நாளை (வியாழன்) தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முகுந்த்துக்குப் பதிலாக கே.எல்.ராகுல் ஆடுவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பேட்டிங் தடுமாற்றம், பீல்டிங் குறைபாடு, காயங்கள், தாக்கமில்லாத பந்து வீச்சு கொண்ட இலங்கை அணியை முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்களில் வீழ்த்தியது. ஷிகர் தவண் தனது டெஸ்ட் சராசரியை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயர்த்தியுள்ளார், புஜாரா, விராட் கோலி அனைவருக்குமே சராசரிகளை உயர்த்திக் கொள்வதற்கான தொடர்தான் இது.
இதில் பல்வேறு காய்நகர்த்தல்களுடன் தேர்வு செய்யப்பட்ட முகுந்த் பலிகடாவாக்கப்படுவார். அவர் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார், ஏனெனில் அணியில் தேர்வு செய்வதே பலிகடா அந்தஸ்தில்தான் என்பது அவருக்குத் தெரியாமலா போய்விடும். ஆனால் முகுந்த் கவலைப்பட வேண்டியதில்லை மீண்டும் யாராவது காயமடையாமல் போய் விடுவார்களா என்ன?
இந்நிலையில் ராகுல் ஏன் தேவை என்று விராட் கோலி கொடுத்த விளக்கம் வருமாறு:
கே.எல்.ராகுல் தன்னை நிறுவிக்கொண்ட ஒரு தொடக்க வீரர். யாராவது ஒரு தொடக்க வீரர் ராகுலுக்கு வழிவிடத்தான் வேண்டும், காரணம் கடந்த 2 ஆண்டுகளில் அவர் நமக்காக செய்த பேட்டிங்தான். மீண்டும் அவர் விளையாடத் தகுதியுடையவரே.
மேலும் எந்த ஒரு வீரர் ஆட்டத்தில் கூடுதல் தாக்கம் செலுத்த முடியும் என்பதை ஒருவர் உட்கார்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது, அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன். ஆட்டத்தில் வித்தியாசத்தை நேரடியாக தாக்கம் பெறச் செய்யும் திறமை யாருக்கு உள்ளது? யார் இதுவரை சிறப்பாக ஆடினாரோ அவர்தான்” என்றார்.
இலங்கை அணிக்கு மிகப்பெரிய சங்கடமான தொடராகும் இது. கேப்டன் தினேஷ் சந்திமால் அணிக்குத் திரும்பியுள்ளார். லாஹிரு திரிமானே மீண்டும் தன் இடத்தைப் பிடித்துள்ளார். 2015 தொடரில் தினேஷ் சந்திமால் 169 பந்துகளில் 162 ரன்களை கால்லே மைதானத்தில் வெளுத்துக் கட்டி, இந்திய பந்து வீச்சைப் புரட்டி எடுத்தார். அவர் இப்படிப்பட்ட இன்னிங்ஸை ஒரு தோல்விக்குப் பிறகு ஆடி அணிக்கு உத்வேகம் சேர்ப்பது அவசியம்.
பந்து வீச்சில் ரங்கனா ஹெராத்தின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் தகுதி சோதிக்கப்பட்டு அவர் ஆடுவாரா இல்லையா என்பது நாளை தெரியவரும். ஆனாலும் எதற்கும் இருக்கட்டும் என்று பதிலி வீரரும் ரிஸ்ட் ஸ்பின்னருமான லக்ஷன் சண்டகன் என்பவர் அணீயில் சேர்க்கப்பட்டுள்ளார். மலிந்தா புஷ்பகுமாரா, தனஞ்சய டிசில்வா ஆகியோர் அணியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச்சில் பந்துகள் கன்னாபின்னாவென்று திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதில் குல்தீப் யாதவ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் புஜாரா தனது 50-வது டெஸ்ட் போட்டியில் களம் காண்கிறார். அஸ்வின் இன்னும் 50 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை எட்டுவார். கடந்த முறை இந்த மைதானத்தில் இந்திய அணி இலங்கையை 117 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இலங்கை அணி இன்னும் பாசிட்டிவாக ஆட வேண்டிய தேவையுள்ளது, இலங்கை ஸ்பின்னர்கள் இன்னும் கொஞ்சம் தாக்குதல் உத்தியை மேற்கொள்ள வேண்டும், கடந்த போட்டியில் ஷிகர் தவணுக்கு களவியூகம் சரியாக அமைக்கப்படவில்லை, நெருக்கமாக பீல்டிங் அமைத்து எகிறி வந்து ஆடினாலும் ஓரளவுக்கு சில இடங்களில் பீல்டர்களை நிறுத்தி பவுலர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தும் தன்னம்பிக்கையை உருவாக்க சந்திமால் சிந்திக்க வேண்டும்.
இந்திய அணி பேட்டிங் வலுவானது, ஓரிரு விக்கெட்டுகளை தொடக்கத்தில் வீழ்த்தி புஜாராவையும் விரைவில் காலி செய்தால் கோலி நெருக்கடிக்கு அடிபணிவார். ஆனால் இவற்றையெல்லாம் செய்யும் மனநிலையில் இலங்கை அணி இருக்கிறதா என்பது தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago