189 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியா அதிர்ச்சித் தோல்வி

By ஆர்.முத்துக்குமார்

ஆன்ட்டிகுவாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளை 189 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இந்திய அணி பிறகு இலக்கை விரட்டும் போது 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.

இந்திய அணியின் கடந்த 16 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபந்துகளைச் சாப்பிட்டு அரைசதம் கண்டவராகவும், இத்தகைய படுமந்தமான இன்னிங்சை நியாயப்படுத்த வெற்றியையும் பெற்றுத் தராமலும் தோனி சரிவு கண்டுள்ளார்.

வாழ்நாளின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடும் ஃபாஸ்ட் மீடியம் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் தோனியை கடுமையாக வெறுப்பேற்றினார், அதாவது 40-வது ஓவருக்குப் பிறகு 4 ஓவர்களில் 13 ரன்களையே இவர் விட்டுக் கொடுத்தார். கடைசியில் தோனியை வீழ்த்தியும் விட்டார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

4 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு எதிராக இதே மே.இ.தீவுகளில் 202 ரன்கள் இலக்கைத் துரத்திய போது இந்திய பேட்டிங் வரிசை பெவிலியன் நோக்கி ஊர்வலம் மேற்கொண்ட போது தோனி தனிநபராக நின்று கடைசி ஓவரில் தேவையான 15 ரன்களை 3 பந்துகளில் எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

நேற்றோ 2 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 16 ரன்கள். தோனியால் இப்போது ஒன்றும் முடியவில்லை, நாளாக நாளாக ‘ஒயின்’ கெட்டுப் போகத் தொடங்கியுள்ளது. கெஸ்ரிக் வில்லியம்ஸ் தோனியை என்ன சேதி என்று கேட்டார், வேகம் குறைந்த பந்துகள் வேகமான லெந்த் பந்துகள் என்று மாறி மாறி உத்தி ரீதியாக தன்னை வளர்த்தெடுத்துக் கொள்ளாத தோனியின் பலவீனத்தை பறைசாற்றினார்.

சரி 49-வது கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து ஹோல்டரின் கடைசி ஓவரில் அவருக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் தோனி, ஆனால் அவரோ வில்லியம்ஸின் கடைசி பந்தை என்ன ஸ்ட்ரோக் ஆடினார் என்று தெரியவில்லை நேராக லாங் ஆனில் கையில் போய் உட்கார்ந்தது. தோனிக்கு பினிஷர் என்ற அந்தஸ்தை கொடுத்தது இத்தகைய ரன் எண்ணிக்கைகளே, கடைசியில் அவராலும் முடியவில்லை. காரணம் அவர் தனது பேட்டிங்கை மாறும் பந்து வீச்சுக்குத் திறனுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளவில்லை, அனைத்தையும் உத்தரவாதமாக எடுத்துக் கொண்டு அவர் கிரிக்கெட் ஆட்டத்தை தனக்குக் கீழ் இருப்பதாக நினைத்தார் போலும். எப்போதும் ஆட்டத்தை நாம் ஆடுவதில்லை, நம்மை ஆட்டம் ஆட்டுவிக்கிறது என்பதை உள்ளுணர்வு ரீதியாக உணரும் வீரர்களே மகான் வீரர்களாக ஆகின்றனர்.

நட்சத்திர வீரர் தோனியின் பினிஷர் அடையாளம் இப்படியாக பின்னடைவு காண, உலகின் நம்பர் 1 ஒருநாள், டி20 வீரரான கோலியையும் நேற்று மே.இ.தீவுகள் கேள்விக்குட்படுத்தியது. தொண்டைக்குழிக்கு பந்தை எகிறினால் கோலி வெறுப்படைவார், விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டு வீசினர். இம்முறையும் ஹோல்டர் தனது 3-வது பவுன்சரை வீச கோலிக்கு டாப் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தார். கும்ப்ளேயை ’விரட்டிய’ விராட், தனது கட்டுக்கோப்பையும் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தாமல் இருந்து வருவது வெளிப்படை. சச்சின் டெண்டுல்கர் அவரது உச்சத்தில் இருந்த போது ஒரு முறை வீழ்த்திய பந்தில் அடுத்த முறை வீழ்த்த முடியாது என்று ஆலன் டோனல்டு கூறுவார். இதுதான் மிகப்பெரிய வீரர்களுக்கான அடையாளம், ஆனால் கோலி அந்த இடத்தை எட்டுவதற்கு முன்பாகவே அவரை பீடத்தில் கொண்டு ஊடகங்கள் வைத்து விட்டன. 3 ரன்களில் வெளியேறினார்.

தினேஷ் கார்த்திக் தனது திறமைக்கு நியாயம் செய்யவில்லை, முதல் ரன்னை எடுக்க 13 பந்துகள் எடுத்துக் கொண்டதோடு, அடிக்கக் கூடிய ஷார்ட் பிட்ச் பந்தை டாப் எட்ஜ் செய்து வெளியேறினார். ஷிகர் தவண், ஜோசப் பந்தை அவருக்கென்றே நிறுத்தி வைக்கப்பட்ட ஷார்ட் மிட் ஆனில் கேட்ச் கொடுத்தார்.

அஜிங்கிய ரஹானே நன்றாக ஆடினார். ஆனாலும் 23 ரன்களில் அவருக்கு கேட்ச் விடப்பட்டது. தோனியும் ரஹானேயும் 54 ரன்களை 18 ஓவர்களில் சேர்த்தனர்.

கடந்த போட்டியில் இந்திய அணிக்கு சில சுலபரன்களை விட்டுக் கொடுத்து தோல்வி அடைந்த மே.இ.தீவுகள், இம்முறை நெருக்கியது, ரன்களே வரவில்லை, வில்லியம்ஸ், தேவேந்திர பிஷூ, ஆஷ்லெ நர்ஸ் ஆகியோர் முடிந்தால் ரன் எடுங்கள் என்ற ரீதியில் கசக்கிப் பிழிந்தனர். ரஹானேயாவது பவுண்டரி அடித்தார், ஆனால் தோனியோ வெறுமனே நிற்பதுவேயன்றி வேறொன்றையும் அறியேன் பராபரமே என்று நின்று கொண்டிருந்தார்.

தோனி தடுத்தாடினாலும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வழக்கம், ஆனால் நேற்று அதுவும் இல்லை, தடவினார், இடைவெளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார். பிஷூ, நர்ஸ் போன்ற பவுலர்களையே தடவு தடவென்று தடவினார். பிஷூ, நர்ஸ் இருவரும் சேர்ந்து தோனிக்கு சுமார் 60க்கும் மேற்பட்ட பந்துகளை வீசி 30 ரன்களுக்குள்தான் கொடுத்தனர். ரஹானே 60 ரன்கள் எடுத்து பிஷூவை ஸ்வீப் செய்ய முயன்று எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேதார் ஜாதவ்., ஆஷ்லி நர்ஸ் பந்தில் பேட்-கால்காப்பு கேட்சில் வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா ஒரு பவுண்டரி ஒருசிக்சர் எடுத்து கொஞ்சம் சுதந்திரமாக ஆடி 20 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்தில் பவுல்டு ஆனார். லெக் ஸ்டம்பை சுத்தமாகக் காண்பித்தார். தோனி எதிரணியினர் தவறு செய்யக் காத்திருந்தார் காத்திருந்தார் ஆனால் தவறுகள் வரும் சூழல் இல்லை, ஆனாலும் கேப்டன் ஹோல்டர் திடீரென ராஸ்டன் சேசிடம் பந்தை கொடுக்க தோனி தனது 103-வது பந்தில் முதல் பவுண்டரியை அடித்தார், இந்த ஓவரில்தா 16 ரன்கள் வந்தது, பாண்டியா சிக்ஸ் அடித்தார். ரவீந்திர ஜடேஜா சிங்கிள் எடுப்பதற்குப் பதிலாக ஹோல்டரின் வேகம் குறைந்த பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 15 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

தோனிக்கு மிகவும் பொருத்தமான ‘பினிஷிங்’ சூழல். ஆனால் இவரோ சிங்கிள் எடுத்து குல்தீப் யாதவ்விடம் ஸ்ட்ரைக் கொடுத்தார், இதுதான் பலராலும் விதந்தோதப்படும் தோனியின் ‘அனுபவம்’ போலும்!! ஹோல்டர் வீசுகிறார் ஸ்ட்ரைக் குல்தீப் கையில்!! இரண்டு பந்துகளும் டாட் பால்கள். 49-வது ஓவர் வரை பொறுமை காத்த தோனி, வில்லியம்சின் அந்த ஓவர் கடைசி பந்தை ஏன் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்தார் என்பது புரியவில்லை, கடைசி ஓவரில் அவர் நின்றிருந்தால் ஒருவேளை ஹோல்டர் நெருக்கடிக்குள்ளாகியிருக்கலாம். தோனி 114 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரியுடன் 54 என்ற வேதனையான ஒரு இன்னிங்சில் வெளியேறினார். உமேஷ் யாதவ்வை பவுல்டு ஆக்கிய ஹோல்டர் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஒருகாலத்தில் அண்டர் டாக் இந்திய அணி மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடும் போது கபில்தேவ் தன் சொந்தத் திறமையினால் வெற்றி பெற செய்வார், அது போல் கேப்டன் ஹோல்டர் கபில் போலவே இன்று அண்டர் டாக் நிலையில் இருக்கும் மே.இ.தீவுகளை ஒரு அரிய வெற்றிக்கு இட்டுச் சென்றார். இந்திய அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட். ஆட்ட நாயகன் ஹோல்டர்.

முன்னதாக மே.இ.தீவுகள் பேட்டிங்கும் எதிர்பார்த்தது போல் சொதப்பல்தான். ஆனால் எவின் லூயிஸ், ஹோப் இணைந்து 57 ரன்களை தொடக்கத்தில் சேர்க்க ஷாய் ஹோப் 25 ரன்களை எடுக்க மே.இ.தீவுகள் 80/1 என்ற் இருந்தது. ஆனால் அதன் பிறகு 109 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. உமேஷ், ஹர்திக் தலாஅ 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மொகமது ஷமி 10 ஓவர்களில் 33 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்