ஆனந்த்-கார்ல்சன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப்: ரஷ்யாவின் சூச்சி நகரில் இன்று தொடக்கம்

நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்-கடந்த முறை இறுதிபோட்டியில் விளையாடியவரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் போட்டி ரஷ்யாவின் சூச்சி நகரில் இன்று தொடங்குகிறது.

முதல் நாளான இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. நாளை முதல் போட்டி ஆரம்பமாகிறது. 28-ம் தேதி வரை போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்டதாகும். இதில் 6.5 புள்ளிகளை எட்டும் வீரர் சாம்பியனாவார். 12 சுற்றுகளுக்குப் பிறகு இரு வீரர்களும் சமநிலையில் இருந்தால் டை பிரேக்கர் சுற்று நடைபெறும்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மிக எளிதாக கார்ல்சனிடம் தோற்ற ஆனந்த், அப்போது ஒரு சுற்றில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் (உலக சாம்பியன்ஷிப்பிற்கான தகுதிச்சுற்று) போட்டியில் அபாரமாக ஆடிய ஆனந்த், உலக சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதி பெற்றார்.

இந்த முறை அவர் நல்ல பார்மில் இருப்பதால் கார்ல்சனுக்கு நெருக்கடி ொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கார்ல்சனை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

விளாடிமிர் கிராம்னிக்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனந்த் மிகச்சிறப்பாக தயாராகியிருப்பார். அதனால் அவர் நெருக்கடியின்றி விளையாடுவார். எனவே போட்டி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று முன்னாள் உலக சாம்பியனான ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாழ்த்து

விஸ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க ஆனந்துக்கு எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE