ஆண்டிகுவாவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 251 ரன்களுக்கு மட்டுப்படுத்திய மே.இ.தீவுகள் பேட்டிங்கில் சொதப்பி 158 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
நல்ல பிட்சில், மே.இ.தீவுகளின் நல்லப் பந்து வீச்சுக்கு எதிராக ‘வலுவான’ ‘நட்சத்திர’ இந்திய பேட்டிங் வரிசை சொங்கியைப் போல் காட்சியளித்தது. மொத்தத்தில் இந்தத் தொடரே ஒரு அறுவை என்றால் நேற்றைய போட்டி ‘மகா அறுவை’ என்ற ரகத்தைச் சேர்ந்ததாகும், திடீரென ஒருநாள் அணி 70-ம் ஆண்டுகளுக்குச் சென்று விட்டதைப் போல் எண்ணம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் கோலி இருக்கிறார் அவர் ‘இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கூட்டிச்செல்லும்’ திறன் படைத்தவர் என்று ஆவலுடன் பார்த்தபோது அவரது ஆட்டம், கிரீஸில் அவர் இருந்த நிமிடங்கள் அவரையும் சேர்த்து நமக்கும் வேதனை தருவதாக அமைந்தது.
43-வது ஓவரில்தான் ஓவருக்கு 4 ரன்கள் என்ற விகிதத்தையே எட்டியது. வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் 251 ரன்களை மட்டுமே எடுத்தது 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்படும் ஆகக்குறைந்த 3-வது ரன் எண்ணிக்கையாகும்.
புதிய வீரர்களை அணியில், குறிப்பாக பேட்டிங்கில் சேர்த்து விடக்கூடாது என்ற கோலி மற்றும் அவரது விருப்பத்துக்கு இணங்கும் அணி நிர்வாகம் இருக்கும் வரையில் ரிஷப் பந்த் உள்ளிட்ட திறமைகள் காத்திருந்து காத்திருந்து வெறுப்படைய வேண்டியதுதான்.
அம்பாத்தி ராயுடு, ராபின் உத்தப்பா வரிசையில் மணீஷ் பாண்டேயும் தற்போது வந்துள்ளார், கோலி தனக்கு நிகரான, தனக்கு போட்டியான ஒரு வீரராகக் கருதுவது மணீஷ் பாண்டேயைத்தான் என்று சில வட்டாரங்கள் தெரிவிப்பதில் உண்மை இல்லாமலில்லை.
அணியில் புதிய வீரர்கள் வந்து பெயரையும் புகழையும் தட்டிச் சென்று விடக்கூடாது என்பதில் status quo பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பேட்டிங்கில். அதனால்தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பில்லை, ரிஷப் பந்த் இன்னமும் காத்திருக்க வேண்டி வருகிறது.
அஜிங்கிய ரஹானேயின் நேற்றைய பேட்டிங் மிகச் சுயநலமானது என்றால் மிகையாகாது. ரஹானே செட் ஆகிய நிலையிலும் ஒரு ரிஸ்கையும் எடுக்காமல், கடைசி 9 ஓவர்கள் இருக்கும் போது கூட தன் விக்கெட்டை, அணியில் தன் இடத்தைத் தக்க வைக்கும் சுயகாரிய நோக்கு அவரது பேட்டிங்கில் வெளிப்படை. இந்தக் காலத்தில் ஒரு தொடக்க வீரர் 112 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 72 ரன்களை மட்டுமே எடுத்து அஞ்சுமன் கெய்க்வாட் ரக இன்னிங்ஸை ஆடியத் திறமை குறைவினால் அல்ல, அணியில் தன் இடத்தைத் தக்க வைப்பதற்கும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பிற வீரர்களின் இடத்தை நிறுத்தி வைப்பதற்குமான அணுகுமுறையாகவே தெரிகிறது.
