ஐ.பி.எல். விவகாரம்: முத்கல் கமிட்டி இறுதி அறிக்கை விசாரணை ஒத்திவைப்பு

By ஐஏஎன்எஸ்

முத்கல் கமிட்டி இறுதி அறிக்கை தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த (பிசிசிஐ) என். சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐ.பி.எல். அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மொத்தம் 13 பேர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா, கங்குலி ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் போன்றவை நடைபெற்றது தொடர்பான குற்றச்சாட்டை விசாரித்த

முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 3-ம் தேதி தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் தாகூர், இப்ராஹிம் கலிபுல்லா அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முத்கல் அறிக்கையை முழுவதுமாகப் படிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், வழக்கு விசாரணை 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகிற 20-ந்தேதி நடைபெறும் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி தேர்தலில் என். ஸ்ரீனிவாசன் போட்டியிட உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து அவர் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE