நார்வே நாயகன்!

By ஏ.வி.பெருமாள்

சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை அடுத்தடுத்து இருமுறை வீழ்த்தி திக்குமுக்காட வைத்திருக்கிறார் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன்.

உலக செஸ்ஸில் ஒன்றல்ல… 5 முறை பட்டம் வென்றவரான ஆனந்தை, உலக செஸ் போட்டியில் விளையாடிய அனுபவமே இல்லாத கார்ல்சன் அதிரடியாக இரு முறை வீழ்த்தியிருக்கிறார். செஸ் போட்டியில் ஆனந்த் பெற்றுள்ள அனுபவத்தைவிட கார்ல்சனின் வயது குறைவுதான்.

குழந்தை முகம் மாறாத கார்ல்சனின் வயது 22. ஆனந்தின் வயதோ 43. 1991-ல் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டியின் காலிறுதியில் ஆனந்த் விளையாடியபோது, கார்ல்சன் 2 மாதக் குழந்தைதான். அவருக்கு 5 வயதில் செஸ் விளையாட்டைக் கற்றுக்கொடுத்த அவருடைய தந்தைகூட நினைத்திருக்கமாட்டார் தனது மகன் உலக செஸ்ஸின் உச்சத்திற்கு செல்வார் என்று.

ஆனால் இன்றைக்கு உலகத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்பியிருக்கிறார் கார்ல்சன். இந்த முறை கார்ல்சன்தான் சாம்பியன் பட்டம் வெல்வார் என முன்னாள் செஸ் ஜாம்பவான்கள் கூறியதை நிரூபிக்கும் வகையில் இப்போது அவர் வெற்றியை நெருங்கியுள்ளார். யார் இந்த கார்ல்சன்? நம்ம ஊரு செஸ் ராஜாவை சொந்த மண்னில் வீழ்த்தியிருக்கிறாரே. இவரால் எப்படி முடிந்தது என்று நாம் நினைக்கலாம். ஆனால் செஸ் உலகில் அவர் ஒரு மேதையாகப் பார்க்கப்படுகிறார்.

அபார நினைவாற்றல் கொண்டவரான கார்ல்சன் 1990-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி நார்வேயில் பிறந்தார். இவரின் பெற்றோரான ஹென்ரிக் கார்ல்சன், சிர்குன் கார்ல்சன் ஆகிய இருவருமே பொறியாளர்கள். 2 வயதிலேயே புதிர் விளையாட்டுகளில் புத்திசாலியாகத் திகழ்ந்த கார்ல்சனிடம், ஏதாவது ஒரு பொருளை பல்வேறு பாகங்களாகப் பிரித்து கொடுத்தால், அதை விரைவாக இணைத்து அந்த பொருளின் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடுவார். அப்போது அதேபோன்று சுமார் 50 புதிர்களை சரியாக செய்திருக்கிறார்.

அதைப் பார்த்த அவருடைய தந்தை 5 வயதில் செஸ் கற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் செஸ்ஸில் பெரிய அளவில் ஆர்வமில்லாமல் இருந்தார் கார்ல்சன். டென்மார்க்கை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பென்ட் லார்சனின் “பைன்ட் தி பிளான்” என்ற செஸ் புத்தகத்தைப் படித்தபிறகுதான் செஸ்ஸின் மீது காதல் கொண்டார் கார்ல்சன். அதன்பிறகு தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் தனியாக விளையாடி தனது செஸ் அறிவை வளர்த்துக் கொண்ட கார்ல்சன், பின்னர் தீவிர செஸ் வெறியர் ஆனார். முதலில் தனது சகோதரியையும், பின்னர் தனது தந்தையும் செஸ்ஸில் தோற்கடிப்பதுதான் கார்ல்சனின் இலக்காக இருந்தது. அதில் வெற்றி கண்ட கார்ல்சனின் செஸ் பயணம் இப்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் வரை வந்திருக்கிறது.

1999-ல் நடைபெற்ற நார்வே செஸ் சாம்பியன்ஷிப்தான் கார்ல்சனின் முதல் போட்டி.. அப்போது அவருக்கு வயது 8. 11 சுற்றுகளைக் கொண்ட அந்தப் போட்டியில் கார்ல்சன் 6.5 புள்ளிகளைப் பெற்றார். பின்னர் நார்வேயின் முன்னணி செஸ் வீரரும் கிராண்ட் மாஸ்டருமான சைமன் அடஸ்டீன் நடத்திய நார்வேயின் எலைட் ஸ்போர்ட் செஸ் கல்லூரியில் பயிற்சி பெற்றார் கார்ல்சன்.

2000-ல் நார்வேயின் முன்னாள் ஜூனியர் சாம்பியனும், கிராண்ட் மாஸ்டருமான ரிங்டால் ஹன்சனை கார்ல்சனுக்கு அறிமுகப்படுத்தினார் அடஸ்டீன். அதுதான் கார்ல்சனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ஹன்சனுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட கார்ல்சன் ஓர் ஆண்டிற்குள்ளேயே 1000 ரேட்டிங் புள்ளிகளுக்கு மேல் பெற்றார்.

2000 முதல் 2002 வரை ஏறத்தாழ 300 ரேட்டிங் போட்டிகளிலும், ஏராளமான பிளிட்ஸ் செஸ் போட்டிகளிலும், வேறு சில போட்டிகளிலும் பங்கேற்ற கார்ல்சன், 2003-ல் இண்டர்நேஷனல் மாஸ்டருக்கான 3 நார்ம்ஸ்களையும் பெற்று அதே ஆண்டில் இண்டர்நேஷனல் மாஸ்டராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அதன்பிறகு தொடர் வெற்றிகளைக் குவித்த கார்ல்சன், 2004-ல் முன்னாள் உலக சாம்பியனான அனாடோலி கார்போவை தோற்கடித்ததோடு, அதே ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு வயது 13. இதன்மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார். அதுதான் உலக செஸ் ஆர்வலர்களின் பார்வையில் கார்ல்சன் உதயமான தருணம். கார்ல்சனின் சாதுர்யத்தையும், நினைவாற்றலையும் பார்த்து வியந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அவருக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. 2004-ல் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமை கார்ல்சனின் வசமானது. 2004- உலக செஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனிடம் தோல்வி கண்ட கார்ல்சன், பின்னர் உலக செஸ்ஸில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். 2009-ல் நடைபெற்ற நான்ஜிங் பியர்ல் ஸ்பிரிங் போட்டியின்போது 2800 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எட்டினார். இதன்மூலம் செஸ் வரலாற்றில் 2800 ரேட்டிங் புள்ளிகளைத் தொட்ட 5-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதே ஆண்டில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன் ஆன கார்ல்சன், 2010- ஜனவரியில் உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இளம் வயதில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர் என்ற சாதனையை ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கிடம் இருந்து பறித்தார். கடந்த ஜனவரியில் 2861 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எட்டியதன் மூலம் செஸ் வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளை எட்டிய வீரர் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரரானார். இதன்மூலம் அதிக இ.எல்.ஓ புள்ளிகளை (2851) வைத்திருந்த முன்னாள் உலக சாம்பியனான ரஷிய வீரர் கேரி காஸ்பரோவின் 13 ஆண்டுகால சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தார் கார்ல்சன்.

2010 முதல் தற்போது வரை தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்ட கார்ல்சன், இப்போது 2872 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை வைத்துள்ளார்.

பல்வேறு ஃபிடே ரேட்டிங் போட்டிகள் அடிப்படையில் உலக செஸ் போட்டிக்கான கேண்டிடேட் போட்டிக்கு தேர்வான கார்ல்சன், அதில் எதிராளிகளை வீழ்த்தி உலக செஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆனந்தை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ்ஸில் ஆனந்துக்கு அடுத்தடுத்து இரு தோல்விகளை அளித்து இப்போது சாம்பியன் பட்டத்தை நெருங்கியிருக்கும் கார்ல்சன், இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு செஸ் உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்