தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழக மகளிரின் இலக்கு ‘ஏ’டிவிசன்

By செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு நடைபெறும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஏ’ டிவிசனில் விளையாடத் தகுதி பெறுவதே எங்களின் இலக்கு என தமிழக சீனியர் மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் போஸ் தெரிவித்தார்.

மிசோரமுடன் மோதல்

ஹாக்கி இந்தியா 4-வது தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ‘பி’ டிவிசன் போட்டிகள் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இன்று தொடங்குகின்றன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழக அணி, மிசோரம் அணியை சந்திக்கிறது. கோல் கீப்பர் உமா மகேஸ்வரி தலைமையில் களமிறங்கும் தமிழக அணி முதல் போட்டியை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் உள்ளது.

தமிழக அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வது அதன் நடுகளமும், பின்களமும்தான். குமுதவல்லி, கற்பகம், சித்ரா ஆகிய 3 பேரும் நடுகளத்தில் தமிழக அணிக்கு வலுசேர்க்கின்றனர். இவர்களில் குமுதவல்லி 2 முறை தேசிய சீனியர் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

கோல் கீப்பராக இருக்கும் கேப்டன் உமா மகேஸ்வரி தேசியஅளவிலான சீனியர் போட்டிகளில் 4 முறைக்கு மேல் பங்கேற்றிருக்கிறார். எனவே அவருடைய அனுபவம் தமிழக அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்களத்தில் சுகன்யா, லட்சுமி மற்றும் முன்களத்தில் சித்ரா, சஜினா, கிருத்திகா, சங்கீத வேணி, கருப்பாயி ஆகியோருடன் தமிழக அணி களமிறங்குகிறது.

அதேநேரத்தில் மிசோரம் அணி, நுட்பங்கள் மற்றும் உத்திகளில் தமிழக அணிக்கு இணையாக இருக்காது என்றாலும், ஆக்ரோஷமாக விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. போபால் சூழல் மிசோரம் அணிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் அந்த அணி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஏ’ டிவிசனே இலக்கு

இது தொடர்பாக தமிழக அணியின் பயிற்சியாளர் போஸிடம் கேட்டபோது, அவர் கூறியது: தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஆடவர் சீனியர், ஜூனியர் அணிகள் மற்றும் ஜூனியர் மகளிர் அணி ஆகியவை ‘ஏ’ டிவிசனில் விளையாடி வருகின்றன. சீனியர் மகளிர் அணி மட்டுமே ‘பி’ டிவிசனில் விளையாடி வருகிறது. இந்த முறை ‘பி’ டிவிசனில் விளையாடும் நாங்கள், அடுத்த முறை ஏ டிவிசனில் விளையாடத் தகுதிபெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.

‘பி’ டிவிசனில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே ‘ஏ’ டிவிசனுக்கு முன்னேற முடியும். அதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினால் மட்டுமே எங்களின் ‘ஏ’ டிவிசன் கனவு நனவாகும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

ஒருங்கிணைந்து ஆடுவது முக்கியம்

முதல் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் மிசோரம் அணி வெல்லக்கூடிய அணிதான். உத்திகள் உள்ளிட்ட விஷயங்களில் மிசோரமைவிட தமிழக அணி வலுவானதுதான். இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். இதில் வெல்லும்பட்சத்தில் எஞ்சிய ஆட்டங்களை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். இந்த லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேற வேண்டும். அதன்பிறகு அரையிறுதியில் சந்திக்கும் அணியின் ஆட்டத்திறனை கணித்து அதற்கேற்றவாறு தயாராகி வெற்றி பெற வேண்டும்.

மிசோரமுடனான ஆட்டத்தைப் பொறுத்தவரையில் மைதான சூழலுக்கு ஏற்றவாறு வீராங்கனைகள் தங்களை விரைவாக தகவமைத்துக் கொள்வது முக்கியம். தமிழக அணியில் வலுவான நடுகள வீராங்கனைகள் உள்ளனர். அதேநேரத்தில் முன்கள வீராங்கனைகளும் தனிப்பட்ட முறையில் பார்த்தால் திறமையானவர்கள்தான். எனினும் அவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விளையாடுவது அவசியம்.

எங்களின் கேப்டன் உமா மகேஸ்வரி பலம் வாய்ந்த கோல் கீப்பர் ஆவார். தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் தமிழகத்தின் வெற்றியில் அவர் முக்கியப் பங்கு வகிப்பார் என நம்புகிறோம் என்றார்.

அணி விவரம்

கோல் கீப்பர்கள்: உமா மகேஸ்வரி, சிவரஞ்சனி. பின்களம்: பானு சந்திரா, சுகன்யா, சௌமியா. நடுகளம்: லட்சுமி, குமுதவல்லி, கற்பகம், ஷீபா தனு. முன்களம்: சித்ரா, சஜினா, கிருத்திகா, சங்கீத வேணி, கருப்பாயி, சசிகலா, பெர்சிஸ் ரூபாவதி, சுஷ்மிதா தேவி, அபிநயா.

பயிற்சியாளர் போஸ்

தமிழக அணியின் பயிற்சியாளரான போஸ், 2003-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். அந்தப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை போட்டிக்கான ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சியளித்திருக்கிறார். கடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணிக்காக நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் உதவிப் பயிற்சியாளராக பணியாற்றியிருக்கிறார். பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் ஆசிரியராகப் (பயிற்சியாளர் பட்டயப் படிப்பு) பணியாற்றிய போஸ், ஹாக்கி விளையாட்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

கேப்டன் உமா மகேஸ்வரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்தவரான உமா மகேஸ்வரி, சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சாய் அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடிய இவர், தற்போது தமிழக அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் 4 முறை தமிழகத்தின் சார்பில் பங்கேற்றுள்ள இவர், பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்