சச்சின் டெண்டுல்கருக்கு கிரெக் சாப்பல் மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பல் இருந்த போது, அப்போதைய கேப்டன் ராகுல் திராவிடை நீக்க அவர் முயற்சி செய்தார் என்று சச்சின் தனது சுயசரிதை நூலில் கூறியிருப்பதை கிரெக் சாப்பல் மறுத்துள்ளார்.

சச்சின் வீட்டிற்கு ஒருநாள் வந்திருந்த கிரெக் சாப்பல், சச்சினிடம், கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொள்ளுமாறும், திராவிடிடமிருந்து கேப்டன்சியை மாற்றி சச்சினிடம் தர உதவி செய்வதாகவும் அவர் கூறியதைக் கேட்டு தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று சச்சின் குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் சாப்பல் காலக்கட்டத்தில் இந்திய அணி சீரழிவைச் சந்தித்தது என்றும் சச்சின் கடுமையாக தனது சுயசரிதையில் சாடியிருந்தார்.

இதில் திராவிடை நீக்கும் முயற்சி பற்றிய சச்சின் கருத்திற்கு மட்டும் மறுப்பு வெளியிட்டுள்ளார் கிரெக் சாப்பல்:

நான் சொற்போரில் ஈடுபட விரும்பவில்லை. என்னுடைய பயிற்சிக் காலக்கட்டத்தில் நான் ராகுல் திராவிடை நீக்கவோ, சச்சினை கேப்டனாக்கும் முயற்சிகளையோ மேற்கொள்ளவில்லை. எனவே சச்சின் நூலில் இவ்வாறு வந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

என்னுடைய பயிற்சி காலக்கட்டத்தில் சச்சின் வீட்டிற்கு ஒரு முறைதான் சென்றேன். அதுவும் உடற்பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர் ஆகியோருடன் சென்றேன். சச்சின் காயமடைந்து குணமாகும் காலக்கட்டத்தில் இருந்தார். இந்தச் சந்திப்பு அந்த புத்தகத்தில் கூறப்பட்ட காலத்தில் அல்ல, மாறாக அதில் கூறப்பட்டிருப்பதற்கு சுமார் 12 மாதங்களுக்கு முன்பாக சச்சின் வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் நன்றாக, மகிழ்ச்சியுடன் உரையாடினோம், கேப்டன்சி பற்றிய விவகாரம் அங்கு எழவில்லை”

என்று சாப்பல் மறுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE