கால்லே டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இந்தியா தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 498 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றுள்ளது இந்திய அணி.
3-ம் நாள் ஆட்ட முடிவில் விராட் கோலி 114 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 76 ரன்களுடன் களத்தில் உள்ளார். கடைசி பந்தில் தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 116 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் குணதிலக பந்தில் எல்.பி.ஆனார்.
ஷிகர் தவண் 14 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் திலுருவன் பெரேராவின் ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை குறிபார்த்து பாயிண்ட் பீல்டர் குணதிலக கையில் அடித்தார், இந்தப் பந்தை அவர் எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்க முடியும். விக்கெட் விழுமா என்ற நிலையில் இந்த எதிர்பாராத விக்கெட் இலங்கை அணிக்கு சந்தோஷ அதிர்ச்சியை அளித்தது, ஏமாற்றச் சிரிப்புடன் தவண் வெளியேறினார்.
புஜாரா 15 ரன்கள் எடுத்த நிலையில் லெக் கல்லியில் இதற்காகவென்றே நிறுத்தப்பட்டிருந்த மெண்டிஸிடம் பிளிக் ஷாட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிறுத்தி வைத்து வீழ்த்திய பவுலர் குமாரா. 56/2 என்ற நிலையில் முகுந்த், கோலி ஜோடி இணைந்து ஸ்கோரை 189 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.
முன்னதாக இலங்கை அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, திலுருவன் பெரேரா 132 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 309 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றும் நடப்பு கிரிக்கெட் உலக ஃபேஷனுக்கு இணங்க பாலோ ஆன் அளிக்கப்படவில்லை.
இலங்கை அணிக்கு இருக்கும் சங்கடங்கள் பற்றாது என்று கேப்டன் ரங்கனா ஹெராத், விராட் கோலியின் சக்திவாய்ந்த டிரைவை தடுக்க முயன்று காயம் பட்டு வெளியேறினார்.
இந்த மைதானத்தில் அதிகபட்ச 4வது இன்னிங்ஸ் வெற்றித் துரத்தல் 99 ரன்களே. ஆட்டமுடிவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் இந்த மைதானத்தில் அதிகபட்ச 4வது இன்னிங்ஸ் ஸ்கோர் 300 ரன்களே. இந்நிலையில் மழை மட்டுமே இலங்கையைக் காப்பாற்ற முடியும் என்று தெரிகிறது.
முதல் இன்னிங்ஸில் சடுதியில் பெவிலியன் சென்ற விராட் கோலி இம்முறை தாக்கமில்லாத இலங்கைப் பந்து வீச்சில் தனது டிரைவ்களை கண்டுபிடித்துக் கொண்டார், பிறகு தள்ளி தள்ளி நிறுத்தி வைக்கப்பட்ட பீல்டிங்கினால் நிறைய ஒன்று இரண்டு என்று ரன் குவித்தார் கோலி. அபினவ் முகுந்தும், தாக்கமற்ற இந்தப் பந்துவீச்சைப் பயன்படுத்திக் கொண்டார், எப்படியும் அடுத்த டெஸ்ட் போட்டியில் ராகுல் வந்துவிடப்போகிறார், இவர் மீண்டும் பெஞ்சிற்குத்தான் செல்ல வேண்டும். ஆனாலும் நன்றாக ஆடினார்.
முன்னதாக ரவீந்திர ஜடேஜா உணவு இடைவேளைக்குப் பிறகு இலங்கை இன்னிங்ஸை முடித்து வைத்தார். குமாரா அவுட் ஆக, திலுருவன் பெரேரா அருமையாக ஆடி 92 ரன்களில் எதிர்முனையில் நாட் அவுட்டாகத் தேங்கிப் போனார். ஜடேஜா மற்றும் அஸ்வினை தலா 2 சிக்சர்கள் அடித்தார், ஒருமுறை உமேஷ் யாதவ்வை ஒதுங்கிக் கொண்டு 2 பவுண்டரிகள் சாத்தினார்.
ஆஞ்செலோ மேத்யூஸ் 54 ரன்களிலிருந்து 83 ரன்கள் வரை வந்தார். ஆனால் ஜடேஜாவின் பந்தை நேராக ஷார்ட் கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹெராத் ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஜடேஜாவிடம் காலியானார். ஹர்திக் பாண்டியா தன் முதல் டெஸ்ட் விக்கெட்டாக நுவான் பிரதீப்பை பவுல்டு செய்தார்.
மொத்தத்தில் மிக எளிதான, சவால்களற்ற டெஸ்ட் போட்டியாக இது கோலிக்கு அமைந்துள்ளது. கோலி உண்மையில் அதிர்ஷ்டக்காரர்தான், 10-13 டெஸ்ட் போட்டிகள் உள்நாட்டில், பிறகு ஆப்கானிடம் தோற்ற மே.இ.தீவுகள் தொடர், தற்போது ஜிம்பாப்வேயிடம் ஒருநாள் தொடரில் தோற்று டெஸ்ட் போட்டியில் திணறி வென்ற இலங்கைக்கு எதிரான தொடர்.. இதற்கு மேல் என்ன வேண்டும்? இடையில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி உதை மட்டும்தான்... காரணம் சவாலான பந்து வீச்சுக்கு எதிராக பேட்டிங் திறமை அம்பலமானது.
ஆனால் இந்தச் சவாலற்ற டெஸ்ட் போட்டியில் கூட ஃபாலோ ஆன் கொடுக்காமல் ஆடுவதுதான் ‘சவால்களை விரும்புவதாக’ கூறும் கோலியின் அணுகுமுறையாக உள்ளது ஆச்சரியமே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago