புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் ஹைதராபாத்தில் இன்று தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 138 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளன.
இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
இந்த 12 அணிகளும் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், யு மும்பா, ஹரியாணா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், யுபி யோதாஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த 12 அணிகளும் தங்களது பிரிவுகளுக்குள்ளாக 15 ஆட்டங்களில் மோதவுள்ளன. இதில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளேப் ஆப் சுற்றில் 3 தகுதி சுற்று ஆட்டங்களும், 2 வெளியேற்று சுற்று ஆட்டங்களும் உள்ளன.
ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள தொடக்க விழா நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ராணா டகுபதி. அல்லு அர்ஜுன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பாட்மிண்டன் வீரர்கள் சாய் பிரணீத், கிடாம்பி ஸ்ரீகாந்த் பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உட்பட பலரும் பங்கேற்கின்றனர். தொடக்க விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.80 கோடியும், 3-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.20 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.80 லட்சமும், 5 மற்றும் 6-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.35 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5-வது சீசனின் தொடக்க ஆட்டம் ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தெலுகு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்காக மொத்தம் ரூ.46.99 கோடிக்கு 227 வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக அணியின் இணை உரிமையாளராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
தமிழக அணி பாஸ்கரன் தலைமையில் சிறப்பான முறையில் தயாராகி உள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக ரூ.63 லட்சத்துக்கு அமித் ஹூடா ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இவருடன் நட்சத்திர வீரரான அஜெய் தாக்குர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சி.அருணும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் புரோ கபடி லீக் தொடரின் ஆட்டங்கள் செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. பிளே ஆஃப் சுற்றில் ஒரு தகுதி சுற்று ஆட்டம் அக்டோபர் 26-ம் தேதியும், இறுதிப் போட்டி 28-ம் தேதியும் சென்னையில் நடத்தப்படுகிறது.
சும்மா வரமுடியாது
புரோ கபடி விதிமுறைப்படி ஒரு அணி சார்பில் தொடர்ந்து 2 முறை மட்டுமே வெற்று ரைடு சென்று வரமுடியும். 3-வது ரெய்டு வாழ்வா, சாவா ரைடு ஆகும். அதாவது 3-வது ரைடின் போது ரைடர், எதிரணியில் யாராவது ஒருவரை ஆட்டமிழக்க செய்ய வேண்டும், இல்லையெனில் எதிரணியிடம் பிடிபட வேண்டும். இல்லையென்றால் ரைடர் ஆட்டமிழந்ததாக கருதப்படுவார். பொது கடிபயில் ஒரு ரைடர் 45 விநாடிகளோ அதற்கு மேலோ ரைடு செல்லாம். ஆனால் புரோ கபடியில் 30 விநாடிகள் மட்டுமே ரைடு செல்ல முடியும்.
'சூப்பர் 10'
பொதுவாக கபடியில் ஒருவர் எத்தனை பேரை ஆட்டமிழக்கச் செய்தாலும், அவருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது. ஆனால் புரோ கபடியில் ஒரு ரைடர் 3 பேரை அவுட்டாக்கினால் அது சூப்பர் ரைடாக கணக்கிடப்படுகிறது.
3 அல்லது அதற்கு குறைவான வீரர்கள் சேர்ந்து ஒரு ரைடரை பிடித்தால் அது ‘சூப்பர் டேக்கிள்’ என அழைக்கப்படுகிறது. இதேபோல் ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் 5 முறை ரைடர்களை பிடிக்கும்போது அது ‘ஹை 5’ என்றும், ஒரு ரைடர் 10 புள்ளிகளைப் பெறும் போது அது ‘சூப்பர் 10’ என்றும் அழைக்கப்படுகிறது.
மேல்முறையீடு
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முறை புரோ கபடியில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிக்கும் முதல் பாதி ஆட்டத்தில் ஒரு மேல்முறையீடு வாய்ப்பும், 2-வது பாதி ஆட்டத்தில் ஒரு மேல்முறையீடு வாய்ப்பும் வழங்கப்படும்.
மேல்முறையீடு செய்த அணிக்கு சாதகமாக 3-வது நடுவரின் தீர்ப்பு அமைந்தால், அந்த மேல்முறையீடு வாய்ப்பு அப்படியே நீடிக்கும். ஒருவேளை 3-வது நடுவரின் தீர்ப்பு மேல்முறையீடு செய்த அணிக்கு எதிராக அமைந்தால் அந்த அணியால் மீண்டும் மேல்முறையீடு செய்ய முடியாது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago