இந்தியா அதிரடி: 105 ரன்களுக்கு சுருண்டது நியூஸி.

By செய்திப்பிரிவு

இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடியால், இரண்டாவது இன்னிங்ஸில் 105 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆட்டமிழந்தது. இதனால் 407 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் யாரும் வெற்றி பெறலாம் என்ற கட்டத்தை இந்த டெஸ்ட் போட்டி எட்டியுள்ளது.

முன்னதாக நேற்று 130 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி, இன்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. நேற்று அரை சதம் கடந்த ரோஹித் சர்மா 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் நிலைத்து ஆடிய ரஹானே 26 ரன்களோடு வெளியேறினார். அடுத்தடுத்து ஆட வந்த எவரும் பெரிதாக ரன் ஏதும் சேர்க்காமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் இந்தியா 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 301 ரன்கள் முன்னிலை பெற்றது நியூஸி. அணி. ஆனால் ஃபாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட அந்த அணி முடிவு செய்தது.

மிரட்டிய வேகப்பந்துவீச்சு

உணவு இடைவேளைக்கு முன்பே களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ருதர்ஃபோர்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஷமியின் அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஃபுல்டன் ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளிலும் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் எடுத்த வில்லியம்சன், முதல்முறையாக 3 ரன்களுக்கு ஜாகீர் கானின் பந்தில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு முன்பாகவே 17 ரன்களுக்கு 4 விக்கெட்டை நியூஸி. இழந்தது.

அடுத்து வந்த நியூஸி. பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. பந்துவீச்சினால் விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழ்ந்து கொண்டிருக்க, முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் அடித்த மெக்கல்லம் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரவீந்த்ர ஜடேஜாவால் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் யுக்தியால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, ஒரு கட்டத்தில் 100 ரன்கள் எட்டினாலே போதும் என்ற நிலை வந்தது. இறுதியாக 105 ரன்களுக்கு நியூஸி. அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ் டைலர் 41 ரன்கள் எடுத்தார்.

இந்தியத் தரப்பில் முகமது ஷமி, இஷாந்த் சர்மா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜாகீர் கான் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

407 ரன்கள் இலக்கு

407 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, முந்தைய போட்டிகளைப் போல இல்லாமல், முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆடியது. ஷிகர் தவான், முரளி விஜய், இருவரது அணுகுமுறையிலும் வித்தியாசம் தெரிந்தது. எவ்வளவோ ஜாக்கிரதையாக ஆடியும் 8-வது ஓவரில், சவுத்தியின் பந்துவீச்சில், 13 ரன்களுக்கு முரளி விஜய் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய புஜாராவுடன் இணைந்த தவான், பதட்டமின்றி ரன் சேர்ப்பில் இறங்கினார். புஜாராவும் மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டத் தவறவில்லை. இன்றைய நாளின் முடிவில், இந்திய, மேற்கொண்டு விக்கெட் எதையும் இழக்காமல் 87 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவான் 49 ரன்களுடனும், புஜாரா 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 320 ரன்கள் எடுத்தால் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியை வெல்லலாம்.

இன்னும் முழுதாக இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், சுவாரசியமான கட்டத்தை இந்த டெஸ்ட் போட்டி எட்டியுள்ளது. இந்த நிலையிலிருந்து எவரும் வெற்றி பெறலாம் என்பதே நிபுணர்களின் கணிப்பு. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, தோனி, ஜடேஜா என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ள நிலையில் பதட்டமின்றி, பொறுப்பாக சூழ்நிலையை கணித்து ஆடினால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்