பொறுப்பாக’ ஆட முயன்று ஆட்டமிழந்தார்.
சிக்கலான நேரங்களில் கைகொடுக்க வேண்டிய கவனமும் தொழில்நுட்பத் திறனும் அவருக்கு இன்னமும் கைகூடவில்லை என்பதை இது காட்டியது. அஜிங்க்ய ரஹானே தடுமாற்றத்திலேயே ஆட்டமிழந்தார். இவர்கள் எல்லாரும் வீழ்வதைப் பார்த்தபடி 43 ரன்களுடன் உறுதியாக ஆடிக் கொண்டிருந்த சதீஸ்வர் புஜாரா ஆட்டமிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. பந்து வீச்சுக்குச் சாதகமான களங்களில் எப்போதும் ஓரிரு மட்டையாளர்கள்தான் சோபித்திருக்கிறார்கள். நிலைபெற்று ஆடிக்கொண்டிருந்த புஜாரா எகிறு பந்தை ஆட முயற்சி செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவரும் தவனும் ஒரு மணிநேரம் ஆடியிருந்தால் போட்டி திசை திரும்பியிருக்கும்.
நெஞ்சுரம் வேண்டும்
நெருக்கடியில் சிக்கினால் அதிலிருந்து மீண்டு வரும் நெஞ்சுரமும் அதற்கான திறனும் இருக்க வேண்டும். சூழ்நிலை கடினமாகும் போது உறுதிவாய்ந்தவர்களாலேயே முன்னேற முடியும். சாதாரணமான சூழல்களில் கைகொடுக்கும் திறமை நெருக்கடியில் கைகொடுக்காது. அதற்கு மேலும் தீவிரமும் கூடுதலான திறமையும் தேவை. ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அதிக வெற்றிகளைப் பெறுவது இப்படித்தான். இந்தத் திறமை கைகூடும்போதுதான் பெரிய அணிகளுக்கு இணையான இடத்தை இந்தியா பெற முடியும்.
பாக்ஸிங் டே போட்டிக்கு முன்னால் கிடைக்கும் ஒரு நாள் கூடுதல் அவகாசம் மட்டும் இது போன்ற திறமையை வளர்த்துக் கொள்ளப் போதாது. இது அணுகுமுறை சம்பந்தப்பட்டது. இதற்கான தயாரிப்பு மனஅரங்கில்தான் அதிகம் நடக்கவேண்டும்.அப்போது தான் இந்தப் பையன்கள் உண்மையிலேயே பெரியவர்களாவார்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago