ஓய்வு குறித்து சரியான நேரத்தில் சிந்திப்பேன்: தோனி திட்டவட்டம்

விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக வெற்றிகளை கொண்டு வந்து கொண்டிருப்பதினால் தோனியிடம் மீண்டும் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் அவர் தனக்கேயுரிய புன்னகையுடன் நிதானமாக அக்கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி புறப்படும் தருணத்தில் தோனியிடத்தில் மீண்டும் ஓய்வு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தோனி, “இந்தக் கணத்தில் வாழும் நபர் நான். இப்போது எனது கவனம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்தான் உள்ளது. பிறகு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர். எனவே நான் ஓய்வு குறித்து சரியான தருணத்தில் சிந்திப்பேன்” என்றார்.

தோனியின் பேட்டிங் பார்ம் பற்றி தற்போது நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன, விஜய் ஹசாரே கோப்பையின் போது அவரது பேட்டிங் பற்றிய கேள்விகள் தீவிரமடைந்தன.

இந்நிலையில் விராட் கோலியை அனைத்து வடிவங்களுக்கும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வட்டாரங்களின் ஒருசில பகுதிகளில் குரல்கள் எழுந்து வருவதால் தோனியிடம் ஓய்வு பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE