தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ராகுல் சவுத்ரியின் வேகத்தால் தோல்வியடைந்தோம் என்று தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
புரோ கபடி லீக் 5-வது சீசன் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 27-32 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.
தெலுகு அணியின் நட்சத்திர வீரரான ராகுல் சவுத்ரி, தனது மின்னல் வேக ரைடால் 10 புள்ளிகள் குவித்து தனது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் தமிழ் தலைவாஸ் அணியின் பலவீனங்கள், தவறுகளை சரியாக பயன்படுத்தினார்.
ஒவ்வொரு முறை அவர் ரைடு சென்றபோதும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்களை அவர் பதற்றம் கொள்ள வைத்தார். மேலும் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் ரைடில் சோபிக்காததும் பெரிய பின்னடைவாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழக அணி 10 புள்ளிகள் பின்தங்கியே இருந்தது. ஆனால் கடைசி நிமிடங்களில் பிரபஞ்சன் அடுத்தடுத்து புள்ளிகள் சேர்த்ததால் தோல்வியின் வித்தியாசம் சற்று குறைந்தது. முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அதிக அளவில் தடுப்பாட்டத்தை மேற்கொண்டது. ஆக்ரோஷமான ரைடுகள் அமையவில்லை. மேலும் எதிரணியின் ரைடர்களை கட்டுப்படுத்துவதிலும் வேகம் காணப்படவில்லை.
முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறியதாவது:
முதல் பாதி ஆட்டத்தில் ராகுல் சவுத்ரியை அவுட் ஆக்கும் முயற்சியில் 2 புள்ளிகளை இழந்தோம். இதனால் ஆல் அவுட் ஆகும் நிலை ஏற்பட்டது. இது நிகழாமல் இருந்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு உருவாகி இருக்கும். அஜய் தாக்குருக்கு இது மோசமான நாளாக அமையவில்லை. இந்த ஆட்டம் சிறந்த அனுபவமாகவே இருக்கும். இன்னும் அதிக ஆட்டங்கள் உள்ளன. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வோம்.
முதல் ஆட்டம் என்பதால் எங்கள் தடுப்பாட்ட வீரர்கள் சற்று பதற்றம் அடைந்துவிட்டனர். இது அவர்களுக்கு தொடக்கம்தான். விரைவில் அவர்கள் அதை சரிசெய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த ஆட்டங்களில் தடுப்பாட்டத்தில் முன்னேற்றம் காண்பதில் கவனம் செலுத்துவோம். ராகுல் சவுத்ரியின் அதிவேக ரைடால் எங்கள் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வரும் ஆட்டங்களில் அவரைப் போன்று எங்கள் அணி வீரர்களும் அதிவேக ரைடு செல்வதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.
மும்பையை பந்தாடியது புனே
நேற்று முன்தினம் நடந்த 2-வது போட்டியில் யூ மும்பா அணியும், புனேரி பால்டான்அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பத்து நிமிடத்தில் புனேரி பால்டன் 11 புள்ளிகள் பெற்றது. யூ மும்பா நாலு புள்ளிகள் பெற்றன.18வது நிமிடத்தில் யூ மும்பா கேப்டன் அனுப்குமாரை சூப்பர் டேக்கிள் செய்து புனேரி பால்டன் அணி புள்ளிகளைத் தொடர்ந்து அதிகப்படுத்திக்கொண்டன. முதல் பாதி ஆட்டத்தில் புனேரி பால்டன் 17 புள்ளிகளையும் யூ மும்பா 10 புள்ளிகளையும் பெற்றன.
இப்போட்டியில் புனேரி பால்டன் அணி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் எந்த தவறும் செய்யாமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். யூ மும்பா அணியின் அனுப்குமார் கடுமையாகப் போராடியும் புனேரி பால்டன் அணியை நெருங்க முடியவில்லை. இறுதியில் புனேரி பால்டன் அணி 33- 21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து புனே அணி பயிற்சியாளர் ரமேஷ் கூறும்போது, “மும்பை அணியினர் தற்காப்பு ஆட்டத்தில் பலவீனமாக இருந்தனர். இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டோம். அதே வேளையில் தற்காப்பு ஆட்டத்தில் நாங்கள் வலுவாக செயல்பட்டோம். எதிரணியினர் சமீர்பாபு, அனுப்குமார், கார்க், நித்தின் மதன் ஆகிய சிறந்த ஆல்ரவுண்டர்களும் களமிறங்கினர். அதேவேளையில் நாங்கள் தீபக் நிவாஸ் ஹுடா, சந்தீப் நார்வால் உள்ளிட்ட 4 ஆல்ரவுண்டர்களுடன் ஆட்டத்தை எதிர்கொண்டோம். கிரீஸ் சேரலாதன் ஆகியோர் கார்னர்களில் வலுவாக இருப்பதால் அனூப்குமாரால் அவர்களை தொட முடியாது. இது எங்களுக்கு பலம். மேலும், ஆல்ரவுண்டர் சந்தீப் நார்வாலின் பிடியில் இருந்து அனூப்குமார் தப்புவது கடினம்” இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டபாங் அணி 30 - 26 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை வெற்றிகொண்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago