சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாவ்ரிங்கா தனது காலிறுதியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் அயாஸ் பெடினியைத் தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த சென்னை ஓபன் காலிறுதியில் பெடினியிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வாவ்ரிங்கா.
19-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்காவும், 95-வது இடத்தில் உள்ள அயாஸ் பெடினியும் மோதினர்.
ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய வாவ்ரிங்கா, முதல் செட்டின் முதல் கேமிலேயே பெடினியின் சர்வீஸை முறியடித்து முன்னிலை பெற்றார்.
2-வது கேமில் தனது சர்வீஸை விட்டுபிடித்தார் வாவ்ரிங்கா. இருமுறை டியூஸ் வரை சென்ற அந்த கேமில் தனது சர்வீஸை மீட்ட வாவ்ரிங்கா, 3-வது கேமில் மீண்டும் பெடினியின் சர்வீஸை தகர்த்து அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். ஒரு கையால் பேக் ஹேண்ட் ஷாட் அடிப்பதில் வல்லவரான வாவ்ரிங்கா, மிக அற்புதமான பேக் ஹேண்ட் ஷாட்களை விளாசி பெடினியைத் திணறடித்தார். இதன்பிறகு 5-வது கேமிலும் பெடினியின் சர்வீஸை முறியடித்த வாவ்ரிங்கா 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
பெடினி தொடர்ச்சியாக தனது 3 சர்வீஸ்களையும் இழந்ததால் 6 கேம்களிலேயே முதல் செட் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 6-வது கேமில் வாவ்ரிங்காவின் சர்வீஸை முறியடித்த பெடினி, அடுத்த கேமில் முதல்முறையாக தனது சர்வீஸை மீட்டார். 8-வது கேமில் எளிதாக தனது சர்வீஸை தன்வசமாக்கிய வாவ்ரிங்கா, 35 நிமிடங்களில் முதல் செட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த செட் 6-2 என்ற கணக்கில் வாவ்ரிங்கா வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் முதல் செட்டைப் போலவே முதல் கேமிலேயே பெடினியின் சர்வீஸை தகர்த்தார் வாவ்ரிங்கா. ஆனால் அடுத்த கேமிலேயே வாவ்ரிங்காவுக்கு பதிலடி கொடுத்தார் பெடினி. இந்த கேமில் வாவ்ரிங்கா ஆக்ரோஷமாக ஆடியபோதும் மூன்று டபுள் பால்ட் தவறுகளை செய்ததால் தனது சர்வீஸை பெடினியிடம் கோட்டைவிட்டார். பின்னர் 3-வது கேமில் பெடினியின் சர்வீஸை 2-வது முறையாக முறியடித்த வாவ்ரிங்கா, அடுத்த கேமில் தனது சர்வீஸை இழக்காமல் இருக்க கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. எனினும் கடைசியில் அந்த சர்வீஸை மீட்டு பெடினியின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதன்பிறகு பெடினி கடுமையாகப் போராடினாலும், வாவ்ரிங்காவின் அதிரடி ஷாட்களுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5 மற்றும் 7-வது கேம்களில் பெடினியின் சர்வீஸை முறியடித்து 6-1 என்ற கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றிய வாவ்ரிங்கா, 1 மணி நேரம் 5 நிமிடங்களில் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
பேக் ஹேண்ட்
இந்தப் போட்டியில் வாவ்ரிங்கா 4 ஏஸ் சர்வீஸ்களையும், பெடினி 3 ஏஸ் சர்வீஸ்களையும் பறக்கவிட்டனர். இருவரும் தலா 4 டபுள் பால்ட் தவறுகளை செய்தனர். வாவ்ரிங்கா 7 பிரேக் பாயிண்ட்களில் 5-ஐ மீட்டார். அதேநேரத்தில் பெடினி 11 பிரேக் பாயிண்ட்களில் 4-ஐ மட்டுமே மீட்டார். வாவ்ரிங்காவின் பிரம்மாதமான பேக் ஹேண்ட் ஷாட்கள் சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
2011 சென்னை ஓபனில் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சென்னை ஓபனில் காலிறுதியோடு வெளியேறிய வாவ்ரிங்கா, இந்த முறை மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.
பெடினியை வீழ்த்தியதன் மூலம் ஏடிபி போட்டிகளில் 300 வெற்றிகளைப் பெற்ற 4-வது ஸ்விட்சர்லாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் வாவ்ரிங்கா. ரோஜர் ஃபெடரர் (923 வெற்றி), மார்க் ரோஸட் (433), ஜேக்கப் ஹேசக் (432) ஆகியோர் 300 வெற்றிகளுக்கு மேல் குவித்துள்ள மற்ற ஸ்விட்சர்லாந்து வீரர்கள் ஆவர். 2014-ம் ஆண்டில் 300-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் வீரரான வாவ்ரிங்கா, சென்னை ஓபனில் 13-வது வெற்றியை ருசித்துள்ளார்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
வாவ்ரிங்கா 300-வது வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அதை கொண்டாடும் வகையில் கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 300-வது வெற்றியை குறிக்கும் வகையில் 300 என்ற எண் பொறிக்கப்பட்ட அந்த கேக்கை வெட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வாவ்ரிங்கா.
சாதனைக்காக ஆடவில்லை
கேக் வெட்டியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய வாவ்ரிங்கா, “300-வது வெற்றியைப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி. எனினும் அந்த சாதனையை மனதில் கொண்டு ஆடவில்லை. காலிறுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே விளையாடினேன். ஃபோர்ஹேண்ட் மற்றும் ஃபேக் ஹேண்ட் ஷாட்களில் புதுமை படைப்பதற்காக இப்போதும் பயிற்சி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார்.
இந்த ஆட்டத்தில் 15 கேம்களில் 9 கேம்களில் சர்வீஸ் முறியடிக்கப்பட்டதே என்று கேட்டபோது, “6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி கண்டிருக்கிறேன். அதனால் இதை மோசமான ஆட்டம் என்று சொல்ல முடியாது. எல்லா கேம்களிலும் எதிராளியை வீழ்த்த வேண்டும் என்ற நம்பிக்கையில் ஆட முடியாது. பெடினியும் சிறப்பான ஷாட்களை ஆடினார்.
கடந்த சென்னை ஓபனில் நம்பிக்கையின்றி இருந்தேன். ஆனால் இந்த முறை மிகுந்த நம்பிக்கையோடு ஆடி வெற்றி கண்டிருக்கிறேன்” என்றார்.
இந்திய ஜோடி அவுட்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் மரின் டிராகன்ஜா-மேட் பாவ்சிச் ஜோடியிடம் தோல்வி கண்டது. இந்திய ஜோடியில் ராம்குமார் விளையாடிய அளவுக்கு பாலாஜியின் ஆட்டம் எடுபடாதது பின்னடைவாக அமைந்தது.
ரோஜர் வேஸலின் வெற்றி
மற்றொரு ஒர்றையர் பிரிவு காலிறுதியில் பிரான்ஸின் ரோஜர் வேஸலின் 7-5, 6-7 (6), 6-0 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் டூடி செலாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago