உலக செஸ் போட்டி: கார்ல்சன் அதிரடி வெற்றி

By செய்திப்பிரிவு

உலக செஸ் போட்டியின் 2-வது ஆட்டத்தில் கார்ல்சன் அதிரடியாக ஆடி ஆனந்தை வீழ்த்தினார். ரஷ்யாவின் சூச்சி நகரில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் பரபரப்பான முறையில் டிரா ஆனது. இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில், கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடினார். இந்த ஆட்டத்தில் கார்ல்சன் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கார்ல்சனின் முதல் காய் நகர்த்தல், e4 ஆக (ராஜாவின் முன் உள்ள சிப்பாயை நகர்த்துதல்) இருந்தது. ஆனந்த் பெர்லின் முறைப்படி ஆட ஆரம்பித்தார். 7-வது நகர்த்தலின்போது ஆனந்தின் குதிரையும் கார்ல்சனின் பிஷப்பும் ஆட்டத்தை விட்டு வெளியேறின. 10-வது நகர்த்தலில் இருந்து கார்ல்சன் ஒரு திட்டத்தை உருவாக்கி அதன்படி ஆட்டத்தை நகர்த்த முயற்சி செய்வது தெரிந்தது.

14வது நகர்த்தலில் கார்ல்சன், யானையைக் களத்தில் இறக்கியது (Ra3) பாராட்டும்படி இருந்தது. கார்ல்சன் ஒரு கை பார்க்கத் தயாராகிவிட்டதை அது உறுதிப்படுத்தியது. நடுவில் இரு சிப்பாய்கள் வெளியேறியபிறகு ஆனந்த் சுதாரித்து 17-வது நகர்த்தலில் ஆட்டத்தைச் சமன்படுத்தினார். 19-வது நகர்த்தலில் யானையை ஆனந்தின் ராஜாவின் பக்கம் நிறுத்தி பயமுறுத்தத் தொடங்கினார் கார்ல்சன்.

22-வது நகர்த்தலின் முடிவில் ஆனந்த், கார்ல்சன் இருவரும் தங்களுடைய இரு பிஷப், குதிரைகளை இழந்திருந்தார்கள். அதன்பிறகு, கார்ல்சன் தாக்குதல் ஆட்டத்தை மேலும் தொடர, ஆனந்த் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் தடுப்பாட்டம் ஆட வேண்டியதாயிற்று. 25-வது நகர்த்தலின்போது, கார்ல்சனின் அதிரடி மற்றும் நேரக் குறைவு ஆகிய இரண்டையும் ஆனந்த் எப்படி தாக்குப்பிடிப்பார் என்கிற கேள்வி எழுந்தது.

இருவருடைய ராணிகளை இழக்க ஆனந்த் முயற்சி செய்தபோதும் கார்ல்சன் தவிர்த்துவிட்டார். இரண்டு யானைகள், ஒரு ராணி ஆகிய 3 காய்களையும் வரிசையாக நிறுத்தி கார்ல்சன் மிரட்டலாக ஆடினார். தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்து ஆடி ஆனந்தை நெருக்கடிக்குத் தள்ளிய கார்ல்சன், 35-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE