சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. இதன்மூலம் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது தமிழகம்.
68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழக அணி, கோவாவை எதிர்கொண்டது. தமிழக வீரர்கள் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இடது எல்லைப் பகுதியில் இருந்து நடுகள வீரர் சாந்தகுமார் “பாஸ்” செய்த பந்தை தமிழக நடுகள வீரர் கார்த்திக் கோலாக மாற்றினார். இதனால் தமிழகம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தமிழகம் 2-1
இதன்பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய தமிழக அணிக்கு 31-வது நிமிடத்தில் 2-வது கோல் கிடைத்தது. கேப்டன் சுதாகரிடம் இருந்து பந்தை வாங்கிய சாந்தகுமார், அதை ஸ்டிரைக்கர் ரீகனை நோக்கி “பாஸ்” செய்தார். இதை சரியாகப் பயன்படுத்தி ரீகன் கோலடிக்க, தமிழகம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதேநேரத்தில் கடுமையாகப் போராடிய கோவா அணிக்கு முதல் ஆட்டத்தின் இஞ்சுரி நேரத்தில் (45+1) கோல் கிடைத்தது. இந்த கோலை அந்த அணியின் கோயல் செக்கியூரா அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் தமிழகம் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
சமன் செய்த கோவா
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் (அதாவது 51 நிமிடத்தில்) கோயல் செக்கியூரா தனது 2-வது கோலை அடிக்க, தமிழகத்தின் ஸ்கோரை சமன் செய்தது (2-2 என்ற கணக்கில்) கோவா. இதன்பிறகு தமிழகம் கடுமையாகப் போராடியபோதும் அடுத்த 30 நிமிடங்களில் கோல் கிடைக்கவில்லை.
தமிழக அணி ஒரேயொரு ஸ்டிரைக்கரை (ரீகன்) மட்டுமே நம்பியிருந்த நிலையில், கடுமையாகப் போராடியபோதும் கேப்டன் சுதாகர் கொடுத்த “பாஸை” ரீகனால் கோலாக மாற்ற முடியவில்லை. மேலும் ரீகன் “பாஸ்” செய்த பந்தை வாங்கிச் சென்று கோலடிக்கவும் ஆள் இல்லை. இதையடுத்து கடைசி 15 நிமிடத்தில் தமிழக அணியில் இரு மாற்றங்களை செய்தார் பயிற்சியாளர் ரஞ்சித்.
15 நிமிட ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில் சாந்தகுமாருக்குப் பதிலாக அசோக் குமாரையும், ஆட்டம் முடிவதற்கு கடைசி 6 நிமிடங்கள் இருந்த நிலையில் கார்த்திக்கிற்குப் பதிலாக மற்றொரு ஸ்டிரைக்கரான அமீருதீனையும் மாற்று ஆட்டக்காரர்களாக களமிறக்கினார். அதற்குப் பலனும் கிடைத்தது.
ஆட்டம் டிராவில் முடியும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் “இஞ்சுரி” நேரத்தில் (90+1) தமிழக அணி கோல் அடித்தது. அமீருதீன் “பாஸ்” செய்த பந்தை அசோக் குமார் கோலாக மாற்றினார். இதன்மூலம் தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.
அற்புதமான ஆட்டம்: ரஞ்சித்
வெற்றிக் களிப்பில் இருந்த தமிழக பயிற்சியாளர் ரஞ்சித்திடம் அணியின் செயல்பாடு குறித்து கேட்டபோது, “அனைத்து வீரர்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
சில கோல் வாய்ப்புகளை கோட்டைவிட்டாலும், இரு கோல்கள் அடித்து, பின்னர் இரு கோல்களை வாங்கி, கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி கண்டிருக்கிறோம்.
முதல் ஆட்டத்தில் ரயில்வேயிடம் தோற்றதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். இப்போது கோவாவை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்பை தக்கவைத்துக் கொண்டதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.
அடுத்ததாக பஞ்சாபை சந்திக்க இருக்கிறோம். எங்களின் முழுக்கவனமும் பஞ்சாபுடனான ஆட்டத்தின் மீது இருக்கிறது. அதன்பிறகுதான் மேற்கு வங்கத்துடனான கடைசி ஆட்டத்தைப் பற்றி சிந்திப்போம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago