ஐபிஎல்: மேக்ஸ்வெல், மில்லர் அசத்தலில் மீண்டும் பஞ்சாப் வெற்றி
192 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி இரண்டாவது ஓவரில் நட்சத்திர வீரர் சேவாக்கை இழந்தது. அதற்கடுத்த ஓவரில் சாஹா ஆட்டமிழந்தார். 17 ஓவர்களில் 180 ரன்கள் தேவை என்கிற நிலையில் களமிறங்கிய மேக்ஸ்வெல், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.
புஜாரா, மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப் 67 பந்துகளில் 116 ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல் 28 பந்துகளில் அரை சதத்தை அடைந்தார். மற்றொரு முனையில் ஆடிய புஜாரா, ஆட்டமிழக்காமல் நிதானமாக ஆடி, மேக்ஸ்வெல்லுக்கு ஈடு கொடுத்தார். 45 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களோடு 89 ரன்களை விளாசிய மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
6 ஓவரில் 65 ரன்கள் தேவப்பட, மில்லர் களமிறங்கினார். இவரும் தன் பங்கிற்கு ராஜஸ்தான் பந்துவீச்சை வேட்டையாட, 18.4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. மில்லர் 19 பந்துகளில் அரை சதத்தைக் கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 சிக்ஸர்களும் அடக்கம். நிலைத்து ஆடிய புஜாரா 39 ரன்கள் எடுத்திருந்தார்.
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆட முயற்சித்து சோபிக்க முடியாமல், ஆட்டமிழந்தனர். 6-வது ஓவரில் ஜோடி சேர்ந்த வாட்சன், சாம்சன் இணை அதிரடியாக ஆட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
7 ஓவர்களில் 74 ரன்கள் பார்டனர்ஷிப் சேர்த்த இந்த ஜோடி 13-வது ஓவரில் உடைந்தது. இருந்தாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள், தாங்கள் சந்தித்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்ட, 20 ஓவர்களில் ராஜஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எட்டியது. சாம்சன், வாட்சன் இருவரும் அரை சதம் அடித்தனர்.