ஷிகர் தவண் அப்பர் கட்டில் டீப் தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார். விராட் கோலி செம தடவல் இன்னிங்ஸை ஆடிவிட்டு நெஞ்சுயரம் எழும்பிய ஹோல்டர் பந்தை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், இங்கிலாந்தில் கோலி ஆடியதை விட மோசமான இன்னிங்ஸ் ஆகும் இது, உலகம் நெடுகிலும் தோற்றுக் கொண்டிருக்கும், ஜிம்பாவேயை விட மோசமான நிலையில் இருக்கும் ஒரு அணிக்கு எதிராக கோலி ஆடியது மிக மோசமான இன்னிங்ஸ் என்றால் ரஹானே ஆடியது சுயநல நோக்குடன் கூடிய மகா அறுவை இன்னிங்ஸ்.
யுவராஜ் சிங்கும் தன் விக்கெட்டுக்குக்கு சுய முக்கியத்துவம் கொடுத்து ஆடியதில் 55 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து பிஷூவின் நேர் நேர் தேமா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். தோனி, அல்லது யுவராஜ் சிங்குக்குப் பதிலாக முன்னமேயே ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் களமிறங்கியிருக்க வேண்டும்.
தோனி கடைசியில் அடித்து வழக்கம் போல் ‘பினிஷர்’ அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டார், மற்றபடி அவரும் ரஹானேயும் ஆடிய இடை ஓவர்கள் அறுவையான பேட்டிங்கின் உச்ச கட்டம். கெய்க்வாடும், யஷ்பால் சர்மாவும் டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல் இருந்தது. இவர்களுக்கு அடிக்கத் தெரியாமல் இல்லை, ஒவ்வொருவரும் தங்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறிவிடக்கூடாது என்பதற்காக தக்கவைப்பு இன்னிங்ஸ்களை ஆடுகின்றனர்.
அதெப்படி கேதார் ஜாதவ் மட்டும் இறங்கியவுடன் பவுண்டரிகளை அடிக்க முடிகிறது? அவருக்கு விருப்புறுதி இருந்தது, 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்களை இவர் எடுக்க, தோனியும் இவரும் கடைசி 7.4 ஓவர்களில் 81 ரன்களை விளாசினர். தோனி 79 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 78 ரன்களை எடுத்தார், அதில் ஒரு சிக்ஸர் டிவில்லியர்ஸ் பாணியில் ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு திரும்பி ஸ்கொயர்லெக்கில் அடித்த சிக்ஸ்! ஆக அடிக்க முடியும், அடிக்கவும் தெரியும் ஆனால் எப்போது என்று அவர் முடிவெடுப்பார். அவர் இறங்கியவுடன் ஒரு பவுண்டரி பந்து வந்தால் கூட அது ஒன்று தடுத்தாடப் படும் அல்லது சிங்கிளுக்கு அனுப்பப்படும். ஆனால் கடைசியில் மாங்கு மாங்கென்று மட்டையைச் சுழற்ற வேண்டியது. இதனால் ஒவ்வொரு முறையும் சமீப காலங்களில் தோனி அரைசதம் அடிக்கும் போதெல்லாம் இந்திய அணி குறைந்தது 30-40 ரன்கள் குறைவாகவே அடிக்க முடிகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக 350-360, 370 பிட்சில் தோனி அரைசதம் அடித்தார் இந்தியா 325 ரன்களுக்குள் முடிந்தது, அந்தப் பிட்சில் அது 275 ஸ்கோர்தான். தோனி கடைசியில் மாங்கு மாங்கென்று ஆடும் ஷாட்களில் ஒன்றிரண்டை இடை ஓவர்களிலும் காட்டலாம் ஆட்டமிழந்தால் என்ன நஷ்டம்? பாண்டியா இருக்கிறார், ஜாதவ் இருக்கிறார்.
இதில் தோனிக்கு அவர் 28 ரன்களில் இருந்த போது லீடிங் எட்ஜில் பேக்வர்ட் பாயிண்டில் பிடிக்கக் கூடிய கேட்ச் விடப்பட்டது, மேலும் தோனி அடித்த ஷாட் ஒன்று சரியாக சிக்காமல் மிட் ஆனுக்கு மேலே ஆளில்லா இடத்தில் விழுந்தது. இந்திய பேட்டிங் இப்படியே அறுவையாகத் தொடர்ந்தால் வணிக ஸ்பான்சர்கள் கிடைக்கலாம் ஆனால் ரசிகர்களின் ஆதரவு என்கிற மிகப்பெரிய ஸ்பான்சர்ஷிப்பை இழக்க வேண்டி வரும்.
ரஹானே, யுவராஜ் சிங், ஆகியோரை உட்கார வைத்து விட்டு அல்லது தோனி, யுவராஜ் சிங்குக்குப் பதிலாக கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பளிக்க வேண்டும். பாண்டியாவை இன்னும் முன்னால் களமிறக்க வேண்டும். மே.இ.தீவுகளில் தேவேந்திர பிஷூ 10 ஓவர்களில் 38 ரன்களுக்கு 1 விக்கெட். ஆஷ்லி நர்ஸ் என்ற ஒரு பவுலர் இவரை அடிக்கத் திணறினோம், இவர் 10 ஓவர்களில் வெறும் 34 ரன்கள்தான் விட்டுக் கொடுத்தார். இந்திய அணி மொத்தம் கிட்டத்தட்ட 150 டாட் பால்களை அனுமதித்தது. ’நட்சத்திர’ ‘அதிரடி’ பேட்டிங் அணி என்று அழைக்கப்படும் ஒரு முன்னிலை அணி, உலகத் தரவரிசையில் கீழேயுள்ள ஒரு அணிக்கு எதிராக இந்த டாட்பால் விகிதம் மிக மோசமானது.
குல்தீப் யாதவ், அஸ்வின் அபாரம்!
இந்திய அணியின் 252 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணியில் தொடக்க வீரர் இ.லூயிஸ் உமேஷ் யாதவ்வின் நல்ல அளவில் விழுந்த பந்தை முன்னால் வந்து ஆடாமல் கிரீஸிற்குள் நின்ற படியே ஷஃபிள் செய்து ஆடி மட்டையை உரிய நேரத்தில் இறக்க முடியாமல் ஆஃப் ஸ்டம்பை இழந்தார்.
கைல் மற்றும் ஷாய் ஹோப் சகோதரர்கள் 45 ரன்களைச் சேர்த்தனர், பிறகு இருவருமே ஹர்திக் பாண்டியாவின் பவுன்சர்களில் நடையைக் கட்டினர். குல்தீப் யாதவ்வை கணிப்பதில் பிரச்சினை தொடர ரான் ஒன் பந்தில் ராஸ்டன் சேஸ் பவுல்டு ஆனார். புதிய பவுலிங் ஆக்சனுடன் வீசிய அஸ்வின் முதல் ஓவரிலேயே விக்கெட்டைக் கைப்பற்றினார். அதிகபட்ச ஸ்கோரை எட்டிய மொகமது 40 ரன்களில் குல்தீப் யாதவ்விடம் எல்.பி.ஆனார். போவெல் 30 ரன்களில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து குல்தீப் யாதவ்வின் விக்கெட்டாக நடையைக் கட்டினார். கடைசி விக்கெட்டை கேதார் ஜாதவ் வில்லியம்சை பவுல்டு ஆக்கியதன் மூலம் வீழ்த்திய போது இந்திய வெற்றியை நினைத்து பெருமிதம் அடைவதை விட மே.இ.தீவுகள் அணியின் பரிதாபகரமான நிலையை நினைத்து வருத்தமே ஏற்பட்டது.
அஸ்வின் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற உமேஷ், ஜாதவ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் தோனி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago