ஹீரோவான ஷேய் ஹோப்; 2-வது இன்னிங்ஸிலும் சதம்: பீனிக்ஸ் பறவை போல் எழுச்சிபெற்ற மே.இ.தீவுகள்

By ஆர்.முத்துக்குமார்

லண்டன்

லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறத் தேவையான 322 ரன்களை மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி மருத்துவம் அளித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து தனது உறுதியையும், அபாரமான உத்தியையும் வெளிப்படுத்திய ஷேய் ஹோப் 2-வது இன்னிங்ஸில் அதைவிடவும் சிறந்த பொறுமையையும் உறுதியையும், உத்தியையும் கடைபிடித்து ஆண்டர்சன், பிராட், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோரது கடும் சோதனைகளைக் கடந்து 211 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இந்தப் பிட்சில், இங்கிலாந்தின் கடுமையான பந்து வீச்சுக்கு எதிராக 322 ரன்களை 4-வது இன்னிங்ஸில் எடுப்பது நிச்சயம் ஒரு பெரிய சாதனைதான்.

அதுவும் எட்ஜ்பாஸ்டனில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்குள்ளாக படுதோல்வியைச் சந்தித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கும், கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான மே.இ.தீவுகள் அணி 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய விதம் உண்மையில் பழைய மே.இ.தீவுகளை நினைவூட்டும் விதமாக அமைந்தது, கிரெய்க் பிராத்வெய்ட் முதல் இன்னிங்சில் சதம் எடுத்ததோடு இந்த வெற்றிகர விரட்டலில் 95 ரன்களை எடுத்து மீண்டும் சதமெடுப்பார் என்று நினைத்த தருணத்தில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார். கடும் விமர்சனங்களுக்கும், கேலிப்பார்வைக்கும் பிறகு இப்படியொரு வெற்றி பெறுவது எவ்வளவு பெரிய அணியினாலும் முடியாதது. இதுதான் டெஸ்ட் போட்டி, இதுதான் வெற்றி, உள்ளூரில் கூப்பிட்டு குழிபிட்சைப் போட்டு அனைவரையும் துவைத்து எடுத்து அதைப்பற்றி வானாளவிய பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவத்தை கிரிக்கெட் மீது உண்மையான நேயம் இருந்தால் நிச்சயம் உணர வைக்கும் என்று நம்புவோமாக.

ஷேய் ஹோப் ஹெடிங்லீயில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை புரிந்தவரானார். உயர்வு நவிற்சி இல்லாமல் இந்த வெற்றியை வர்ணிக்க முடியாது. டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்ட்டில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இப்படிப்பட்டதொரு எழுச்சி இதுவரை நடந்திருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அதுவும் இந்த டெஸ்ட் போட்டியிலும் ஏகப்பட்ட கேட்ச்களை விட்டு அதிலும் மனம் துவளாமல் எழுச்சி பெறுவதெல்லாம் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வரலாறு ரத்தத்தில் ஊறியிருந்தால்தான் சாத்தியம்.

தொடக்க விரர் கிரெய்க் பிராத்வெய்ட் இந்த டெஸ்ட் போட்டியில் 229 ரன்களையும் ஷேய் ஹோப் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த சாதனையுடன் 265 ரன்களையும் எடுத்துள்ளனனர். இவர்களது அபாரமான உறுதி மற்றும் பிடிவாதமான ஆட்டத்தினால் ஹெடிங்லீ மைதானத்தில் 2-வது வெற்றிகரமான விரட்டலை சாதித்தது மே.இ.தீவுகள்.

5/0 என்று இன்று தொடங்கிய மேஇ.தீவுகள் அணியில் ஷேய் ஹோப், பிராத்வெய்ட் இணைந்து மீண்டும் 145 ரன்களைச் சேர்த்தனர், முதல் இன்னிங்ஸில் இருவரும் இணைந்து 246 ரன்களைச் சேர்த்தனர். இன்றைய ஆட்டம் முடிய இன்னும் 4 ஓவர்கள் இருக்கும் தருணத்தில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் பிளிக் செய்து ஷேய் ஹோப் வெற்றி ரன்களை எடுத்தார். 5-வது விக்கெட்டுக்காக ஷேய் ஹோப்புடன் இணைந்த ஜெர்மைன் பிளாக்வுட் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெற்றியை துரிதப்படுத்தியதோடு இருவரும் இணைந்து 74 ரன்களைச் சேர்த்தனர்.

இன்னும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முதல் இங்கிலாந்து பவுலராகும் கனவுடன் வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட் இல்லாமல் முடிந்து போனார்.

317 ரன்கள் தேவை என்ற நிலையில் தொடங்கிய மே.இ.தீவுகளுக்குத் தேவையான அதிர்ஷ்டம் கிடைத்தது, அலிஸ்டர் குக் ஸ்லிப்பில் பிராட் பந்தில் பிராத்வெய்ட்டுக்கு கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். இது இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விட்ட 4-வது கேட்ச், மொத்தமாக 11 கேட்ச்கள் விடப்பட்டது.

ஆண்டர்சன், பிராட் பந்துகளை ஸ்விங் செய்து அடிக்கடி மட்டையைக் கடந்து செல்லச் செய்தனர், ஆனால் பொவெல், பிராத்வெய்ட் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து எதிர்கொண்டனர். ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட பொவெல் கடைசியில் கவனம் சிதறியதால் 23 ரன்களில் பிராட் பந்தை 3-வது ஸ்லிப்பில் ஸ்டோக்சிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். கைல் ஹோப் துரதிர்ஷ்டவசமாக ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார், பிராத்வெய்ட் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்ற பிராடின் கைகளில் பட்டு ரன்னர் முனையின் ஸ்டம்பில் பட, கைல் ஹோப் கிரீசுக்கு வெளியே சிக்கினார்.

அதன் பிறகு ஷேய் ஹோப், பிராத்வெய்ட் இணைந்து 144 ரன்களைச் சேர்த்தனர். 100 ரன்களை இருவரும் சேர்த்த போது ஸ்டூவர்ட் பிராட் கோபத்தில் பிட்சை உதைத்து நடுவர் ரவியின் அறிவுரையைக் கேட்க நேர்ந்தது.

ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதக்கூட்டணியை அமைத்தது மே.இ.தீவுகளுக்கு 4-வது முறையாகும். அதே போல் டெஸ்ட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இரட்டைச்சதக் கூட்டணி, ஒரு சதக்கூட்டணி அமைத்த 7-வது ஜோடியாகினர் பிராத்வெய்ட்-ஷேய் ஹோப்.

பிராத்வெய்ட் 95 ரன்களுக்கு இங்கிலாந்தின் பொறுமையைச் சோதித்து கடைசியில் மொயின் அலியின் வைடு பந்தை ஸ்டோக்சிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து மைதானத்தில் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்ய பெவிலியன் திரும்பினார். ராஸ்டன் சேஸ் சில கவலைதரும் தருணங்களிலும் 58 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்து கடைசியில் கிறிஸ் வோகஸ் பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், மிட் ஆனில் பதிலி வீரர் மேசன் கிரேன் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

ஜெர்மைன் பிளாக்வுட் இறங்கி ஜேம்ஸ் ஆண்டர்சனை நேராக சிக்ஸ் அடித்து பிறகு ஷேய் ஹோப்பின் சிங்கிளுக்கு ஓடி வந்ததன் மூலம் நாயகன் ஷேய் ஹோப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த சாதனையைப் புரிந்தார்.

ஷேய் ஹோப் 106 ரன்களில் இருந்த போது பிராட் பந்தில் வேகமாக வந்த கேட்ச் வாய்ப்பை குக் நழுவவிட்டார், வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது போல் ஜெர்மைன் பிளாக்வுட் அப்பர் கட்டில் சிக்ஸ் ஒன்றையும் அடித்தார். ஜெர்மைன் பிளாக்வுட் ஆட்டத்தை கிராண்ட் ஸ்டைல் முடிக்க முயன்றார் முடியவில்லை மொயின் அலி பந்தை மேலேறி அடிக்க முயன்று ஸ்டம்ப்டு ஆனார். கடையில் வெற்றிக்கான ரன்களை அடித்தார் ஏற்கெனவே ஹீரோவாகிவிட்ட ஷேய் ஹோப். ஆட்ட நாயகனாகவும் ஷேய் ஹோப் தேர்வு செய்யப்பட்டார்.

அருமையான டெஸ்ட் போட்டியின் அருமையான 2 டெஸ்ட் இன்னிங்ஸ்களை கடும் சவாலான சூழலில் ஆடினர் ஷேய் ஹோப் மற்றும் பிராத்வெய்ட். இந்த வெற்றி மே.இ.தீவுகள் கிரிக்கெட்டிற்கு திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்