இந்திய-நியூஸிலாந்து அணி களுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் நியூஸிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
ஒரு கட்டத்தில் இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கித்தவித்த நியூஸிலாந்து அணி, கேப்டன் மெக்கல்லம், வாட்லிங், ஜேம்ஸ் நீஷாம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தோல்வியில் இருந்து மீண்டு போட்டியை டிராவில் முடித்துள்ளது.
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 192 ரன்களும், இந்தியா 438 ரன்களும் குவித்தன. பெரும் பின்னடைவுக்கு மத்தியில் (246 ரன்கள் பின்தங்கிய நிலையில்) 2-வது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் மெக்கல்லமும் வாட்லிங்கும் இணைந்து விஸ்வரூப மெடுத்து நியூஸியை மீட்டனர். வாட்லிங் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 189 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 571 ரன்கள் குவித்திருந்தது.
நீஷாம் சதம்
5-வது நாளான செவ்வாய்க் கிழமை தொடர்ந்து ஆடிய நியூஸி லாந்து அணியில் மெக்கல்லமும், நீஷாமும் சிறப்பாக ஆட அந்த அணி 197 ஓவர்களில் 600 ரன்களைக் கடந்தது. இஷாந்த் சர்மா வீசிய இன்னிங்ஸின் 199-வது ஓவரில் ஒரு பவுண்டரி, அடுத்ததாக இரண்டு ரன்களை எடுத்து அறிமுகப் போட்டியில் சதமடித்தார் நீஷாம். அவர் 123 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார்.
ஜாகீர்கான் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து முச்சதத்தை நிறைவு செய்தார் மெக்கல்லம். அப்போது மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மெக்கல்லத்துக்கு பாராட்டு களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இதன்பிறகு மெக்கல்லம் நீடிக்கவில்லை. 3-வது பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். 559 பந்துகளைச் சந்தித்த அவர் 4 சிக்ஸர், 32 பவுண்டரிகளுடன் 302 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மெக்கல்லம்-நீஷாம் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.
680 ரன்களில் டிக்ளேர்
இதையடுத்து வந்த டிம் சௌதி 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். நியூஸிலாந்து 210 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 680 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது நீஷாம் 154 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் 137 ரன்களும், நீல் வாக்னர் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் ஜாகீர்கான் 5 விக்கெட்டுகளையும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
435 ரன்கள் இலக்கு
இதையடுத்து 435 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவண் 2 ரன்களிலும், முரளி விஜய் 7 ரன்களிலும், பின்னர் வந்த புஜாரா 17 ரன்களிலும் வெளியேற, 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
எனினும் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி-ரோஹித் சர்மா ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. ஒருபுறம் ரோஹித் சர்மா நிதானமாக ஆட, மறுமுனையில் வேகமாக விளையாடிய கோலி 129 பந்துகளில் சதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 6-வது சதமாகும்.
போட்டி டிரா
இந்தியா 52 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள இரு அணிகளின் கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது கோலி 135 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 105 ரன்களும், ரோஹித் சர்மா 97 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரென்டன் மெக்கல்லம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே முதல் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த நியூஸிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்த இந்தியா, இப்போது டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இழந்து வெறுங்கையோடு நாடு திரும்புகிறது.
ஜாகீர்கானின் முதல் 50
இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர்கான் 11-வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நியூஸி.க்கு எதிராக 4-வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த இன்னிங்ஸில் அவர் மொத்தம் 51 ஓவர்கள் வீசினார். இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாகீர்கான் முதல்முறையாக ஓர் இன்னிங்ஸில் 50 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஓர் இன்னிங்ஸில் 50 ஓவர்களுக்கு மேல் பந்துவீசுவது 11-வது முறையாகும். இதற்கு முன்னர் 1991-92-ல் அடிலெய்டில் நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 51 ஓவர்கள் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முச்சதம் கண்ட முதல் நியூஸிலாந்து வீரர்
டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த முதல் நியூஸிலாந்து வீரர், ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற சாதனைகளை நியூஸி. கேப்டன் மெக்கல்லம் படைத்துள்ளார். முன்னதாக இதே மைதானத்தில் 1991-ல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் 299 ரன்கள் குவித்ததே நியூஸி. வீரர் ஒருவர் ஓர் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. இதுதவிர முச்சதம் அடித்த 8-வது கேப்டன் என்ற பெருமையும் மெக்கல்லம் வசமாகியிருக்கிறது.
டெஸ்ட் வரலாற்றில் 2-வது இன்னிங்ஸில் முச்சதமடித்த 2-வது வீரர் மெக்கல்லம் ஆவார். பாகிஸ்தானின் ஹனிப் முகமது முதல் வீரர். ஹனிப் 1957-58-ல் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 மணி நேரம், 10 நிமிடங்கள் களத்தில் நின்று பாகிஸ்தானை தோல்வியில் இருந்து மீட்டார். ஓர் இன்னிங்ஸில் அதிகநேரம் களத்தில் நின்றவர்கள் வரிசையிலும் அவரே முதலிடத்தில் உள்ளார்.
மெக்கல்லம் 12 மணி நேரம் 55 நிமிடங்கள் களத்தில் நின்று தனது அணியை மீட்டுள்ளார். இதன்மூலம் அதிகநேரம் களத்தில் நின்றவர்கள் வரிசையில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த 24-வது வீரர் என்ற பெருமை மெக்கல்லம் வசமாகியுள்ளது.
2-வது இடத்தைத் தக்கவைத்தது இந்தியா.
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தாலும், 2-வது டெஸ்ட் போட்டியை டிராவில் முடித்ததன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தைத் தக்கவைத்தது இந்தியா.
அதேநேரத்தில் இந்தத் தொடருக்கு முன்னதாக 117 ரேட்டிங் புள்ளிகளை வைத்திருந்த இந்தியா இப்போது அதில் 5 புள்ளிகளை இழந்து 112 புள்ளிகளை மட்டுமே வைத்துள்ளது. தற்போதைய நிலையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவைவிட ஒரு ரேட்டிங் புள்ளி மட்டுமே அதிகமாக வைத்துள்ளது இந்தியா.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி இந்தத் தொடரை டிரா செய்தாலே 2-வது இடத்தைப் பிடித்துவிடும். ஒருவேளை அடுத்த இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெறும் பட்சத்தில் தரவரிசையில் எவ்வித மாற்றமும் இருக்காது.
சாதனைத் துளிகள்
1990-91-ல் இதே வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து 671 ரன்கள் குவித்ததே 2-வது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிக ரன் சாதனையாக இருந்தது. இந்தியாவுக்கு எதிராக 680 ரன்கள் குவித்ததன் மூலம் தங்களுடையை பழைய சாதனையை முறியடித்துள்ளது நியூஸிலாந்து.
அறிமுகப் போட்டியில் சதமடித்த 10வது நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜிம்மி நீஷாம். அறிமுகப் போட்டியில் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி சதமடித்த 3-வது நியூஸி. வீரர் நீஷாம் ஆவார்.
இந்தத் தொடரில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களால் 5 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 6-வது சதத்தைப் பதிவு செய்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் முதல்முறையாக சதமடித்துள்ளார். இதுவரை 24 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,721 ரன்கள் குவித்துள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் கடைசியாக நடைபெற்ற 14 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட இந்தியா வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமான ஸ்கோர்
முதல் இன்னிங்ஸ்
நியூஸிலாந்து-192 (கேன் வில்லியம்சன் 47, ஜிம்மி நீஷாம் 33, டிம் சௌதி 32, இஷாந்த் சர்மா 6வி/51, முகமது சமி 4வி/70)
இந்தியா-438 (ரஹானே 118, ஷிகர் தவண் 98, தோனி 68, டிரென்ட் போல்ட் 3வி/99, டிம் சௌதி 3வி/93, நீல் வாக்னர் 3வி/106)
2-வது இன்னிங்ஸ்
நியூஸிலாந்து-680/8 டிக்ளேர் (மெக்கல்லம் 302, ஜிம்மி நீஷாம் 137*, ஜேம்ஸ் வாட்லிங் 124, ஜாகீர்கான் 5வி/170)
இந்தியா-166/3 (கோலி 105*, ரோஹித் சர்மா 31*, டிம் சௌதி 2வி/50)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago