ஐஎஸ்எல் கால்பந்து: டிராவில் முடிந்தது சென்னை - நார்த் ஈஸ்ட் ஆட்டம் - 2-வது இடத்தில் தொடர்கிறது சென்னை அணி

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கின. வழக்கம் போல் இந்த ஆட்டத்திலும் சென்னை யின் நட்சத்திர வீரரான இலானோ அசத்தலாக ஆடினார். 16-வது நிமிடத்தில் மிக அற்புதமாக கோல் கம்பத்தின் அருகே பந்தை கடத்தி சென்ற இலானோவின் கோல் முயற்சியை நார்த் ஈஸ்ட் கோல் கீப்பர் ரெஹனேஷ் முறியடித்தார்.

இதன்பிறகு 25-வது நிமிடத் தில் இடது மூலையில் இருந்து மிக துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்தார் சென்னை யின் டென்சன் தேவதாஸ். அப்போது பெனால்டி ஏரியாவுக் குள் நின்ற இலானோ, நார்த் ஈஸ்டின் இரு பின்கள வீரர்களையும் தாண்டி ஒரு ஜம்ப் செய்து பந்தை தலையால் முட்டி கோலடித்து சென்னை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற வைத்தார். ஆனால் அடுத்த 13-வது நிமிடத்தில் (38-வது நிமிடம்) சென்னைக்கு பதிலடி கொடுத்தது நார்த் ஈஸ்ட். ஜேம்ஸ் கீன் கொடுத்த கிராஸில் சீமென்லென் இந்த கோலை அடித்தார்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 77-வது நிமிடம் வரை சமநிலை நீடிக்க, 78-வது நிமிடசத்தில் தனது 2-வது கோலை அடித்து சென்னையை முன்னிலை பெற செய்தார் இலானோ. இதன்பிறகு ஆட்டம் தீவிரமடைய அதன் உச்சகட்டமாக 84-வது நிமிடத்தில் இலானோவுக்கும், நார்த் ஈஸ்ட் மிட் பீல்டர் ஃபெலிப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இலானோ மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார். இந்த நிலையில் 85-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் முன்கள வீரர் கோகே மிக அழகான வாலி கோலை அடித்து தனது அணியை தோல்வியிலிருந்து மீட்க, போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆட்டம் டிராவில் முடிந்தாலும் சென்னை அணி 11 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்திலேயே உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE