சொந்த மண்ணில் பறிகொடுத்த உலக செஸ் சாம்பியன் பட்டத்தை, நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனிடமிருந்து மீண்டும் தட்டிப்பறிக்க, இன்று நடக்கும் போட்டியில் வென்றே தீரவேண்டிய நெருக்கடியில் களம்காண்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
ரஷ்யாவில் உள்ள சூச்சி நகரில் 12 சுற்றுக்களைக் கொண்ட உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தும், கடந்த முறை சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆனந்தை வீழ்த்தி, முதல் முறையாக உலக சாம்பியன் ஆனவரும், ‘சூப்பர் டேலன்ட்’ என்றழைக்கப்படுபவருமான நார்வேயின் இளம் வீரர் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர்.
10 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 5.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். ஆனந்த் 4.5 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறார். முதலில் 6.5 புள்ளிகளை யார் பெறுகிறாரோ அவரே சாம்பியன் என்பதால், கார்ல்சன் ஒரு வெற்றி பெற்றால் (வெற்றிக்கு ஒரு புள்ளி, டிராவுக்கு அரை புள்ளி) கூட போதும். அதேநேரத்தில், அடுத்த இரு போட்டிகளையும் சமன் செய்தாலும் பட்டத்தை அவர் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.
நெருக்கடியில் ஆனந்த்
இன்று நடக்கும் 11-வது சுற்றில் வெற்றி பெற்று, ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், இந்த ஊசலாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கார்ல்சன் தீவிரம் காட்டுவார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதேநேரத்தில், மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் உலக சாம்பியன் பட்டத்தினை கார்ல்சனிடமிருந்து மீண்டும் பறிக்க முடியும் என்ற மிக நெருக்கடியான நிலைக்கு மூத்தவீரர் ஆனந்த் தள்ளப்பட்டுள்ளார். மேக்னஸ் கார்ல்சன் போன்ற மிகத் துடிப்பான வீரரிடம், இத்தகைய நெருக்கடியான கட்டத்தில்,இரண்டு வெற்றிகள் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். ஆனால், “மீண்டு வருவேன்,” என்று நம்பிக்கையுடன் ஆனந்த் கூறியிருப்பது, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்திருக்கிறது.
ஆனால், ஆனந்த் ஓர் அற்புதத்தினை நிகழ்த்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஏன் அப்படி? சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில், 4 சுற்றுகள் மீதமிருக்கையில், பின்தங்கிய நிலையிலிருந்த வீரர்கள் வெற்றி பெற்றதேயில்லை என்பது வரலாறு. அவற்றில் பெரும்பாலான ஆட்டங்களில், 10-வது சுற்றின் முடிவில் இரு வீரர்களும் சமநிலை பெற்றிருந்தபோதிலும் முதலில் முந்தியவரே பட்டத்தை வென்றுள்ளனர். அதிலும் தற்போதைய நிலையில் ஆனந்த் ஒரு புள்ளி பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அற்புதம் நிகழ்த்துவாரா?
இன்றைய போட்டியில் வெள்ளைக் காய்களை வைத்து ஆடுவது கார்ல்சனுக்கு கூடுதல் பலம். ஒவ்வொரு நகர்த்துதலும் மிக முக்கியமானதாகக் கருதப்படும் (கடந்த போட்டியில் ஒரு நகர்த்தலுக்கு 33 நிமிடங்களை செலவிட்டார் கார்ல்சன்) செஸ் ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் களமிறங்குபவரே முதலில் காய் நகர்த்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
அந்த வகையில், ஒரு வெற்றி பெற்றாலே சாம்பியன் பட்டத்தினை தக்கவைக்கலாம் என்ற நிலையில் வெள்ளைக் காய்களுடன் களமிறங்குவது கார்லசனுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. எனவே, அடுத்தடுத்த வெற்றி என்ற அற்புதத்தினை ஆனந்த் நிகழ்த்தினாலொழிய, நார்வே இளம்புயல் மீண்டும் சாம்பியனாவதை அவரால் தடுக்கமுடியாது.
அக்னி பரீட்சை
ஆனால் 2012-ல் பட்டத்தினை தக்கவைத்தபோது, போரிஸ் கெல்பாண்டுடன் சமநிலை பெற்ற பிறகு, டைபிரேக்கரில் அவரை ஆனந்த் வென்றார். அதனால் போட்டியை தொடருவதற்கான கடைசி வாய்ப்பினைத் தக்க வைத்துக் கொள்ள தனது அனுபவம் முழுவதையும் இன்றைய ஆட்டத்தில் ஆனந்த் காட்டுவார் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்ச மிருக்காது என்பது உறுதி.
ஒருவேளை, இந்த சுற்றில் வெற்றி பெற்று, செவ்வாய்க்கிழமை நடக்கும் இறுதிச்சுற்றில் டிரா செய்தால், அதன்பிறகு டைபிரேக்கரில் கார்ல்சனை வெல்ல ஆனந்துக்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கு அவர் இன்றைய அக்னி பரீட்சையைக் கடக்கவேண்டும். அற்புதம் நிகழ்த்துவாரா ஆனந்த்?
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago