வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று (செவ்வாய்) 265 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
டேவிட் வார்னர் 96 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 ரன்களுடனும், கேப்டன் ஸ்மித் 25 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். முன்னதாக வங்கதேச அணி தன் 2-வது இன்னிங்ஸில் 221 ரன்களுக்குச் சுருண்டது, நேதன் லயன் 82 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆஷ்டன் ஆகர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மிக முக்கிய விக்கெட்டாக தமிம் இக்பாலை அபாரமான, எதிர்பாராத பவுன்சரில் கமின்ஸ் வீழ்த்தினார், முஷ்பிகுர் ரஹிம் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
3-ம் நாள் ஆட்டத்திலும் இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின. வங்கதேசம் இன்றைய தினத்தை 88 ரன்கள் முன்னிலையில் தொடங்கியது, 9 விக்கெட்டுகள் கையில் இருந்தன. ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் காயமடைந்து வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டது. தமிம் இக்பால் முதல் இன்னிங்ஸில் எடுத்த 71 ரன்களை தொடர்ந்து இந்த இன்னிங்ஸிலும் நேதன் லயனின் அபாரமான ஆஃப் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொண்டு 155 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்தார். 50-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு முக்கிய அரைசதங்களை எடுத்தார் தமிம். முஷ்பிகுர் ரஹிம் போர்வீரர் போல் நின்று 41 ரன்களை எடுத்தார். ஆனால் கீழ் வரிசை வீரர்கள் மடமடவென பெவிலியன் திரும்ப கடைசி 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்தது வங்கதேசம்.
நேதன் லயன் பிட்சிலிலிருந்து நிறைய பயனடைந்தார், பந்துகள் திரும்பி எழும்பின. இரவுக்காவலன் தைஜுல் இஸ்லாம் எல்.பி.ஆக, இம்ருல் கயேஸுக்கு ஒரு பந்து பிட்சின் காலடித்தடங்களில் பட்டு எழும்பி திரும்ப ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தமிம் இக்பால் அருமையாக ஆடினார், இவரும் முஷ்பிகுர் ரஹீமும் இணைந்து 68 ரன்களைச் சேர்த்தனர். ஆஷ்டன் ஆகர் பந்தை பாயிண்டில் பவுண்டரி அடித்து தமிம் இக்பால் 109வது பந்தில் அரைசதம் கண்டார். 78 ரன்கள் இருந்த போது கமின்ஸ் வீசிய திடீர் ஷார்ட் பிட்ச் பந்து தமீம் இக்பாலின் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது. ஜேசன் கில்லஸ்பி புகழ்பெற்ற அந்த சென்னை டெஸ்ட் போட்டியில் (2001 தொடர்) சச்சின் டெண்டுல்கருக்கு வீசிய ஒரு பயங்கர பவுன்சரை நினைவூட்டியது இந்த பவுன்சர்.
முஷ்பிகுர் ரஹிம், நேதன் லயன் பந்தை மிட் ஆனுக்கு மேல் தூக்கி அடித்து ஆக்ரோஷம் காட்டினார். மீண்டும் அடுத்த லயன் ஓவரில் அதே இடத்தில் இம்முறை சிக்சர் அடித்து ஆஸி.க்கு ‘சுலபமல்ல’ என்பதை நினைவூட்டினார். பிறகு ஓரளவு நிலைத்து ஆட முயன்ற போது 41 ரன்களில் சபீர் ரஹ்மான் நேர் ஷாட் ஒன்று லயன் விரல்களில் பட்டு ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்க முஷ்பிகுர் ரஹிம் கிரீசுக்கு உள்ளே திரும்ப முடியவில்லை, ரன் அவுட் ஆனார்.
ஷாகிப் அல் ஹசன் எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆட முயன்று கமின்சின் பந்தை தவறாகக் கணித்து மேலேறி வந்து ஆடி கவரில் கமின்சிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் அவுட் ஆனார். நசீர் ஹுசைனை டக்கில் ஆஷ்டன் ஆகர் வீழ்த்த, ஷபீர் அகம்ட் 22 ரன்களில் லயன் பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது, அவர் ரிவியூ கேட்டிருந்தால் நாட் அவுட்டாகியிருக்கும் பந்து மட்டையிலும் படவில்லை கிளவ்விலும் படவில்லை. பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் பேடில் பட்டது ரீப்ளேயில் தெரியவந்தது. மெஹதி ஹசன் மிராஸ் 4 பவுண்டரிகளுடன் சுறுசுறுப்பான 26 ரன்களை எடுத்து கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து லயனிடம் வீழ்ந்தார். கடைசி 5 விக்கெட்டுகள் 35 ரன்களில் சரிய வங்கதேசம் 221 ரன்களை எடுத்து 264 ரன்கள் முன்னிலை பெற்றது.
கேட்சை நழுவ விட்ட பிறகு வார்னர் அபாரம்:
265 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மேட் ரென்ஷாவை மெஹதி ஹசன் பந்து வீச்சில் எல்.பி.முறையில் இழந்தது. இந்தப் பந்துக்கு முதல் பந்தை குத்தி வெளியே திருப்பி ரென்ஷாவை பீட் செய்தார் மெஹதி ஹசன், அடுத்த பந்தை திருப்பாமல் அதே இடத்தில் பிட்ச் செய்து நேராக விட்டார் மெஹதி, திரும்புவதற்காக எதிர்பார்த்த ரென்ஷா பந்து திரும்பாததால் நேராக கால்காப்பில் வாங்கி வெளியேறினார். மெஹதி உத்தியே எப்போதும் அப்படித்தான் ஓரிரு பந்துகளைத் திருப்பி ஒரு பந்தை சரேலென உள்ளே செலுத்தும் உத்தியாகும் இது. உஸ்மான் கவாஜாவின் துயரம் தொடர்ந்தது 1 ரன்னில் அவர் ஷாகிப் பந்தை ஸ்வீப் ஆடினார், பந்து மட்டைக்கு வரவில்லை டீப் ஸ்கொயர் லெக்கில் அருமையாக கேட்ச் பிடிக்கப்பட்டது.
28/2 என்ற நிலையில் வார்னர், ஸ்மித் ஒன்றிணைந்தனர். 14 ரன்களில் வார்னர் இருந்த போது ஷாகிப் பந்தில் எட்ஜ் எடுக்க ஸ்லிப்பில் சவுமியா சர்க்கார் வாய்ப்பைத் தவற விட்டார், இந்தப் போட்டியில் வங்கதேசம் தோற்றால் அது சவுமியா சர்க்கார் விட்ட கேட்சினால்தான் என்று முடிவுகட்ட வேண்டி வரும்.
அதன் பிறகு வார்னர் தளர்வான பந்துகளை பவுண்டரி விளாசினார். லெக் திசையில் லாங் ஆன், மிட்விக்கெட், ஸ்கொயர் லெக் என்று ஆடிய வார்னர், ஆஃப் திசையில் லாங் ஆஃப், கவர் என்று விக்கெட்டுக்கு முன்னால் ஸ்ட்ரோக்குகளை ஆடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார்.
கேப்டன் ஸ்மித்தும் வார்னரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் இதுவரை 81 ரன்களைச் சேர்த்துள்ளனர். ஸ்மித் 25 நாட் அவுட்.
ஆஸ்திரேலியா 109/2, வெற்றி பெற இன்னும் 156 ரன்கள் தேவை என்ற நிலையில் நாளை (புதன்) ஸ்மித், வார்னர் களமிறங்குகின்றனர், வங்கதேசத்தைப் பொறுத்தவரையில் இவர்களில் ஒருவரை விரைவில் நாளை வீழ்த்தினால் கூட ஆஸி.க்கு கடும் நெருக்கடி கொடுக்கும், எனவே த்ரில் முடிவை நோக்கி இந்த டெஸ்ட் பயணித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago