ஆசிய விளையாட்டு: பின்னடைவின் பின்னணி என்ன?

By ஏ.வி.பெருமாள்

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் 8-வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியோடு ஒப்பிடும்போது பதக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல, பதக்கப் பட்டியலிலும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது இந்தியா. இந்த முறை 8 பதக்கங்கள் குறைவாகப் பெற்றிருக்கும் இந்தியா, பதக்கப் பட்டியலில் இரு இடங்கள் பின்தங்கியிருக்கிறது.

இது இந்திய விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதையே காட்டியிருக்கிறது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றிருக்கிறது என்பதைத் தவிர ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெருமை கொள்வதற்கு பெரிய அளவில் ஏதும் இல்லை.

விளையாட்டுத் துறையில் ஆசிய கண்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக திகழும் சீனா 151 தங்கம், 108 வெள்ளி, 83 வெண்கலம் என மொத்தம் 342 பதக்கங்களைக் குவித்துள்ளது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற 36 வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வென்றிருக்கிறது. சுமார் 5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியா 79 தங்கம், 71 வெள்ளி, 84 வெண்கலம் என 234 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், சுமார் 13 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஜப்பான் 47, 76, 77 என மொத்தம் 200 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

மானம் காத்த கபடி அணிகள்

இதில் 2-வது இடத்தைப் பிடித்திருக்கும் தென் கொரியாவின் மக்கள் தொகையை தமிழகத்தின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் தென் கொரியாவின் மக்கள் தொகை 2 கோடி குறைவுதான். ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 108, தென் கொரியா வென்ற தங்கப் பதக்கம் 79, ஆனால் இந்தியா வென்ற மொத்த பதக்கமே 57 தான்.

அதுவும் கடைசி நாளில் கபடியில் இரு தங்கப் பதக்கம் கிடைக்காவிட்டால் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் நிலை மிக மோசமாக அமைந்திருக்கும். அதாவது முதல் 10 இடங்களைக்கூட பிடித்திருக்க முடியாது. உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள்கூட இந்தியாவை முந்தியிருக்கும். மொத்தத்தில் ஆடவர், மகளிர் கபடி அணியினர் இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

பதக்கப் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளோடு இந்தியாவின் நிலையை ஒப்பிட்டால் பாமரனுக்கும் மனதில் தோன்றும் ஒரே கேள்வி, உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவால் ஆசிய கண்டத்துக்குள் நடைபெறும் போட்டியில்கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லையே ஏன்?

136 கோடி மக்கள் தொகைக் கொண்ட சீனா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கிறது. ஒலிம்பிக்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுகிறது. ஆனால் 125 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் 5 இடங்களைக்கூடவா பிடிக்க முடியவில்லை? இந்தியாவில் திறமையான வீரர்களே இல்லையா? இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன என பல கேள்விகள் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கப் பட்டியலை பார்க்கும்போது எழுகிறது.

சாதிக்க முடியாதது ஏன்?

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி, உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இந்தியாவால் ஏன் ஜொலிக்க முடியவில்லை என்பதற்கு ஒன்றல்ல, இரண்டல்ல… ஏராளமான காரணங்களை பட்டியலிடலாம். போதிய உள்கட்டமைப்பு வசதிகள், விளையாடுவதற்கு பெரிய அளவில் மைதானங்கள் இல்லை. சர்வதசே தரத்தில் மைதானங்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. அப்படியே இருந்தாலும் அவை வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் திறமையான வீரர்களுக்கும்கூட அங்கே பயிற்சி பெற அனுமதி மறுக்கப்படுகிறது.

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றால் ரூ.1 கோடி, 50 லட்சம் என அறிவிக்கும் மத்திய, மாநில அரசுகள், தலைசிறந்த வீரர்களை அடையாளம் காணவும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வீரர்கள் தேர்வில் பாரபட்சம், வீரர்கள் நலனில் அக்கறையின்றி இருக்கும் தேசிய மற்றும் மாநில விளையாட்டு சங்கங்கள், பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் அடித்துக் கொள்ளும் நிர்வாகிகள், நிதியுதவி அளிப்பதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கூறி, விளையாட்டு அமைப்புகளை கண்காணிக்கத் தவறும் மத்திய, மாநில அரசுகள் என இந்திய விளையாட்டுத் துறையில் இருக்கும் பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சீனாவின் வெற்றிக்கு பின்னால்…

ஒலிம்பிக்கிலும், ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சீனா ஜொலிக்கிறது என்றால் அங்குள்ள வீரர்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கின்றன. நல்ல சூழல்கள் காணப்படுகின்றன. 1990-களுக்கு முன்பு வரை சீன விளையாட்டுத் துறையில் பெரிய வளர்ச்சி இல்லை. மற்ற நாட்டு வீரர்களைப் போலத்தான் சீனர்களும் அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருந்தார்கள்.

விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கை கேள்விக்குறியாகும் சூழல் இருந்ததால், சீன வீரர்களில் பெரும்பாலானோர் உச்சகட்ட பார்மில் இருந்தபோதே ஓய்வு பெற்றார்கள். ஆனால் 1990-களில் சீன விளையாட்டுத் துறையில் நிகழ்ந்த தொழில்முறை புரட்சி, சரிவிலிருந்த விளையாட்டுத் துறையை தூக்கி நிறுத்தியது.

தொழில்முறையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு முதன்முதலில் அச்சாரம் போட்டது சீன கால்பந்துதான். அதைத் தொடர்ந்து கூடைப்பந்து, வாலிபால் என பல விளையாட்டுகள் தொழில்முறையை பின்பற்றத் தொடங்கின. இந்த தொழில்முறை போட்டிகள் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தன.

அதன் காரணமாக விளையாட்டு சங்கங்கள் சுயமாக வருவாய் ஈட்டும் நிலை ஏற்பட்டது. கிளப் அளவிலான போட்டிகள் பிரபலமடைந்தன. தொழில்முறை லீக் போட்டிகள் நடைபெறத் தொடங்கின. இந்தப் போட்டிகள் ரசிகர்களை மட்டுமல்ல, விளம்பரதாரர்களையும் கவர்ந்தன. கிளப் மாறுதல், வர்த்தக ரீதியிலான போட்டிகள், டி.வி.ஒளிபரப்பு உரிமை என வருவாய் கொழிக்க ஆரம்பித்தன. சீன வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

தொழில்முறை புரட்சியால் அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்திருக்கும் சீனா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. 2008 ஒலிம்பிக்கை நடத்திய சீனா அதில் முதல் இடத்தைப் பிடித்தது.

சீனாவைப் போல் இந்திய விளையாட்டுத் துறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு விளையாட்டு சங்கங்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள விளையாட்டு சங்கங்களின் நிலை என்ன?

ஊட்டச்சத்து குறைபாடு

இந்தியாவில் உள்ள வீரர்களுக்கு முறையான ஊட்டச்சத்துகூட கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜூனியர் உலக ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது. ஆனால் அந்த அணியில் இடம்பெற்றிருந்த 7 பேருக்கு ரத்தசோகை (அனீமியா) இருப்பதாக அப்போதைய தலைமை ஹாக்கி பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸ் கூறியபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

அறிவியல் ரீதியான அணுகுமுறை மற்றும் முறையான உணவுமுறைகள் இல்லாததே அதற்குக் காரணம். இது நமக்கு தெரிந்தது. ஆனால் நமக்கு தெரியாமல் பல வீரர்கள் பல்வேறு குறைபாடுகளுடன் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நாம் எப்படி சர்வதேச போட்டிகளில் பலம் வாய்ந்த அணிகளுடன் போட்டிபோட முடியும்?

(நாளை பார்க்கலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்