மும்பை களத்தில் சச்சின்: வலுவான நிலையில் இந்தியா

By செய்திப்பிரிவு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 38 ரன்களுடன் களத்தில் இருக்க, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

மும்பை டெஸ்ட் போட்டியில் இன்று (வியாழக்கிழமை) முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது தனது கடைசி போட்டியின் களத்தில் வீற்றிருந்த சச்சின் டெண்டுல்கர் 49 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். அவருடன் எதிர்முனையில் இருந்த புஜாரா 34 ரன்கள் சேர்த்திருந்தார்.

துவக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் 43 ரன்களிலும், தவாண் 33 ரன்களிலும் ஷில்லிங்ஃபோர்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

ஓஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது மே.இ. தீவுகள்

முன்னதாக, இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ஓஜா, அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்துவீச்சில், மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 182 ரன்களில் சுருண்டது.

அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவெல் 48 ரன்களையும், பிராவோ 29 ரன்களையும் எடுத்தனர்.

சாமுவேல்ஸ் 19 ரன்களையும், சந்திரபால் 25 ரன்களையும் சேர்த்தனர்; டியோநரேன் 21 ரன்களை எடுத்தார். ரம்தீன் ஆட்டமிழக்காமல் 12 ரன்கள் சேர்த்தார். சமி, ஷில்லிங்ஃபோர்டு, பெஸ்ட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்கவில்லை. கேபிரியல் ஒரு ரன் எடுத்தார்.

இந்திய அணியின் சுழலில் சிக்கித் தவித்த மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 55.2 ஓவர்களில் 182 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீச்சிய ஓஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், முகமது சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

அஸ்வின் 100 விக்கெட்டுகள்

டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்துவதில் அதிவிரைவு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார், சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின். மும்பை டெஸ்டில் சமியின் வீக்கெட்டை கைப்பற்றினார் அஸ்வின். அது, டெஸ்ட் போட்டிகளில் அவரது 100-வது விக்கெட் ஆகும்.

இதன்மூலம் 18 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் விக்கெட் வீழ்த்துவதில் அதிவிரைவு பந்துவீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.

முன்னதாக, எரபள்ளி பிரசன்னா 20 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் என்ற உச்சத்தை எட்டியிருந்தார். அவரது சாதனையை இப்போது அஸ்வின் முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், ஆல்ரவுண்டர் பிரிவில் உலக அளவில் அஸ்வின் முதலிடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.

முன்னாள் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே 21 டெஸ்ட்களிலும், சுபாஷ் குப்தா, பகவத் சந்திரசேகர் மற்றும் ஓஜா ஆகியோர் 22 போட்டிகளிலும் தங்களது 100 விக்கெட்டுகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.

சச்சினுக்கு 'ஒயிட்வாஷ்' பரிசு?

இந்திய கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு இது 200-வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியோடு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதனால் இந்தப் போட்டி அவருக்கு மட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த உணர்ச்சிபூர்வமான தருணமாகும்.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று மேற்கிந்தியத் தீவுகளை ஒயிட் வாஷ் ஆக்கி சச்சினுக்கு பிரமாண்டமான முறையில் பிரியா விடை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்த டெஸ்ட் இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியாக இருந்தாலும், சச்சின் மீதுதான் அனைவருடைய கவனமும் உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாகப் பார்க்கப்படும் சச்சின் தான் விளையாடிய காலம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய ரசிகர்களை மட்டு மின்றி உலக ரசிகர்களையும் வியக்க வைத்தவர்.

1989-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, இந்திய அணியில் ஜாம்பவான்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பியதோடு, இனி யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு விடைபெற இருக்கிறார் சச்சின்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்