ரசிகர்களைக் கவர்ந்த சென்னை ஸ்டார்ஸ்!

By ஏ.வி.பெருமாள்

சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியின் வருகையால் இந்திய ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது கால்பந்து. அதுவும் குறிப்பாக சென்னையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஎஸ்எல் போட்டியைக் காண நேரு மைதானத்தை நோக்கி படையெடுத்திருக்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற கடந்த 3 போட்டிகளுமே ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தன.

இந்தியன்

தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னையில் நடைபெற்ற சென்னையின் எப்.சி.-கேரளா அணிகளுக்கு இடையிலான போட்டி, சென்னையைச் சேர்ந்த கால்பந்து காதலர்களுக்கு இரட்டை தீபாவளியைக் கொண்டாடியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. ஒருவாரம் கனமழையில் நனைந்த ரசிகர்கள், சென்னையில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தின்போது கோல் மழையில் நனைந்தார்கள். சென்னை அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை பந்தாடியது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அட்லெடிகோ டி கொல்கத்தாவுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் இலானோ கோலடிக்க டிராவில் முடிந்தது த்ரில் ஆட்டம். அப்போது இருக்கையின் நுனிக்கே வந்து போட்டியைப் பார்த்த ரசிகர்கள், தோல்வியிலிருந்து தப்பிய மகிழ்ச்சியில் சென்னை வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி விடை பெற்றார்கள்.

போட்டிக்கு போட்டி சென்னை அணியின் ஆட்டம் விறுவிறுப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த விறுவிறுப்புக்கு சென்னை அணியின் நடுகள வீரர் இலானோ புளூமர், பின்கள வீரர் பெர்னாட் மென்டி, முன்கள வீரர் ஜான் ஸ்டீவன் மென்டோஸா ஆகியோரின் ஆட்டம் ஒருபுறம் பலம் சேர்த்தால், பயிற்சியாளர் மற்றும் வீரரான மார்கோ மெட்டாரஸியின் மிக நுட்பமான புத்திக்கூர்மை மறுபுறம் வலு சேர்க்கிறது. 3 போட்டிகளிலேயே இவர்களுக்கென்று சென்னையில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகி யிருக்கிறது.

புத்திசாலி மெட்டாரஸி

சென்னையில் நடைபெறும் சென்னை லீக் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளையும் தவறாமல் நேரில் வந்து பார்ப்பவர் நாசர். சக ரசிகர்களால் கால்பந்து காதலன் என்றழைக்கப்படும் அவர் தனக்குப் பிடித்த வீரர்கள் பற்றி கூறியதாவது:

கடைசி நேரத்தில் வீரர்களை தேர்வு செய்து பயிற்சியளித்து அவர் களை பார்முக்கு கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் சென்னை அணி அதில் வெற்றி கண்டிருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்ததைவிட மிக அற்புதமாக ஆடி வருகிறது சென்னை. கேரளா, கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் அணிகள் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சென்னை அணி கேரளாவை வீழ்த்தியதோடு, கொல்கத்தாவுக்கு எதிராக டிரா செய்திருக்கிறது.

சென்னையின் வெற்றியில் முக்கிய அங்கம் வகிப்பது மெட்டாரஸி, இலானோ, மென்டி, மென்டோஸா ஆகிய நால்வர் தான். மெட்டாரஸியை எடுத்துக் கொண்டால் அவர் எல்லா போட்டி களிலும் களமிறங்குவதில்லை. எதிரணிகளின் பலம், பலவீனத்தை அறிந்து தேவையான போட்டிகளில் மட்டுமே களமிறங்குகிறார். உதாரணமாக மும்பை அணியில் அனெல்கா இறங்கியதாலும், கொல்கத்தா அணியில் லூயிஸ் கிரேஸியா விளையாடியதாலும் மெட்டாரஸி ஆடினார்.

இளமை இலானோ

பிரேசில் வீரர்களுக்கே உரிய ரசிகர்களை மகிழ்விக்கும் தரமான ஆட்டத்தை இலானோவிடம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி மார்க்கீ வீரர்களில் (மார்க்கீ வீரர் என்பவர் கண்டங்கள் அளவிலான சாம்பியன்ஷிப்பில் விளையாடிய வெளிநாட்டவர்) இலானோதான் இளமையான வீரர். நடுகள வீரரான இவர் அணியின் மையமாக செயல் படுகிறார். பின்கள வீரர்களுக்கும், முன்கள வீரர்களுக்கும் இடையே பந்துகளை வாங்கி அற்புதமாக பரிமாற்றம் செய்கிறார்.

இதேபோல் முன்கள வீரர்களுக்கு ஏராளமான கோல் வாய்ப்புகளை உருவாக்குகிறார். பெனால்டி கிக், ப்ரீ ஹிக், கார்னர் வாய்ப்புகளில் மிகத்துல்லியமாக செயல்பட்டு அற்புதமாக கோலடிக்கிறார். எனக்கு தெரிந்து அவரிடம் இருக்கும் ஒரே பிரச்சினை

‘மூவிங் பந்துகளில்’ கோலடிக்க தடுமாறுவதுதான். மற்ற படி அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அட்லெடிகோவுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும்கூட பதற்றமின்றி கோலடித்தார் இலானோ.

பின்கள பீமர்

சென்னை அணியின் வலுவான பின்களத்துக்கு பலம் சேர்ப்பதில் மென்டியின் பங்கு அளப்பரியது. அவர் பின்கள வீரராக மட்டுமின்றி, தேவைப்படுகிற நேரங்களில் முன்னேறி சென்று முன்கள வீரர்களுக்கு நிகராகவும் ஆடுகிறார். கேரளாவுக்கு எதிராக மென்டி அடித்த பை சைக்கிள் கோலை வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. அப்போது கேரளா அணியின் கோல் கீப்பராக களத்தில் நின்ற முன்னாள் இங்கிலாந்து கோல் கீப்பரான டேவிட் பெஞ்சமினே வியந்து போனார். சென்னை அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார் மென்டி.

துருதுரு மென்டோஸா

மென்டோஸா எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பாக துருதுரு வென செயல்படுவது எல்லோரை யும் கவர்ந்திழுக்கிறது. ஒரு ஸ்டிரைக் கரின் உச்சபட்ச இலக்கு கோலடிப் பதுதான். அதை மிகத்துல்லியமாக செய்து முடிக்கிறார் மென்டோஸா. எதிரணியினருக்கு கடும் சவாலாகத் திகழ்கிறார். அட்லெடிகோவுக்கு எதிராக கிடைத்த பெனால்டி வாய்ப்பு கூட அவரால்தான் கிடைத்தது.

வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சென்னை அணி ஒரு குடும்பம் போன்று இருக்கிறது. ஆனால் மற்ற அணிகளில் அதைப் பார்க்க முடிவதில்லை. வரும் 8-ம் தேதிக்குப் பிறகு எதிரணிகளை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி சந்திக்கவுள்ளது. அந்தப் போட்டிகளிலும் இதேபோன்று செயல்பட்டால் சென்னை சாம்பிய னாக வாய்ப்பிருக்கிறது என்றார்.

மதராஸியான மெட்டாரஸி

கடந்த 20 வருடங்களாக நேரு மைதானத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளை பார்த்து வரும் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த தினேஷ் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை இலானோவுக்குதான் முதலிடம். அடுத்த 3 இடங்களை முறையே மென்டி, மென்டோஸா, மெட்டாரஸிக்கு கொடுக்கலாம். மெட்டாரஸியை இப்போது நாங்கள் மதராஸியாக (சென்னைக்காரர்) பார்க்கும் அளவுக்கு எங்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

சென்னை வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்து நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. கடந்த 20 வருடங்களில் இப்படியொரு கூட்டத்தை நேரு மைதானத்தில் பார்த்ததில்லை. ரசிகர்கள் படை யெடுப்பதை பார்க்கும்போது சென்னையில் இப்போதும் கால்பந்துக்கு மவுசு இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. எனது நண்பர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால் இப்போது அவர்கள்கூட ஐஎஸ்எல் போட்டிக்கு வர ஆரம்பித்துவி ட்டார்கள்” என்றார்.

கால்பந்தின் தரம் உயரும்

சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி மாணவரும், தீவிர கால்பந்து ரசிகருமான விமல் கூறுகையில், “கால்பந்து தொடர்பான இலானோவின் புத்திக்கூர்மை அபாரமானது. அதுதான் சென்னை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது. அதே நேரத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் ஆடிய அளவுக்கு தரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அதற்கு வயது ஒரு காரணமாக இருக்கலாம்.

மென்டோஸா, கொலம்பி யாவின் முன்னணி ஸ்டிரைக்கரான ரோட்ரிகஸுடன் ஆடிய அனுபவம் பெற்றவர். அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதில்லை. மெட்டாரஸியின் அனுபவ ஆட்டம் எல்லோரையும் கவர்ந்திருக் கிறது. அதேநேரத்தில் இடை வேளையின்போது தோனி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றோர் மைதானத்தில் வலம் வருவதை என்னைப் போன்ற கால்பந்து ரசிகர்கள் விரும்புவ தில்லை. ஆனாலும் இங்கே கால்பந்துக்கு புத்துயிர் கொடுக்க அவர்களின் வருகை தேவையான ஒன்றுதான். ஐஎஸ்எல் போட்டியால் இந்திய கால்பந்தின் தரம் உயரும் என நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்