என்னை நான் கண்டுபிடித்துக் கொள்ள விரும்பினேன்: கடந்து வந்த பாதை பற்றி மனம் திறக்கிறார் முரளி விஜய்

By எஸ்.தினகர்

குறும்புத்தனம் செய்யும் பையனாக தனது வாழ்க்கையை தொடங்கியது முதல் இன்றைய டெஸ்ட் தொடக்க வீரராக முன்னேறியது வரையிலான தனது பயணத்தை முரளி விஜய் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடினங்களிலும் கிரிக்கெட் மேல் உள்ள அந்த நேசம் மட்டுமே தன்னை நகர்த்திக் கொண்டு சென்றது என்று கூறிய விஜய், “மலையின் உச்சியைத் தொடுவது கடினம்தான், ஆனால் ஏறிய பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும் போது கடினப்பாடு பெரிதாகத் தெரியவில்லை” என்றார் விஜய்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் மிகவும் நேர்மையாகப் பேசிய முரளி விஜய்யின் பேட்டி வருமாறு:

வளரும் காலத்தில் நீங்கள் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள், அந்த நாட்களைப் பற்றி கூற முடியுமா?

ஒரு காட்டு நாயை திறந்தவெளியில் விட்டால் அது தன் சுதந்திரத்திற்காக தேடி அலையும். எனக்கு அப்படித்தான் இருந்தது. என்னை நானே கண்டுபிடித்துக் கொள்ள விரும்பினேன். நான் எதனால் உருவாகியுள்ளேன் என்பதை எனக்காக நான் கண்டுபிடித்து கொள்ள விரும்பினேன். பணம், தூக்கம், பாதுகாப்பு ஆகியவற்றைக் காட்டிலும் வாழ்க்கையில் பெரிய விஷயங்கள் உள்ளன .நான் எங்கு வேண்டுமானாலும் காலம் தள்ள முடியும்.

பள்ளியில் உங்கள் வாழ்க்கை கடினமாக இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...

12வது முடிக்கும் முன்பாக 7வது, 8வதில் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறேன். மோசமான நடத்தை...பெண்பிள்ளைகளை நீச்சல் குளத்தில் தள்ளி விடுவேன்... அப்போது அது ஒரு விளையாட்டாக தெரிந்தது. நான் 5-வது படிக்கும் போது இது முதல் தடவையாக நடந்தது.

பள்ளி வாழ்க்கையில் உங்களை பாதித்ததுதான் என்ன?

கல்வியின் அர்த்தம் என்னவென்று எனக்குப் புரியவில்லை, 9 வயதில் வரலாறு, புவியியலைக் கற்பதின் மதிப்பென்ன என்று எனக்குப் புரியவில்லை. என்னுடன் படித்தவர்கள் அனைவரும் 99%, 98% என்று மார்க் எடுப்பார்கள். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும். என் மனது எப்போதும் வகுப்பறை சுவர்களுக்கு அப்பால் உள்ள மைதானத்தில்தான் இருக்கும். 9 வயதில் முதன் முதலில் கிரிக்கெட் ஆடத் தொடங்கினேன்.

அக்கம்பக்கத்தில் கிரிக்கெட் ஆடியிருக்கிறீர்களா? அப்படியென்றால் அந்த அனுபவம் உங்களுக்கு எந்த வகையில் கைகொடுத்தது?

சென்னை கே.கே.நகரில் குடியிருந்தோம், அது அருமையான ஒரு காலக்கட்டம். மைதானங்கள் இருந்தன. போட்டித்தன்மை அங்கிருந்துதான் வந்தது. பெரிய ஆட்களுடன் ஆடும் சிறுவனாக நான் இருந்தேன். என்னுடன் அப்போது விளையாடியவர்கள் கல்லூரியில் படிப்பவர்கள். அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது, அவர்கள் மனநிலையைப் பற்றி அறிந்து கொண்டேன். அவர்கள் என்னை வரவேற்றனர், என்னை பாதுகாத்தனர், எனது பேட்டிங்கை மகிழ்ந்தனர்.

அந்த நாட்களில் உங்கள் நண்பர்கள்?

ஸ்ரீராம், பிரகாஷ் ஆகியோர் நினைவிருக்கிறார்கள். ஸ்ரீராம் நியூ காலேஜில் படித்துக் கொண்டிருந்தார், அவர் என்னை இரவு வேளைகளில் நடைபெறும் விளக்கொளி கிரிக்கெட் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார். கிரிக்கெட்டுடன் நான் தொடர்பில் இருக்கவே அனைத்தும் நடந்ததாகத் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் வீட்டை விட்டுச் செல்வது என்ற முடிவெடுத்தீர்கள். உங்கள் குடும்பம் இதனை எப்படி எதிர்கொண்டது?

நான் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று என் அம்மா அப்பாவிடம் தெரிவித்தேன். என்னை நான் கண்டுபிடித்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் ஒன்றும் எனக்கு சரியாக அமையவில்லை. என் தந்தை எனக்கு அடிப்படைக் கல்வி வேண்டும் என்று நினைத்தார். அவரது கவலையை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் என்னால் எண்ணத்தை மாற்றி கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறினேன்.

நாடோடி போல் பல இடங்களில் தூங்கியிருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

நிறைய இடங்கள். சென்னையே மாறிப்போயிருந்தது. எனக்கு மிகப்பெரிய நண்பர்கள் இருந்தனர், ஆனால் நான் தனியாகவே இருந்தேன். பூங்காக்களில் படுத்துறங்கினேன். என் நண்பர்கள் அனைவரும் என் குடும்பம் போன்றவர்கள்தான். அவர்கள் என்னை தங்கள் குழந்தையாகவே பார்த்தனர். மிகவும் கடினமான காலக்கட்டம் அது. மீண்டும் 12-வது தேர்வு எழுத ஒரு ஆண்டு இருந்தது. அனைவரும் கல்லூரிக்குச் சென்றனர், ஆனால் என்னால் முடியவில்லை, இது எனக்கு மிகவும் மனக்கஷ்டத்தைக் கொடுத்தது.

வேலையும் இல்லை, இளம் வயது, பணத்துக்கு என்ன செய்தீர்கள்?

ஸ்னூக்கர் பார்லர்களில் சென்று விளையாடி பணம் சம்பாதித்தேன். லூசர்ஸ் பே என்ற ஒரு விளையாட்டு உண்டு அதில் கொஞ்சம் பணம் சம்பாதித்தேன். அப்போது சென்னையில் அது மிகப்பெரிய ஒரு விஷயமாக நடந்து கொண்டிருந்தது. சென்னையில் இந்தப் பண்பாடு எனக்கு பிடித்திருந்தது. நிறைய போட்டிகளில் வென்றேன், நிறைய தோற்கவும் செய்தேன். இது நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது, அது என்னை மனத்தளவில் உறுதியாக்கியது.

அந்த நேரத்தில் உங்களுக்குள் கடும் கோபம் இருந்திருக்கும்....

ஆம், கொஞ்சம் கோபம் இருந்தது. பள்ளி என்ற ஒரு விஷயம். நான் அப்போது கோபக்காரனாக இருந்தேன். என்னை நானே சபித்துக் கொள்வேன். நான் ஆக்ரோஷமாகவும் மாறும் உணர்வுகளையும் கொண்டிருந்தேன். யாராவது என்னிடம் வந்து இப்படியிருக்க வேண்டும், அப்படியிருக்க வேண்டும் என்றால் நான் அதை ஒரு போதும் மதிக்க மாட்டேன். நான் என் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தேன், சிலருக்கு அது அராஜகமாகத் தெரியலாம்.

இன்னும் கூட நான் என் உணர்வுகளை முழுதும் வெளிப்படுத்த முடியவில்லை. நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் பொதுவாக நேசிப்பவன் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பது எனது இயல்புக்குக் கடினமானது. கடைசியில் எனக்குள் நான் பார்க்கத் தொடங்கி என் கோபங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்.

உங்கள் சகோதரி பற்றி...

நான் என் தங்கை வித்யாவுக்கு ஒரு அண்ணனாக இருந்ததேயில்லை. வித்யாவுக்கு திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கிறார். நான் ஒரு கெட்டுப்போன குழந்தை என்பதாகவே வித்யா என்னை புரிந்து வைத்திருந்தார். நானும் அப்படித்தான். 99.3% மதிப்பெண் எடுப்பாள். எனக்கு அப்படியே நேர் எதிர். இந்த விஷயத்தில் எனக்கு பொறாமை உண்டு. கூகுளில் பணியாற்றினாள், அவர் ஒரு ஜீனியஸ்.

உங்கள் பெற்றோர் பற்றியும் அவர்கள் உங்கள் மீது செலுத்திய செல்வாக்கு பற்றியும்...

எனக்கு ஆதரவாகவே இருந்தனர். நான் ரகசியமாக என் அப்பாவை பாராட்டுபவனாகவே இருந்திருக்கிறேன். அவர் பெயர் முரளி. அவர் என் ஹீரோ. தாடி மீசை மீது எனக்கு ஆர்வம் வந்ததே அவரால்தான். அவர் புல்லட் ஓட்டுவார், நான் அவரைப்போலவே பைக் ஓட்டத் தொடங்கினேன். எந்த ஒரு சூழ்நிலைக்கும் அவர் எதிர்வினையாற்ற மாட்டார். இப்போது என் தந்தையுடன் அதிக தொடர்பில் இருக்கிறேன். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது, எது நடந்தாலும் அது நடக்கட்டும் என்று இருப்பார், என்னால் அப்படி அவ்வளவு சுலபமாக விஷயங்களை அதன் போக்கில் விட்டு விட முடியாது.

என் அம்மா லஷ்மி, நேரடியானவர், கண்டிப்பானவர், அவர் தான் செய்யும் காரியங்களை மிகுந்த நேயத்துடன் செய்வார். குறிப்பாக சமையல். தலைமைத்துவ பண்புகள் அவரிடம் உண்டு. எனக்கு அம்மா மீது பிரியம் அதிகம். எதையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார், சிரித்து மகிழ்ந்து ஒரு ஜோவியலாக இருப்பவர், அவரைப்போன்றுதான் நானும்.

கிரிக்கெட்டில் முன்னேற்றம் எப்படி?

அண்டர் 16 மட்டத்தை கடக்க முடியவில்லை. முதல் ஆண்டில் அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்படவில்லை. நான் கெம்ப்ளாஸ்ட் அணியில் இணைந்தேன். அப்போது 20 வயது. விவேகானந்தா கல்லூரியில் 4 ஆண்டுகள் மிகவும் பிரமாதமாக அமைந்தது, அங்குதான் கிரிக்கெட்டை முன்னெப்போதையும் விட நன்றாக அனுபவித்து ஆடினேன். நீங்கள் இருதயபூர்வமாகா ஆடினால் அது உங்களை சரியான ஆட்களிடம் கொண்டு சேர்க்கும். கெம்ப்ளாஸ்ட் எனக்கு சரியான இடமாக அமைந்தது.

உங்கள் திறமையை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாடு ரஞ்சி அணிக்கு தாமதமாக அழைக்கப்பட்டீர்களோ?

தமிழ்நாடு அணியில் நுழைவது இமாலயப் பணியாக இருந்தது எனக்கு. நான் ஏன் அவர்களுக்குத் தேவைப்படவில்லை என்பதற்கான காரணங்களை என்னால் கண்டறிய முடியவில்லை. நான் என் தரப்பிலிருந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன், நன்றாக ஆடினேன். என் அணுகுமுறை பற்றி ஏகப்பட்ட கேள்விகள் இருந்தன. நான் அப்படித்தான் என்னை நடத்திக் கொண்டேன். திறமையும் ஆட்டமுமே தேவை.

தேர்வாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது தெரியவில்லை. நான் என்ன உடை அணிகிறேன் என்பதில்தான் கவனம் செலுத்தப்பட்டது. பரத் ரெட்டி சார்தான் அப்போது நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார், அதுதான் உதவியது.

2008-ல் முதன் முதலாக இந்திய அணிக்கு தேர்வான செய்தி வந்த தருணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

ரஞ்சி போட்டியில் ஆடிவிட்டு நாசிக்கிலிருந்து மும்பை சென்று கொண்டிருந்தேன். இந்திய அணியில் தேர்வு என்ற செய்தி வெளியான பிறகு என் மனக்கண்ணின் முன் பல காட்சிகள் தோன்றி மறைந்தன. நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால் எந்த அழைப்பையும் ஏற்கும் மன நிலையில் அப்போது நான் இல்லை. நான் தான் நானேதான் காரில் பறந்து கொண்டிருந்தேன்.

மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல் திரைப்படங்கள், இசை ஆர்வம்...

கமல், ரஜினி, ரஹ்மான், இளையராஜா என்று அனைவரையும் பிடிக்கும். ஜெயலலிதாவை எப்போதும் பிடிக்கும். என் தந்தை ஜெயலலிதாவின் மிகப்பெரிய விசிறி. நான் வளர்ந்த பிறகு ஒருமுறை அவர் காரில் செல்லும் போது பார்த்திருக்கிறேன். நேரில் சந்திக்க ஆசைப்பட்டேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக முடியாமல் போனது.

பெண்கள் மத்தியில் நீங்கள் பிரபலமானவர் இல்லையா?

எனக்கு பெண் தோழிகள் உண்டு. ஆனால் நான் பெண்களை துரத்தியதில்லை. அவர்கள் தான் என்னை துரத்தி வந்தனர். எனக்கு இன்னமும் பெண் தோழிகள் உண்டு, என் மனைவி எனது சிறந்த தோழி.

குடும்பம் உங்களுக்கான அமைதியைக் கொடுக்கிறதா?

ஆம். இரண்டு குழந்தைகள், ஒரு பையன், ஒரு பெண்... என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதை விரும்புகிறேன். அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷம் எனக்கு உத்வேகமூட்டுகிறது.

அந்த ஓல்ட் மாங்க்...

நான் டெல்லிக்கு ஒரு ஆட்டத்திற்காக சென்றிருந்தேன். கடும் பனி, பயங்கரக் குளிர். முதல் நாளில் தோற்றிருந்தோம். அங்கு இன்னும் 8 நாட்கள் இருந்தாக வேண்டும். என் நண்பர் ஒருவர், அவர் மூத்தவர், அறைக்குப் பின்னால் என்னவொ செய்து கொண்டிருந்தார். என்னவென்று நான் அவரைக் கேட்ட போது அவர் ‘இது ஓல்ட் மாங்க் ரம் இதை சாப்பிட்டால் குளிர் தெரியாது என்றார். நான் அதைக் குடித்தேன். இதைப் பார்த்த இன்னொரு நண்பர் எனக்கு ‘மாங்க்’ என்று பெயர் வைத்தார். அது நிலைத்து விட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்