ரோஹித் சர்மாவை முன் வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகள் ஒரு பார்வை

கொல்கத்தாவில் இன்று இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய சதங்கள் பற்றிய ஒரு பார்வையே இந்தப் பதிவு.

ஒருநாள் கிரிக்கெட்டில் 170 ரன்களுக்கும் மேல் எடுப்பது என்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்ட நிலையில். ஒருநாள் கிரிக்கெட்டின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இத்தகைய பெரிய சதங்களை எடுத்த வீரர்கள் பற்றி பார்ப்போம்:

1975 உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் என்பது அவ்வளவு பிரபலமடையவில்லை. அப்போது 60 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகள் அமைந்தன. அதுவும் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும்தான்.

அதன் பிறகு உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தை விட்டு வெளியே வரத் தொடங்கியதும் 50 ஓவர்கள் போட்டியாகவே நடத்தப்பட்டது.

1970-களில் குறிப்பாக 1975 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன் முதலாக 170 ரன்களைக் கடந்த பேட்ஸ்மென் நியூசி. அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான கிளென் டர்னர். இவர் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 171 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். இதற்காக அவர் 201 பந்துகளை எதிர்கொண்டார். அதில் 16 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்தார்.

1971 உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சிலபல ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடைபெற்றன. 1979 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விவ் ரிச்சர்ட்ஸ் எடுத்த ஸ்கோர் 153 ரன்கள். அந்த உலகக் கோப்பையில் இதுவே அதிகபட்ச ரன்கள். கிளென் டர்னர் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை.

ஆனால் 1983 உலகக் கோப்பை போட்டிகளில்தான் இந்திய வீரர்களால் சாதிக்க முடியும் என்பது கபில்தேவினால் உருவானது. அவர் 18 ஜூன், 1983-ல் டர்ன்பிரிட்ஜ் வெல்ஸில் ஜிம்பாவே அணிக்கு எதிராக 175 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து கிளென் டர்னர் ரெக்கார்டை முறியடித்தார். 138 பந்துகளைச் சந்தித்த கபில்தேவ் 16 பவுண்டரிகள் 6 சிக்சர்களை அதில் விளாசியிருந்தார். இந்த இன்னிங்சின் மிகப்பெரிய நம்பமுடியாத விஷயம் என்னவெனில் பந்துகள் பயங்கரமாக ஸ்விங் ஆகிக்கொண்டிருந்தது.’

கபில்தேவ் களமிறங்கும் போது இந்தியா 9/4 என்று சரிவு கண்டது. அவர் இறங்கி 2 பவுண்டரிகளை அடித்த பிறகு ஸ்கோர் 17 ரன்களை எட்டிய போது 5-வது விக்கெட் விழுகிறது. 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் சரிவு. கபில்தேவ் அதன் பிறகு 175 ரன்களை விளாசியது அனைத்து காலத்திற்குமான தலை சிறந்த ஒருநாள் சர்வதேச இன்னிங்ஸ் என்றால் அது மிகையான கூற்றல்ல. இந்த இன்னிங்ஸ்தான் கபிலையும் இந்திய அணியையும் ஒருநாள் கிரிக்கெட்டில் உலக அணிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி பெரிய அச்சுறுத்தல் என்பதை மற்ற அணிகள் உணரவைத்த இன்னிங்ஸ் கபிலுடையது.

1983-ற்குப் பிறகும் கூட 170 ரன்களுக்கும் மேலான ஸ்கோர் என்பது நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்தது. ஆனால் விவ் ரிச்சர்ட்ஸ் 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்களைக் குவித்தது நீண்ட நாட்களுக்கு உடைக்க முடியாத ஒருநாள் சர்வதேச சாதனையாகவே இருந்தது. ரிச்சர்ட்ஸே தன் சாதனையை முறியடிக்க 1987 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது இலங்கைக்கு எதிராக அவர் 181 நாட் அவுட் என்று முடித்தார்.

அதன் பிறகு 13 ஆண்டுகள் சென்ற பிறகே இந்தியாவுக்கு எதிராக சென்னையில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 194 ரன்களை அடித்து விவ் ரிச்சர்ட்ஸை முறியடித்து உலக சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.

2009ஆம் ஆண்டு ஜிம்பாவே வீரர் கோவெண்ட்ரி வங்கதேசத்திற்கு எதிராக 194 ரன்கள் எடுத்து சமன் செய்யவே முடிந்தது.

ஆனால் 24 பிப்ரவரி, 2010-ல் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர், பலமான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குவாலியரில் முதன் முதலில் ஒருநாள் சர்வதேச இரட்டைச் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.

அதற்கு ஓராண்டுக்குப் பிறகு சேவாக் 219 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் 209 ரன்கள் எடுத்தார். இப்போது ரோகித் 2014ஆம் ஆண்டு 264 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

கள வியூகத்த்தில் ஏற்பட்டுள்ள புதிய விதிமுறைகளால் இத்தகைய இன்னிங்ஸ்கள் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. 50 ஓவர்களுக்கும் பீல்டிங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது கபில்தேவ் 175 அடித்த காலத்தில் கிடையாது.

ஆனாலும்... பெரிய இன்னிங்ஸ்களை விளையாட தனி எனெர்ஜியும், வெறியும் தேவை, அந்த விதத்தில் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு ரோஹித் செய்த இந்த உலக சாதனையை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

இலங்கை அணியும் 2 மாத காலம் வலைப்பயிற்சி இல்லாமல்தான் இந்தத் தொடரில் திடீரென பங்கேற்றது. ஆனாலும் அவர்களால் ரோஹித் காட்டிய எனெர்ஜிக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனாலும் அனைத்துப் பிட்ச்களிலும் இதே எனெர்ஜியுடன் அவர் விளையாடினால் சிறப்பாக இருக்கும், இந்த இன்னிங்ஸ், 2015 உலகக் கோப்பை போட்டிகளில் இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதனை சுகமான சுமையாக ரோஹித் சர்மா சுமப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்