டாப் ஆர்டரை இழந்து இந்திய அணி தவிப்பு; நீஷம் காட்டிய தயவில் பிழைத்தார் ரிஷப் பந்த்

மான்செஸ்டரில் இன்று தொடர்ந்து நடைபெறும் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் 240 ரன்கள் இலக்கை விரட்டி வரும் இந்திய அணி ரோஹித், ராகுல், கோலி, தினேஷ் கார்த்திக் விக்கெட்டுகளை இழந்து 13 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

 

ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சுறுத்தலாகத் திகழ்கிறார்.

 

ரிஷப் பந்த்தும் ஆட்டமிழந்திருப்பார், ஆனால் அவருக்கு சற்று முன் பெர்கூசன் வீசிய பந்தை பிளிக் செய்ய ஷார்ட் மிட் விக்கெட்டில் நீஷம் கேட்சைக் கோட்டை விட்டார். கேட்சை விட்டாரா, மேட்சை விட்டாரா என்பது மேட்ச் முடிவில்தான் தெரியும்.

 

பாண்டியா, பந்த் ஆடி வருகின்றனர்.

 

முன்னதாக ரோஹித் சர்மா, மேட் ஹென்றி வீசிய அருமையான அவுட் ஸ்விங்கருக்கு லேதமிடம் கேட்ச் ஆகி 1 ரன்னில் வெளியேறினார். ட்ரெண்ட் போல்ட்டின் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை விராட் கோலி சூழ்நிலையின் விபரீதம் புரியாமல் அக்ராஸ் த லைனில் ஆட பந்து கால்காப்பைத் தாக்கியது, நடுவர் இல்லிங்வொர்த் கையை உயர்த்தினார், கோலி ரிவியூ செய்தார், மிகவும் நேராக வாங்கியிருந்தார் கோலி அது அவுட்.

 

கே.எல்.ராகுல் ஹென்றி வீசிய பந்தை ஆடுவதால் விட்டுவிடுவதா என்ற இரண்டக மனநிலையில் தொட்டார், கெட்டார், 1 ரன்னில் அவுட்.

 

தினேஷ் கார்த்திக் 20வது பந்தில்தான் பவுண்டரி அடித்து தன் கணக்கைத் தொடங்கினார். ஆனால் ஹென்றி வீசிய பந்தை காற்றில் ஆடினார், பேக்வர்ட் பாயிண்டில் நீஷம் அருமையாக கேட்ச் எடுக்க 6 ரன்களில் தினேஷ் கார்த்திக் கதை முடிந்தது.

 

தோனியை எவ்வளவு காப்பாற்ற முடியுமோ அவ்வளவு காப்பாற்றுகிறது இந்திய அணி நிர்வாகம், 2011 உலகக்கோப்பையின் போது தைரியமாக இறங்கி வெற்றி பெறச் செய்தவர் இப்போது அணி துவண்டிருக்கும் போது இறங்கி தைரியம் கொடுக்க வேண்டும், ஆனால் அவர் இன்னும் இறக்கப்படவில்லை, இந்தச் சூழ்நிலைகளில் அதிக அனுபவம் இல்லாத பந்த், பாண்டியா ஆடி வருகின்றனர். இந்திய அணி 15 ஓவர்களில் 43/4.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE