பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி பயிற்சி ஆடுகளங்களில் காணப்படும் வசதிக் குறைவு பற்றிப் புகார் கூறினார். பயிற்சியின்போது ஷிகர் தவனுக்கு அடிபட்டதையும் அவருக்குப் பதிலாக விராட் கோலி அவசர அவசரமாகக் களம் இறங்க வேண்டியிருந்ததையும் சுட்டிக் காட்டினார்.
மேலும் சில புகார்களும் இந்திய அணியின் தரப்பில் முன்வைக்கப்பட்டன. தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்பது அவற்றில் ஒன்று. நடுவர்களின் தீர்ப்புகள் தங்களுக்கு எதிராகச் சென்றது பற்றியும் இந்திய முகாமிலிருந்து பேச்சுக்கள் கேட்டன.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு அணிகளும் இதுபோன்ற புகார்களைச் சொல்லியிருக்கின்றன. போட்டி அட்டவணை, கடும் குளிரில் ஒரு நாள் ஆட்டங்களைப் பகல் ஆட்டமாக நடத்துவதால் வரும் சிக்கல்கள், ஆட்டம் நடக்கும் இடத்தில் உள்ள வசதிகள், உணவு, தண்ணீர், ஆடுகளத்தின் தரம் ஆகியவை பற்றி ஆஸ்திரேலிய அணி உள்படச் சில அணிகள் கூறியிருக்கின்றன. எந்தப் புகாராக இருந்தாலும் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதன் பெறு மானத்தின் அடிப்படையில் தீர்வு வழங்க முனைவதே போட்டியை நடத்தும் நாடு / வாரியத்தின் பொறுப்பு. எனவே இந்திய அணி முன்வைத்துள்ள புகார்களை ஆஸ்திரேலிய வாரியம் எந்த வகையிலும் ஒரு சிறிதளவேனும் அலட்சியப்படுத்துவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க இயலாது என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவு படுத்த வேண்டும்.
தோனியின் சப்பைக்கட்டு
இந்தத் தொடரில் நடுவர்களின் தவறான தீர்ப்புகளால் இந்தியா பாதிக்கப்பட்டது போலவே பலனும் பெற்றிருக்கிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் ஏற்பாட்டை ஏற்க மறுக்கும் இந்தியா இதுபற்றிப் பேசுவதில் பொருளில்லை. பிரச்சினை புகார்களைப் பற்றியது மட்டு மல்ல. இதுபோன்ற புகார்களை எதிர்கொள் வதிலும் கையாள்வதிலும் உள்ள மனநிலைதான் முக்கியமான பிரச்சினை.
தவனுக்கு அடிபட்டதைப் பற்றியும் கோலியின் அவஸ்தை பற்றியும் தோனி குறைபட்டுக்கொண்ட விதம் தோல்விக்கான சப்பைக்கட்டுபோல இருந்தது. சர்வதேச அளவில் ஆடும் ஓர் அணியின் தலைவரிடம் இதுபோன்ற அணுகுமுறையை வெளிப்படுத்தும் தொனி இருப்பது ஆரோக்கியமானதல்ல. கோலி ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து மூவர் ஆட்டமிழக்க, நான்கு ஓவர்களுக்குள் இந்தியா தோல்விக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டது.
இங்கிலாந்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இடையில் நடந்த மோதலில் இந்திய அணியின் சொல் அம்பலம் ஏறவில்லை. மோதலில் ஆண்டர்சன் மீதான புகாரை நிரூபிப்பதற்காக ஆதாரம் இல்லை என்று விசாரணை நடுவர் தீர்ப்பளித்தார். இது இந்திய அணியின் மனநிலையைப் பாதித்தது. அந்தத் தொடரில் அதன் பிறகான இந்தியாவின் ஆட்டம் மிகவும் ஆட்டம் கண்டது. பிரச்சினைகளைச் சொல்லிப் போராடுவதில் தவறு இல்லை. ஆனால் அந்தப் போராட்டத்தின் தாக்கம் களத்தில் தெரியக் கூடாது. ஒருவேளை தெரிந்தால் ஆக்கபூர்வமாகத்தான் தெரிய வேண்டும்.
அனில் கும்ப்ளேவின் அணுகுமுறை
2007-08-ல் அனில் கும்ப்ளே தலைமை யிலான அணி இதையெல்லாம் விடப் பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. ஹர்பஜன் சிங்குக்கும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுக்கும் இடையே நடந்த மோதல் தொடரையே ரத்துசெய்துவிடும் அளவுக்குப் பெரிதாயிற்று. போட்டியில் நடுவர்கள் அளித்த சொதப்பலான தீர்ப்புகள் இந்தியாவுக்கு எதிராகவே அமைந்தன.
ஆஸ்திரேலிய அணியினர் அப்பீல் செய்த விதமும் ஆட்ட உணர்வை வெளிப்படுத்துவதாக இல்லை. ஹர்பஜன் விவகாரத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. தீர்ப்புகள், ஆஸி அணியினரின் அணுகுமுறை ஆகிய விஷயத்தில் கும்ப்ளே தனக்கே உரிய கண்ணியத்தை இழக்காமல் வெளிப் படையாகக் கண்டனம் தெரிவித்தார்.
“இன்று ஒரு அணிதான் ஆட்டத்துக்குப் பொருத்தமான உணர்வுடன் ஆடியது” என்று அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு தொடரின்போது ஆஸ்திரேலிய கேப்டன் பில் வுட்ஃபால் சொன்னதைத்தான் கும்ப்ளே பயன்படுத்திக்கொண்டார். அந்தச் சொற்கள் ஆஸ்திரேலியர்களின் குறிப்பாக, ஆஸ்திரேலிய ஊடகங்களின் மனசாட்சியைத் தொட்டன. அந்த நாட்டு ஊடகங்களே ஆஸ்திரேலிய அணியை விமர்சிக்கத் தொடங்கின.
இது அல்ல விஷயம். இத்தனை கொந்தளிப்பு களுக்குப் பிறகு நடந்த பெர்த் டெஸ்டில் இந்தியா தீவிரமாக ஆடி வெற்றிபெற்றது. பிரச்சினைகளின் சுமை களத்தில் தங்கள் ஆட்டத்தைப் பாதிக்க அந்த அணி அனுமதிக்க வில்லை. மாறாக, அது அவர்களது உறுதியை, போராடும் தன்மையைக் கூட்டவே உதவியது. அணியின் ஒவ்வொரு வீரரும் ஏதேனும் ஒரு விதத்தில் வெற்றிக்குப் பங்காற்றினார்.
வேண்டும் போர்க்குணம்
தோனியும் அந்த அணியில் இடம்பெற்றிருந் தார். அந்த அனுபவத்தை இப்போது அவர் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். சர்ச்சைகளுக்காகப் போராடுவதன் சுமை களத்தில் எதிர்மறையாகப் பாதித்துவிடாமல் இருக்கும் மனநிலையைத் தன் அணிக்கு அவர் ஏற்படுத்த வேண்டும். மேலான போராட் டத்தின் மூலம் தங்கள் வலிமையை நிரூபிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை பாக்ஸிங் டே போட்டி தருகிறது. தோனியின் படை அதைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் போர்க் குணத்தைக் காட்ட வேண்டும். அதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். புகார்களை முன்வைத்துப் புலம்புவதை அல்ல.
ஹர்பஜன் விவகாரத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. தீர்ப்புகள், ஆஸி அணியினரின் அணுகுமுறை ஆகிய விஷயத்தில் கும்ப்ளே தனக்கே உரிய கண்ணியத்தை இழக்காமல் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago